குழ. கதிரேசன்
குழ.கதிரேசன் (பிறப்பு: அக்டோபர் 17, 1949) என்பவர் குழந்தைகளுக்கான கதை, கவிதை எழுதியவர்.
இளமைப் பருவம்
இவரின் பெற்றோர் சு. கதி. குழந்தையன் - செல்லம்மை ஆவர். இவர் அக்டோபர் மாதம் பதினேழாம் நாள் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் ஊர் இராயவரம்.இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
இலக்கிய வாழ்க்கை
குழ. கதிரேசன் கல்லூரியில் படிக்கும் போது கவிதைகள் எழுதினார். இவர் எழுதிய குழந்தைப் பாடல்கள் கோகுலம் இதழில் வெளியாகின. தொடர்ந்து பல சிறார் இதழ்களுக்கு எழுதினார். கவிதைகள் எழுதுவதற்கு பொன்னடியான், ஊக்குவிப்பாகவும், உந்துசக்தியாகவும் இருந்தார்.
குழந்தைப் பாடல்கள்
குழ. கதிரேசன், சென்னையில் மாதமொருமுறை பொன்னடியான் நிகழ்த்தும் கடற்கரைக் கவியரங்கக் கூட்டங்களில் கலந்துகொண்டு பல பாடல்களை அரங்கேற்றினார். அதில் கலந்துகொண்ட அழ. வள்ளியப்பா, குழ. கதிரேசனைக் குழந்தைகளுக்காக எழுதுமாறு ஊக்குவித்தார். வள்ளியப்பாவை முன்னோடியாகக் கொண்டு எளிய தமிழில் குழந்தைகளுக்கான பாடல்களை எழுதினார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்களை எழுதினார் குழ. கதிரேசன். அவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகின. இவரது பாடல்கள் தமிழக அரசின் சிறார்களுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றன. கேரளா, மைசூர், சிங்கப்பூர் தமிழ் வகுப்புப் பாட நூல்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றன. ஆய்வு மாணவர்கள் சிலர் குழ, கதிரேசனின் படைப்புகளை ஆய்வு செய்து இளம் முனைவர், முனைவர் பட்டம் பெற்றனர். பெரியவர்களுக்கான பாடல்கள் சிலவற்றையும் குழ. கதிரேசன் எழுதினார்.
சோவியத் பண்பாட்டு மையம், புஷ்கின் இலக்கியப் பேரவை, அம்பத்தூர் இலக்கியப் பேரவை. கவிதை வட்டம், பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை, அண்ணா நகர் தமிழ் சங்கம், சிறுவர் கலை இலக்கிய மாநாடு, சாகித்திய அகாடமி முதலிய அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சிகளில் குழ.கதிரேசன் பங்குகொண்டு சிறப்புரையாற்றினார்.
சங்க இலக்கிய உரைகள்
குழ. கதிரேசன் கல்லூரியில் படிக்கும்போது தமிழண்ணலின் மாணவராக இருந்தார். தமிழ் இலக்கியங்கள் மீது கொண்ட ஆர்வத்தால், சிறார்களுக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் சங்க இலக்கிய நூல்களை உரை எழுதிப் பதிப்பித்தார்.
ஒலிப் பேழைகள்
குழ. கதிரேசனின் பாடல்கள் தொகுக்கப்பட்டு மூன்று ஒலிப்பேழைகளாக வெளியாகின. பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா அவற்றைப் பாடினார்.
மொழிபெயர்ப்பு
குழ. கதிரேசனின் தொப்பைக் கோழி, மழலைப் பூக்கள், மழலை அரும்பு ஆகிய நூல்கள் மலையாளத்தில் முறையே பையனூர் பாஸ்கரன், ஆலப்புழா முரளீதரன், டாக்டர் ராஜேந்திர பாபு ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டன.
குழ. கதிரேசனின் குழந்தைப் பாடல்கள், Central Institute of India Language மூலம் ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டன.
குழ. கதிரேசனின் ‘எலி கடித்த பூனை’ என்னும் நூலில் உள்ள சில பாடல்கள் போலந்து, ரஷ்ய, செக் மொழிகளில் பெயர்க்கப்பட்டன.
பதிப்புலகம்
1974 முதல் 75 வரை தமிழ்ப் புத்தகாலயம், கண. முத்தையா அவர்களிடம் பணிபுரிந்தார். பதிப்பகத் தொழிலின் அடிப்படை நுணுக்கங்களை அவரிடம் கற்றுக் கொண்டார். 1975 முதல் 1984 வரை இவரது தந்தை குழந்தையனும், நண்பர் செல்லப்பனும் இணைந்து நடத்திய மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தின் சென்னைக் கிளை மேலாளராகப் பணியாற்றினார்.
ஐந்திணைப் பதிப்பகம்
குழ. கதிரேசன், தன்னுடைய பதிப்புலக அனுபவத்தைக் கொண்டு 1984-ல், ஐந்திணைப் பதிப்பகத்தை நிறுவினார் 300க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார். தி. ஜானகிராமன் நூல்கள் பலவற்றை ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், டாக்டர் தட்சிணாமூர்த்தி, மது.ச. விமலானந்தம் எனப் பல இலக்கியவாதிகளின் நூல்கள் ஐந்திணை மூலம் வெளியாகின.
விருதுகள்/பரிசுகள்
- தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு - ‘எலி கடித்த பூனை’ (1979)
- தமிழ்நாடு அரசின் பரிசு - ’பேசும் கிளியே' (1991)
- செல்லப்பன் அறக்கட்டளை நினைவுப்பரிசு - ‘இயந்திர மனிதன் வருகிறான்’ (1997)
- பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய சிறந்த நூலுக்கான பரிசு - ‘மழலைக்கரும்பு’ (2006)
- டைமண்ட் கல்சுரல் அகாதெமி வழங்கிய சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது (1995)
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் அமைப்பு வழங்கிய சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது (1998)
- வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளை விருது
- கே. ஆர். ஜி. நாகப்பன் அறக்கட்டளை விருது
- அழ.வள்ளியப்பா இலக்கிய விருது
- குழந்தைக் கவிஞர் கோ பட்டம்
- மழலைக் கவிஞர் பட்டம்
- குழந்தைப் பாவலர் பட்டம்
- செம்மொழிச் செல்வர் பட்டம்
- புதுவை சிறுவர் இலக்கியச் சிறகம் அமைப்பு வழங்கிய சிறுவர் இலக்கியச் சீர்மணி பட்டம்
- புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய ’மழலை இலக்கியச் செம்மல்’ பட்டம்
- சாகித்ய அகாடமி வழங்கிய பால் சாகித்ய புரஸ்கார் விருது
ஆவணம்
மலேசியப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்காக வே. பிரியா, குழ. கதிரேசனின் படைப்புகளை ஆய்வு செய்து 'குழந்தை கவிஞர் குழ.கதிரேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். கலைஞன் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. 'குழ.கதிரேசனும், அழ.வள்ளியப்பாவும் ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் இவரது படைப்புகளை ஆதிலட்சுமி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ‘குழ.கதிரேசன் பாடல்கள் ஓர் ஆய்வு' என்னும் தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வினை முனைவர். புவனேஸ்வரி மேற்கொண்டுள்ளார். ‘குழ. கதிரேசன் பாடல்களில் இலக்கியக் கொள்கைகள்’ என்ற தலைப்பில் இளமுனைவர் பட்ட ஆய்வு செய்து ,ஆய்வு நூல் ஒன்றை பி.ஆர். ராஜ்மோகன் எழுதியுள்ளார். ’குழ. கதிரேசன் குழந்தைப் பாடல்களில் உடல்நலமும் மன நலமும்’ என்ற தலைப்பில் அ.கவிதா இள முனைவர் பட்ட ஆய்வினைச் செய்துள்ளார். ’குழ. கதிரேசன் குழந்தைப் பாடல்களில் இலக்கிய நயம்’ என்ற தலைப்பில் இரா. பத்மநாபன் இள முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார். ‘நெருப்புக் கொப்பளத்தில் சமுதாயப் பார்வைகள்' என்ற தலைப்பில் ஹெலன் என்பவர் இள முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார். ’இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்கள்’ என்ற தலைப்பில் உருவான ஆய்வு நூலில், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆசிரியர் தசரதன், குழ.கதிரேசன் பாடல்களை ஆய்வு செய்து கட்டுரை வழங்கியுள்ளார்.
இலக்கிய இடம்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அழ. வள்ளியப்பாவின் வழியில் எளிய தமிழில், குழந்தைகளுக்கான படைப்புகளைத் தந்து வருகிறார் குழ. கதிரேசன். சந்த நயத்துடன் கூடிய இப்பாடல்கள் குழந்தைகள் ஆடி, பாட ஏற்றவை. மனப்பாடத் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தவை. குழந்தை இலக்கியப் பங்களிப்போடு பதிப்புலக வளர்ச்சியிலும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். சங்க இலக்கியப் படைப்புகளை குழந்தைகள் வாசிக்கும் வண்ணம் எளிய தமிழில் நூல்களாகத் தந்தமையை மிகச் சிறந்த இலக்கியச் சாதனையாக மதிப்பிடுகிறார் முனைவர் தமிழண்ணல்.
நூல்கள்
சிறார் நூல்கள்
- எலி கடித்த பூனை
- பள்ளிக்கூட வெள்ளாடு
- காகிதக் கப்பல்
- விடுதலைக் கிளி
- தொப்பைக் கோழி
- பேசும் கிளியே
- பூச்செண்டு
- மழலையர் தமிழ்
- சிரிக்கும் மழலை
- மழலைத் தேன்
- சின்னச்சின்னப் பூக்கள்
- பாடுவோம் அறிவியல்
- கூட்டாஞ்சோறு
- மழலைப் பூக்கள்
- மழலை அரும்பு
- குட்டிப் பாப்பா
- குழந்தைப் பாப்பா
- மிட்டாய் பாப்பா
- தங்க நிற மாம்பழம்
- டிங்டாங் கடிகாரம்
- சுதந்திரதின மிட்டாய்
- நெருப்புக் கொப்புளம்
- பாட்டு மழை
- மழலைக் கற்கண்டு
- மழலைக் கரும்பு
- மழலைப் பூங்கொத்து
- தமிழைப் படிப்பேன்
- இனிக்கும் அறிவியல்
- ஆகாயத்தில் ஆரஞ்சு
சங்க இலக்கிய உரைகள்
- பரிபாடலில் திருமால் பாடல்கள்
- எளிய தமிழில் பாலைக்கலி
- குறுந்தொகைப்பாடல்கள் - 1-25
- எளிய தமிழில் பத்துப்பாட்டு
பொது நூல்கள்
- நெருப்புக் கொப்புளம் (சமுதாயப் பாடல்கள்)
- தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் (கவிதை வடிவில்)
ஒலிப் பேழைகள்
- மழலைப் பூக்கள்
- தொப்பைக் கோழி
- பேசும் கிளியே
விருதுகள்
தமிழ் மொழியில் 2016–ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய அகாதமி விருது பெற எழுத்தாளர் குழ.கதிரேசன் தேர்வாகினார். ஒட்டுமொத்த குழந்தைகள் இலக்கிய பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "சாகித்ய அகாடமியின் ‘புரஸ்கார்’ விருது தமிழ் எழுத்தாளர்கள் குழ.கதிரேசன், லட்சுமி சரவணகுமார் தேர்வு". 17 சூன் 2016. http://www.dailythanthi.com/News/India/2016/06/17045604/Puraskaar-of-the-Sahitya-Akademi-Award.vpf. பார்த்த நாள்: 29 சூன் 2017.
- ↑ "BAL SAHITYA PURASKAR (2010-2016)". Sahitya Akademi இம் மூலத்தில் இருந்து 2015-06-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150630000355/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/bal%20sahitya%20samman_suchi.jsp.