கொங்கு மண்டல சதகங்கள்

கொங்கு மண்டல சதகங்கள் கார்மேகக் கவிஞர், வாலசுந்தரக் கவிராயர், கம்பநாதசாமி ஆகியோர் இயற்றிய மூன்று சதக நூல்களைக் குறிக்கும்.[1]

சதகம்

சதகம் என்பது வடமொழிச் சொல். நூறு என்பது இதன் பொருள். சதம் என்றால் வடமொழியில் நூறு என்று பொருள்படும். சதம் என்ற சொல்லுக்கு இடையே 'க' சேர்ந்துள்ளது. சதகம் என்பது நூறு என்ற எண்ணிக்கையில் அமைந்த பாடல்களைக் கொண்ட தமிழ் இலக்கிய நூல். சதக இலக்கியங்களின் கருப்பொருளும் நோக்கங்களும் பற்பல. சதகம் தனியொரு சிற்றிலக்கியமாக வளர்ச்சி பெற்ற காலம் பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டு ஆகும். கொங்கு மண்டலச் சதகம் போன்றனவற்றை வரலாற்று சதக நூல்களாகப் பகுப்பர். இறைவனைப் போற்றிப் பாடப்பட்ட சாதக நூல்கள் போற்றி என்ற சதக நூல் வகையில் பகுப்பர். நீதி கூறும் சதகங்கள் நீதி நூல் வகையில் பகுக்கப்படும்.

கொங்கு மண்டல சதகங்கள்

கொங்கு மண்டல சதகம் என்பது கொங்கு மண்டலத்தைப் பற்றிப் பாடிய சதகம். சதகம் என்பது நூறு செய்யுட்களாற் பாடுவது.

"விளையுமொருபொருண் மேலொருநூறு, தழையவுரைத்தல் சதகமென்ப"

என்பது இலக்கண விளக்கப்பாட்டியல் - 86.

சதகம் பல பொருள் பற்றிப் பாடப்பெறும். இது வரலாறு பற்றிப் பாடப்பெறும் சதகவகையைச் சார்ந்தது. இந்நூலின்கண் வரும் முதல் மூன்று பாடல்களும் பாயிரமாகவமைந்த ஆசிரிய விருத்தங்கள், நூலுக்குரியனவாகப் பாடப்பெற்ற பாடல்கள் நூற்றொன்றும் கட்டளைக் கலித்துறைகள்.

"வடித்தமிழ் நூலையாசான் வாலசுந்தரம் யான் சொன்னேன்" எனப் பாயிரம் கூறுவதால் இந்நூலாசிரியரின் பெயர் வாலசுந்தரக்கவிஞர் எனத் தெரிகின்றது.

"இம்முடிவாரணவாசியெங்கள் வடமலை முன்னவன்" என விசயமங்கலத்தில் வாழ்ந்த வாரணவாசி முதலியோரை 'எங்கள்' என உரிமை பாராட்டிக் கூறுதலின் இந்நூலாசிரியர் குறும்பு நாட்டு விசயமங்கலத்தைச் சார்ந்தவரெனத் தெரிகிறது.

இந்நூல்(கொங்கு மண்டல சதகம்) முகப்பில் விநாயகர் காப்புக் கூறுதலின் ஆசிரியர் சைவ சமயத்தினரென்பது துணிபு. ஆசிரியர் வெண்ணைநல்லூர்ச் சடையன் (சடையப்ப வள்ளல்) வாழ்ந்த காலமாகிய பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனப்புலப்படுகின்றது. கொங்கு மண்டல சதகம் 7ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தது எனவும் கருதப்படுகின்றது

சதகம் வரலாற்றை கூறுவதால் 13, 17ஆம் நூற்றாண்டுகளிலும் கார்மேகக் கவிஞர், கம்பநாதசாமி ஆகியோராலும் கொங்கு மண்டல சதகம் பாடப்பெற்றது. ஆக "கொங்கு மண்டல சதகம்" என்பது கார்மேகக் கவிஞர்,[2] வாலசுந்தரக் கவிராயர், கம்பநாதசாமி ஆகியோர் இயற்றிய கொங்கு மண்டல சதக நூல்கள் மூன்றினையும் கொண்டதாகும்.

13ஆம் நூற்றாண்டில் கார்மேகக்கோனார் கொங்கு மண்டல சதகத்தை எழுதினார். கொங்கு நாட்டு பிரிவுகளையும், ஊர்தொகையையும் இதில் விரிவாகக் கூறினார். 7 ஆம் நூற்றாண்டிலேயே இப்பிரிவு இருந்தது என்றாலும் 13ஆம் நூற்றாண்டினது விரிவாக உள்ளது

'கொங்கு மண்டல சதகங்கள்' என்னும் பெயரில் மூன்று நூல்கள் கிடைத்துள்ளன. திரு. முத்துசாமிக் கோனார் அவர்கள் கார்மேகக்கவிஞரின் கொங்கு மண்டல சதகத்தை உரையுடன் வெளியிட்டார். நூறு கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களாற் கொங்கு மண்டலச் சிறப்பை உணர்த்தக் கருதிப் பாடப்பட்ட ஒரு நூல். திரு. வே.ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் அவர்கள் 1971ஆம் ஆண்டில் உரைவிளக்கக் குறிப்புகளுடன் வாலசுந்தரக் கவிராயரின் கொங்கு மண்டல சதகத்தை வெளியிட்டுள்ளார்கள். இப்பொழுது கம்பநாதசாமிகளின் கொங்கு மண்டல சதகமும் கிடைத்துள்ளது.

கொங்கு நாட்டின் அரிய செய்திகள்

கொங்கு நாட்டின் எல்லைகள், நாடுகள், மலைகள், ஆறுகள், தலங்கள் என நிலவியல் நிலையில் கொங்குநாட்டின் அத்துணைச் செய்திகளையும் இந்நூல்கள் தொகுத்துத் தந்துள்ளன. காவிரியின் உற்பத்தியிலிருந்து தொடங்கி, இறைவன் எழுந்தருளியுள்ள தலங்கள் குறித்தும், அந்நாட்டில் வாழ்ந்த புலவர்கள் புரவலர்கள் குறித்தும் அரியபல செய்திகள் காணக்கிடக்கின்றன. இந்நூல்களில் காணப்பெறும் பல்வேறு செய்திகளால் கொங்கு நாட்டின் பண்பாடும், வரலாறும் பழக்கவழக்கங்களும் இனிது புலனாகின்றன.

வரலாற்று ஆவணங்கள்

அக்காலத்தில் வரலாறு என்பது புராணக் கதைகள், வாய்மொழிக் கதைகள் உள்ளிட்ட அனைத்தையும் தொகுப்பது எனக் கருதப்பட்டுள்ளது. அவ்வகையில் கொங்கு நாடு தொடர்பான புராணக் கதைகள், இலக்கியம் முதலியவற்றைத் தொகுத்துச் செய்யுள் வடிவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், சதக நூல்களில் கிடைக்கப்பெறும் சேதிகளுக்கு ஏற்ப கல்வெட்டுகள், செப்பேடுகள், என அனைத்தும் மிக சரியாக துணை நிற்பதால், இதனை புராணமாகக்கொள்ளாமல் முதல் நிலை வரலாற்று மூலம் எனக் கொள்வதில் வரலாற்று ஆசிரியர்கள் கொள்கின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கொங்கு_மண்டல_சதகங்கள்&oldid=19865" இருந்து மீள்விக்கப்பட்டது