கைக்கிளை (திணை)

கைக்கிளை என்பது தொல்காப்பியர் காட்டும் ஏழு திணைகளில் ஒன்று.[1] தலைவன் தலைவிக்கு இடையே உள்ள ஒழுக்கம் 'கை' எனப்படும். இந்த ஒழுக்கம் இருவர் மனத்திலும் ஒத்திராமல் கிளைத்துப் பிளவுபட்டு இருக்குமானால் அது கைக்கிளை. (கையில் கிளை - என்று ஏழாம் வேற்றுமைத் தொகையாய் வருவதால் இரு சொற்களுக்கும் இடையே ஒற்று மிக்கது)

கை என்னும் சொல் தமிழில் ஒழுக்கத்தைக் குறிக்கும். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றான 'கைந்நிலை' என்னும் நூல் ஐந்தொழுக்கப் பண்பாட்டைப் பற்றிக் கூறுகிறது. ஒழுக்கத்தில் நிற்பது என்னும் பொருளைத் தரும் தொடர் இது

கைக்கிளை ஒழுக்கம் சிறுபான்மையோர் ஒழுக்கம் என்று தொல்காப்பியத்துக்கு உரை எழுதும் இளம்பூரணர் குறிப்பிடுகிறார். [2]

'கைகோள்' என்பது ஒழுக்கத்தைக் கைக்கொள்ளல் என்னும் பொருளைத் தருவதால் இலக்கண நெறியில் இது இரண்டாம் வேற்றுமைத் தொகை. இரண்டாம் வேற்றுமைத் தொடரில் அஃறிணைச் சொல் முன்னிற்குமானால் இடையில் ஒற்று மிகுவதில்லை. எனவே இது கைகோள் என நின்றது. கைகோளைக் களவு, கற்பு என இரு வகையாகப் பகுத்துப் பார்ப்பது தமிழ்நெறி.

தொல்காப்பியர் விளக்கம்

ஐந்திணை ஒழுக்கத்தைத் தொல்காப்பியர் "அப்பொடு புணர்ந்த ஐந்திணை" என்று குறிப்பிடுகிறார்.[3] எனவே கைக்கிளையும், பெருந்திணையும் அன்பொடு புணராதவை எனத் தெளிவாகிறது. தொல்காப்பியர் தம்முடைய நூற்பாவின் வழி,

“காமம் சாலா இளமை யோள்வயின்

ஏமம் சாலா இடும்பை எய்தி

நன்மையும் தீமையும் என்றுஇரு திறத்தான்

தன்னொடும் அவெளாடும் தருக்கிய புணர்த்துச்

சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்

புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே”

(தொல்காப்பியம்- பொருளதிகாரம்- அகத்திணையியல் -நூற்பா -53

கைக்கிளை நிகழ்வு [4]

கைக்கிளை பெருந்திணை [5]
காமத்திற்கு பொருத்தமற்ற இளையவளிடத்தில் காதல் கொண்டு அதன் வழி தலைவன் துன்பம் கொள்கிறான் தான் விரும்பும் தலைவியை மணக்க இயலாத நிலை ஏற்படும்போது தலைவன் மடல் ஏறுகிறான்.
நன்மை - புகழ்தல், தீமை- -பழித்தல் என்ற இருவழியிலும் தலைவியைப் பற்றி தலைவன் பேசுதல் இளமை நீங்கிய நிலையில் கொள்ளும் காதல்
தனக்கும் அவளுக்கும் ஒத்த குணங்களைச் சேர்த்துச் சொல்வான். தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் வருந்தியிருக்கும் தலைவியைத் தோழி தேற்றுவாள்.
அவளோ பிறரோ கேட்காதபடி அவன் பேசுவதால் அவன் சொல்லிற்கு மறுமொழி சொல்லாது தானே சொல்லி இன்புறுவான். காமம் மிகுந்துவிடுதலால் செய்யும் முறை கடந்த செயல்களைக் குறிப்பது.

யாப்பருங்கலம் விருத்தி

இந்த உரையில் கைக்கிளை பெருந்திணை இரண்டும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

காதலன் காதலி இருவருக்கும் இடையே உடலுறவு இல்லாமையால் இது ஒருவரிடம் மட்டும் தோன்றும் காம உணர்வாகிய கைக்கிளை. [6]

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் பொருளதிகாரம் 1
  2. "பொருள் அதிகாரம், இளம்பூரணர் உரை". தொல்காப்பியம். சாரதா பதிப்பகம். 2010. பக். 404. 
  3. களவியல் 1
  4. நூற்பா 55
  5. நூற்பா 56
  6. கைக்கிளை தானே காணுங்காலைக்
    கூட்டம் இல் கிளவிக் கைக்கிளை அகப்புறம்.
    மேற்கோள் நூற்பா
"https://tamilar.wiki/index.php?title=கைக்கிளை_(திணை)&oldid=13300" இருந்து மீள்விக்கப்பட்டது