கே. முத்தையா

கே. முத்தையா (14 சனவரி 1918 – 10 சூன் 2003) விடுதலைப் போராட்ட வீரர். பொதுவுடைமைப் போராளி; இதழாளர்; எழுத்தாளர்; இலக்கியப் பேச்சாளர்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர்.[1] இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பல ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்தவர் ஆவார்.

கே. முத்தையா
இயற்பெயர்/
அறியும் பெயர்
கே.முத்தையா
பிறப்புபெயர் முத்தையா
பிறந்ததிகதி (1918-01-14)14 சனவரி 1918
பிறந்தஇடம் குருவிக் கரம்பை, தஞ்சை மாவட்டம்
இறப்பு சூன் 10, 2003(2003-06-10) (அகவை 85)
பணி இதழாளர்
தேசியம் இந்தியர்
கல்வி இளங்கலை (பொருளாதாரம்)
அறியப்படுவது அரசியல் கட்டுரைகள்,
பெற்றோர் கருப்பையாத்தேவர், வள்ளியம்மை
துணைவர் யமுனா
பிள்ளைகள் மல்லிகா, வனிதா, இளங்கோ

பிறப்பு

தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி கிராம ஊராட்சிக்குட்பட்ட முடப்புளிக்காடு உள்ளிட்ட 11 கிராமங்களிக்கு கிராம முன்சீப் ஆக வாழ்ந்த கருப்பையாத்தேவர் – வள்ளியம்மை இணையருக்கு முதலாவது குழந்தையாக 1918 சனவரி 14ம் திகதி அன்று பிறந்தவர் முத்தையா.[2][3]

கல்வி

முத்தையா தன்னுடைய ஆரம்பக் கல்வி முடப்புளிக்காட்டில் கீற்றுக் கொட்டகைப் பள்ளி ஒன்றில் தொடங்கினார். அந்தப் பள்ளி தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத இதர சாதியினர் மட்டுமே படிக்கும் பள்ளியாகும். பிராமணர்களுக்கென்று தனியாகப் பள்ளி இருந்தது, அதில் இதர சாதியினர் படிக்க முடியாது. முத்தையா ஐந்தாம் வகுப்பு வரை அங்கே பயின்றார். ஐந்தாம் வகுப்பு தேறிய முத்தையாவை அவரது தந்தை அதற்கு மேல் படிக்கவைக்க மறுத்துவிட்டார். வீட்டில் உள்ள மாடுகளை மேய்த்து வண்டி ஓட்டினால் வருமானம் வரும் வீட்டு வேலைகளுக்குச் சம்பள ஆள் வைக்க வேண்டியதில்லை என்று முடிவெடுத்து பிடிவாதமாக இருந்தார். ஆனால் முத்தையா தனது சிறிய தந்தை கருப்பையாத் தேவர், அத்தை வீரம்மாளின் பிடிவாதத்தினால் அண்ணன் முத்தையாவின் தந்தை கருப்பையாத் தேவர், நிபந்தனையுடன் படிக்க வைக்க ஒத்துக்கொண்டார். முத்தையன் காலையில் மாட்டுவண்டியை சுத்தம் செய்ய வேண்டும், மாடுகளை மேய்க்க வேண்டும் இந்த இரண்டு பணிகளைச் செய்துவிட்டுத்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இதற்கு உடன்பட்ட முத்தையா பேராவூரணி ஜில்லா போர்டு ஆரம்ப பள்ளியில் சேர்ந்து தினமும் இரண்டரை கிலோமீட்டர் நடந்தே சென்று படித்தார்.[3] தொடர்ந்து பட்டுக்கோட்டை ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் பல இன்னல்களுக்கு மத்தியில் முடித்தார்.

அரசியல் பணி

மாணவத் தலைவர்

1932 ஆம் ஆண்டில் பெரியார் சோவியத்து நாட்டில் சுற்றுப்பயணம் முடித்துப் பட்டுக்கோட்டையில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு சோசலிசத்தின் பால் ஈடுபாட்டை முத்தையாவிற்கு ஏற்படுத்தியது. 1932 ஆம் ஆண்டு பேராவூரணி தேசவிடுதலைத் தியாகி வீராச்சாமித் தேவர் தலைமையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் முத்தையா தன் மாணவ நண்பர்களுடன் சென்று மறியல் செய்தார்.[3] அதன் பின்னர் தன் நண்பர்களோடு சேர்ந்து அன்னியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்தார். முடப்புளிக்காட்டில் நடைபெறும் சில விழாக்களுக்குச் சென்று வரும் தந்தை கருப்பையாத்தேவருக்கு ஏற்பட்ட மன வேதனை தனக்கும் ஏற்பட்டதால் சமூக ஏற்றத் தாழ்வுக்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என முடிவு எடுத்துப் பேராவூரணி வட்டாரத்தில் "11 நாடுகளின் இளைஞர்கள் சங்கம்" என்ற அமைப்பைக் குருவிக்கரம்பையில் ஏற்படுத்தி அதன் தலைவரானார். இச்சங்கத்தின் மாநாட்டிற்கு, சர்தார் வேதரத்தினம் பிள்ளை, வி. வி. கிரி, ப. ஜீவானந்தம் ஆகியோரை அழைத்துச் சிறப்பாக நடத்தினார்.[3]

நடைபெற்ற இறுதித் தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த இரண்டாவது மாணவன் என்ற அளவில் தேர்ச்சிபெற்ற முத்தையாவை மேலும் படிக்க வைக்க விரும்பிய கருப்பையாத்தேவர் நீதிக்கட்சித் தலைவரான நாடிமுத்துப்பிள்ளையிடம் அழைத்துப்போய், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான தனது நண்பர் வி. எஸ். சீனிவாச சாஸ்திரியாருக்கு அறிமுகக்கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதத்துடன் பல்கலை கழக மாணவரானார்முத்தையா.[3]

1938 ஆண்டில் திண்டிவனத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பல்கலைக்கழகத்திலிருந்து கே. பாலதண்டாயுதம், முத்தையா உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டனர். மாநாட்டில் ப. ஜீவானந்தம் பேசிய ஆவேசமிக்கப் பேச்சையும், பி. ராம்மூர்த்தி பேசிய பொருளாதார நிலைமைகுறித்த உரையும் இவர்களைக் கவர்ந்தது. இந்தப் பேச்சாளர்களைப் பல்கலைக்கழகத்தில் பேச வைக்க வேண்டும் என முடிவு செய்து தமிழ் மன்ற பேராசிரியரை அணுகி சம்மதிக்க வைத்தனர். நிகழ்ச்சி நாளன்று ஜீவா ஒரு கம்யூனிஸ்ட், புரட்சிக்காரரென காவல்த்துறை மூலமாகப் பேராசிரியருக்குத் தகவல் அனுப்பப்பட்டு நிகழ்ச்சியைத் தடைசெய்ய முயற்சித்தனர். ஆனால் பல்கலையில் இருந்த கம்யூனிஸ்ட் மாணவர்கள் மற்ற மாணவர்களைத் திரட்டி ஜீவாவைப் பேசவைத்தனர். இந்நிகழ்வுக்கு காரணம் கே. பாலதண்டாயுதம் எனக் கருதி அவரையும் சில மாணவரையும் இடை நீக்கம் செய்தனர். இதனால் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மாணவர் விடுதி மூடப்பட்டது. கே. பாலதண்டாயுதம் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் மாணவச் செயலாளரான கே. பாலதண்டாயுதத்தின் முழுப் பொறுப்பும் முத்தையாவிடம் வந்தது. கம்யூனிஸ்ட் மாணவர் குழுவையும், பல்கலைக்கழக கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையின் செயலாளர் பொறுப்பையும், படிப்பையும் ஒரே நேரத்தில் செய்து வந்தாலும் வகுப்பில் இண்டர்மீடியட் தேர்வில் முதலாவது மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.[3]

தலைமறைவு வாழ்க்கை

1939 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் படிப்பிற்காக வந்த ஆர். உமாநாத் இவரது நெருங்கிய நண்பரானார். காவல்துறையினரால் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் அவ்வாண்டு நடைபெற்ற இறுதி தேர்வை எழுதாமலேயே தேர்வு நடைபெறும் அரங்கிற்கு வெளியே இருந்த காவல்துறையினரிடமிருந்து தப்பி திருச்சிக்குச் சென்றார்.[3] திருச்சியில் ரயில்வே தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்து சங்க வேலைகளைச் சிறிது காலம் செய்து வந்தார். கம்யூனிஸ்ட் ரகசிய மையங்களைக் கண்டுபிடித்து அங்கே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த மோகன் குமாரமங்கலம், பி. ராம்மூர்த்தி, சுப்பிரமணிய சர்மா, கேரளீயன், அனுமந்தராவ், உமாநாத், போன்றவர்களைக் கைது செய்தபின் தமிழகத்தில் கட்சிப்பணி செய்யவும், ஆங்கில ஆவணங்களைத் தமிழாக்கம் செய்யவும், கட்சிக்கடிதங்களை ஊர் ஊராய் கொண்டு சேர்க்கவும், மாணவர் குழுக்களுக்குக் கம்யூனிஸ்ட்ப் பயிற்சி அளிக்கவும் முத்தையா பணிக்கப்பட்டார்.[3]

சென்னை மாவட்ட செயலாளர்

பின்னர் 1942 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சிமீதான தடையை ஆங்கில அரசு நீக்கியது. முத்தையாவின் தனது தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதே ஆண்டில் திருச்செங்கோட்டில் மோகன் குமாரமங்கலத்தின் வீட்டில் கூடி கட்சியின் புதிய மாநிலக் குழுவைத் தேர்ந்தெடுத்தனர். மோகன் குமாரமங்கலம் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், முத்தையா சென்னை மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கினர்.[3]

1943 ஆம் ஆண்டில் சப்பான் விமானப்படை சென்னை நகரத்தில் வீசிய குண்டினால் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து வெள்ளம் சென்னை நகரை சூழ்ந்த நேரத்தில் மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு தோணி மூலம் மீட்டு காப்பாற்றினார். 1945 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி, சுபாசு சந்திர போசின் இந்திய தேசியப் படையினரை விடுதலை செய்ய வேண்டுமெனப் போராட்டம் நடத்தியது. 1946 பிப்ரவரி 23 ஆம் நாள் இராயல் இந்தியக் கடற்படை என்னும் கப்பல் படையினரின் போராட்டத்திற்கு ஆதரவாகச் சென்னையில் முத்தையா தலைமை ஏற்று நடத்திய போராட்டத்தில் மாயாண்டி பாரதி கலந்துகொண்டார்.[4] 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் பிரகாசம் அமைச்சரவை பிறப்பித்த அவசரச்சட்டத்தின் படி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத்தும், என். கே. கிருட்டிணனும் நடத்திய அரசியல் வகுப்புகளில் தெரிவித்த கருத்துக்களை குறிப்பெடுத்து பின்னாளில் மார்க்சீய போதனை என்ற தலைப்பில் இரண்டு புத்தகங்களாக வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தைப் பற்றி முதுபெரும் பொதுவுடைமைவாதி ஐ. மாயாண்டி பாரதி எளிய முறையில் எவரும் புரிந்துகொள்ள முடிந்த தத்துவார்த்தப் புத்தகங்களென நினைவுகூர்ந்தார்[4]

திருமணம்

1950 ஆம் ஆண்டில் சூன் மாதம் 22 ஆம் திகதியன்று திருச்சி ரயில்வே தொழிலாளர் நடேசம்பிள்ளையின் இரண்டாவது மகள் யமுனாவை நேரு அச்சக உரிமையாளர் ஆறுமுகம் பிள்ளை தலைமையில், ராதாபாய் சுப்பராயன், ம. பொ. சி போன்றோர் வாழ்த்தத் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் சாதி மறுப்புத் திருமணம் என்பதால் தந்தை வர மறுத்துவிட்டார். தாயாரும், தம்பியுமே திருமணத்திற்கு வந்தனர். முத்தையா அப்போது சென்னை ஜனசக்தி அலுவலகத்தில் முழுநேர ஊழியராகவும், தகவல் களஞ்சியத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னரும் பிரித்தானியரின் கையில் இருந்த தொழில்களையும் சொத்துகளையும் நாட்டுடைமையாக்க வேண்டும் எனப் பொதுவுடைமைக் கட்சி தலைமை ஏற்று போராட்டங்கள் நடத்தியதால் 1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தடை செய்யப்பட்டது. முத்தையா கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் "செங்கொடி" என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை நடத்தினார். 1949 ஆம் ஆண்டில் முத்தையாவின் மனைவி யமுனாவும் 10 பெண்களும் பாதுகாப்புக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தி ஒருமாத காலம் சிறையிலிருந்தார்.[3]

இதழியல் பணி

1952 ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதிராமபட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மிகக் குறைவானவாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார். நான்கு ஆண்டுகால காங்கிரஸ் அடக்குமுறை ஆட்சிக்குப் பின் கட்சியின் செய்தித்தாளான "ஜனசக்தி" இதழை மீண்டும் நடத்துவதென முடிவு செய்து முத்தையாவை பொறுப்பாசிரியராகக் கட்சி தலைமை நியமித்தது. 1960ல் கட்சிக்குள் நடைபெற்ற சித்தாந்த போராட்டத்தைக் கூர்மையுடன் நடத்தினார். 1952 முதல் 1962 வரை 10 ஆண்டுகாலம் மிகவும் பொறுப்புணர்வுடன் வெளிக்கொணர்ந்தார்.[3]

1963 இல் கட்சி பிளவுபட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இல் தன்னை இணைத்துக் கொண்டார். 1963ல் கட்சியின் இதழான தீக்கதிர் செய்தி இதழை நடத்துவது என்று முடிவு செய்து பொறுப்பை முத்தையாவிடம் ஒப்படைத்தது. சென்னை நடேசன் சாலையில் வாடகை வீட்டில் ஒத்திக்கு வாங்கிய சிலிண்டர் இயந்திரத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. 1969 இல் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமும், "தீக்கதிர்" இதழும் மதுரைக்கு மாற்றப்பட்டது. 1970ல் "செம்மலர்" என்ற இலக்கிய மாத இதழ் தொடங்கப்பட்டு அதன் ஆசிரியர் பொறுப்பையும் கட்சி முத்தையாவிடம் ஒப்படைத்தது. 1963 முதல் 1990 வரையிலும் தனது ஆசிரியர் பொறுப்பைத் திறம்பட செய்தார் [3]

நூல்கள்

முத்தையா எழுதிய "தமிழிலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்" எனும் நூல், தமிழ் இலக்கியங்களை மிக ஆழமாக ஆய்வு செய்கிறது. பிற நூல்கள்:

  1. சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்
  2. இராமாயணம் ஒரு ஆய்வு
  3. வீர பரம்பரை
  4. சட்டமன்றத்தில் நாம்
  5. திமுக எங்கே செல்கிறது
  6. இதுதான் அண்ணாயிசமா?
  7. மார்க்சியமும் தமிழ் கலை இலக்கியங்களும்
  8. தத்துவத்தின் வறுமை ( காரல் மார்க்ஸ்-எழுதியது-தமிழாக்கம்)
  9. இமயம் (புதினம்)
  10. விளைநிலம்
  11. உலைகளம் (முதல் நாவல்) செம்மலரில் தொடராக வெளிவந்தது.
  12. செவ்வானம் (நாடகம்)
  13. புதிய தலைமுறை (நாடகம்)
  14. ஏரோட்டி மகன் (நாடகம் (2012)

முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

முத்தையாவின் 60 ஆண்டுகால அரசியல் பணியிலும், 50 ஆண்டுகால இதழாளர் வாழ்விலும் மிகச்சிறந்த சாதனையாக 1970 ஆம் ஆண்டு இலக்கியத்தை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுப்பதென இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு எடுத்த முடிவின் அடிப்படையில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என அனைவரையும் இணைத்த ஒரு சங்கத்தை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை முற்போக்கு எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியுடன் இணைந்து ஏற்படுத்தினார்[3]

இறப்பு

60 ஆண்டுகால அரசியல் பணியிலும், 50 ஆண்டுகால இதழாளர் வாழ்விலும், இலக்கியவாதி, மக்கள் போராளி, இதழாளர், விடுதலைப் போராட்ட வீரர், எனப் பன்முகத்தன்மையோடு வாழ்ந்த கே. முத்தையா 2003ஆம் ஆண்டு சூன்மாதம் 10 ஆம் திகதி மதுரையில் காலமானார்.

மேற்கோள்கள்

  1. கே. முத்தையா, எழுத்துலகில் அரை நூற்றாண்டு, 1999,காலம் வெளியீடு மதுரை. பக். 107
  2. "வரலாற்றில் இன்று(14.01.2020).. தமுஎச எனும் அமைப்பை துவங்கிய முற்போக்கு எழுத்தாளர் பிறந்த தினம் இன்று.." (in en-US) இம் மூலத்தில் இருந்து 2021-05-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210511090123/https://dinasuvadu.com/history-today-6/. 
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 கே. முத்தையா, எழுத்துலகில் அரை நூற்றாண்டு, 1999,காலம் வெளியீடு மதுரை. பக். 71
  4. 4.0 4.1 ஏறுனா ரயிலு எறங்குனா செயிலு, மாயாண்டி பாரதியின் பேட்டி, செப்டம்பர் 2010 உங்கள் நூலகம் இதழ்
"https://tamilar.wiki/index.php?title=கே._முத்தையா&oldid=28106" இருந்து மீள்விக்கப்பட்டது