குழந்தை செபமாலை
குழந்தை செபமாலை (மார்ச் 8, 1940 - ஜனவரி 08, 2022) செபஸ்தியான் செபமாலை ஈழத்து கூத்துக் கலைஞர். ஆற்றுகைக் கலைஞர், நாடக எழுத்தாளர், எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். மரபு வழி மன்னர் கூத்தை நவீன உலகுக்கு ஏற்ப திசை திருப்பிய முன்னோடி. ராணுவக்கெடுபிடிகள், சூறாவளி, சுனாமிகள் ஆகியவற்றைத் தாண்டியும் தொடர்ந்து கூத்து செயல்பாடுகளில் இருந்து வருகிறார். பேராசிரியர் வித்தியானந்தன் தொடங்கி வைத்த கூத்து மரபை நவீன யுகத்துக்கு எடுத்துச் செல்லும் போக்கு இவரின் நாடகங்களில் காணப்படுகிறது. குறுங்கூத்துக்களை அறிமுகப்படுத்தியது இவரின் முக்கியமான பங்களிப்பு.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
குழந்தை செபமாலை |
---|---|
பிறந்ததிகதி | மார்ச் 8, 1940 |
இறப்பு | ஜனவரி 08, 2022 |
பிறப்பு, கல்வி
குழந்தை செபமாலை இலங்கை மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் முருங்கன் என்ற ஊரில் 1940-ல் செபஸ்தியான் அண்ணாவியாருக்கு மகனாகப் பிறந்தார். செபமாலை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைப் பெற்றார். 1957-ல் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயின்றார்.
தனிவாழ்க்கை
அல்லைப்பிட்டி பாடசாலை ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்து, 40 ஆண்டு சேவையின் பின்னர் ஓய்வுபெறும் போது முதலாந்தர அதிபராக பதவி வகித்து வந்தார்.மனைவி றோஸ்மேரி. பிள்ளைகள் லூந்துநாயகம், இன்பராசா, அன்புராசா, திருமகள், மலர்விழி, கயல்விழி. குழந்தை செபமாலையின் மகன் செபமாலை அன்புராசா ஒரு கூத்துக் கலைஞர், மன்னார் மாவட்ட கத்தோலிக்க கூத்துக் கலைஞர்கள் பற்றி ஆய்வு நூலை வெளியிட்டார். அவர் கூத்துகலை ஆய்வாளராக அறியப்படுகிறார். கூத்திற்கு அப்பால் குழந்தை சமூக, சரித்திர, இலக்கிய, இசை, நாடக ஆசிரியராக இருந்தார். செபமாலையின் குடும்பம் கூத்து கலைக் குடும்பம். குழந்தை செபமாலையின் அண்ணன் சீமான், தம்பி ரத்தினம், பிலேந்திரன், யேசுதாசன், சகோதரி எலிசபெத், மருமகன் அந்தோணிப்பிள்ளை ஆகிய அனைவரும் கூத்தில் முக்கியப் பங்காற்றினர்.
கலை வாழ்க்கை
தன் ஐந்து வயதில் "ஐயா சிறுவன் ஏழை என் மேல் மனம் இரங்காதோ" என்ற பாடலை மேடையில் பாடியதன் மூலம் தன் கலை வாழ்வை ஆரம்பித்தார். தந்தை செபஸ்தியான் அண்ணாவியாரிடமிருந்து கூத்தைக் கற்று அதில் புதுமையையும் நவீனத்தையும் புகுத்தி அதை இன்னொரு தளத்திற்கு உயர்த்தினார் குழந்தை செபமாலை. 1945-களிலிருந்து நாடகச் செயல்பாடுகளை ஆரம்பித்தார். 1960-களில் பாடசாலைகளில் கூத்து பயிற்றுவித்தார். 1964-ல் முருங்கன் முத்தமிழ்க் கலை மன்றத்தை நிறுவி மன்னாரிலும், இலங்கையின் பிற பகுதிகளிலும் கூத்து பயிற்றுவித்தார்.
பேராசிரியர் சு.வித்தியானந்தன் 1960-களில் ஆரம்பித்த கூத்து மரபினை உறுதியாகத் தொடர்ந்தார். செபஸ்தியான் அண்ணாவியாரின் வாரிசு. கூத்துக் கலைஞராக இடைவிடாத தொடர் செயல்பாடுகளில் இருந்தார்.
பத்து சமூக நாடகங்களும், மூன்று சரித்திர நாடகங்களும், மூன்று இசை நாடகங்களும், பன்னிரெண்டு நாட்டுக்கூத்து மரபு நாடகங்களும் இவர் எழுதினார். மொத்தம் முப்பத்தியிரண்டு கூத்து நாடகங்களை எழுதியுள்ளார். குழந்தை செபமாலை இக்காலத்தில் தமிழரசுக்கட்சி பரப்பிய இன உணர்வு, திராவிடக் கட்சிகள் பரப்பிய சீர்திருக்கருத்துகளால் பாதிப்படைந்திருந்தது அவரின் நாடகங்களில் காணமுடிந்தது. இந்நாடகங்களில் பார்ஸி வழி நாடக மரபும், சினிமாச் செல்வாக்கும் காணப்பட்டன. மலை நாடு, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இவை அரங்கேறின. மரபை புதுத்திசைகளில் கொண்டு செல்லும் போக்கை 1960-களிலிருந்து குழந்தை முன்னெடுத்தார். விடிய விடிய ஆடப்பட்ட மரபு வழி நாடகங்களிலிருந்து ஓரிரு மணி நேரங்களில் ஆடும் குறுங்கூத்துக்களைப் படைத்தார்.
சிறப்புகள்
- பேராசிரியர் வித்தியானந்தனையும், அவர் பின் வந்த மரபினையும் இணைத்து நிற்கும் ஒரேயொரு "மன்னார் நாடகப்" பிரதிநிதியாக குழந்தையைப் பார்க்கலாம்.
- சில கூத்துக்கள் தமிழர் போராட்டங்களை மறைமுகமாக வெளிப்படுத்தும் நாடகங்கள்
- மக்கள் பிரச்சனைகளையும், அடக்குமுறைக்கு எதிரான கருத்துக்களையும் கூத்துகளில் வெளிப்படுத்தினார்.
- மரபை மீறாத, மரபினடியாக, காலத்திற்கு ஏற்ப நேரச்சுருக்கமுடைய கூத்துக்களைப் படைத்தார்.
- செயல் அரங்கு, சொல் அரங்கு இரண்டிலும் பங்காற்றியவர்.
இலக்கிய வாழ்க்கை
குழந்தை செபமாலையின் முதல் ஆக்கமான "அறப்போர் அரைகூவல்" கவிதை இலங்கை வானொலியில் 1963--ம் ஆண்டு முதலில் ஒலிபரப்பானது. இலக்கியம், கலை இலக்கியம், நாடகம், கவிதை என இலங்கை வானொலியிலும், தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதி வருகின்றார். இத்தகைய இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் வானொலி, பத்திரிகைகளில் ஒலிபரப்பாகியும், வெளியாகியுள்ளன.
அரசுசார் விருதுகள்
- 1998-ல் அரச இலக்கிய விழாவில் இவரது பரிசு பெற்ற நாடகங்கள் என்று நூலுக்குச் "சாகித்திய விருது" வழங்கப்பட்டது.
- 1999ல் கொழும்பில் கலாசாரத் திணைக்களத்தினால் "கலாபூசண விருது" வழங்கப்பட்டுப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
- 2000-ம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் "ஆளுநர் விருது" வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்திப் பொற்கிழியும் வழங்கப்பட்டது.
- 2013--ம் ஆண்டில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு "நாடகக்கீர்த்தி" விருது வழங்கியது.
அரசுசாரா விருதுகள்
- 1982-ல் முருங்கன் மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சபை பாராட்டுவிழா எடுத்து பொன்னாடை போர்த்திப் பரிசுகள் வழங்கியது.
- நவம்பர் 1, 1994-ல் மன்னார் மாவட்டக் கலை பண்பாட்டுக்கழகம் "முத்தமிழ் வேந்தர்" பட்டம் வழங்கியது.
- 1995-ல் மட்டக்களப்பில் நடைபெற்ற வடக்குக் கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் பொன்னாடை போர்த்தப்பட்டு விருதும் வழங்கப்பட்டது.
- செப்டம்பர் 2, 2000-ல் மன்னாரில் இடம்பெற்ற நாடக நிகழ்வில் "திருக்கள வேந்தன்" விருது வழங்கப்பட்டது.
- 2005-ல் மட்டக்களப்புப் பக்கலைக்கழக நுண்கலைத் துறை "தலைக்கோல்’ விருது வழங்கப்பட்டது.
மறைவு
- ஜனவரி 8, 2022-ல் குழந்தை ஜெபமாலை காலமானார்.
அரங்கேற்றியவை
சமூக நாடகங்கள்
- பாட்டாளி கந்தன்
- பணமா கற்பா
- லட்சியவாதிகள்
- பணத்திமிர்
- மனமாற்றம்
- திருந்திய உள்ளம்
- தியாகிகள்
- தாகம்
- காவல் தெய்வங்கள்
- விண்ணுலகில்
இலக்கிய நாடகம்
- இறைவனின் சீற்றம்
- தாரும் நீரும்
- கவரி வீசிய காவலன்
- சிலம்பின் சிரிப்பு
சரித்திர நாடகங்கள்
- நல்வாழ்வு
- பரதேசி மகன்
- இலங்கையை வென்ற ராஜேந்திரன்
இசை நாடகங்கள்
- புதுமைப்பெண்
- அன்புப்பரிசு
- வாழ்வளித்த வள்ளல்
குறுங்கூத்துகள்
- வீரத்தாய்
- கல் சுமந்த காவலர்கள்
- இணைந்த உள்ளம்
- வீரனை வென்ற தீரன்
- யார் குழந்தை
- அழியா வித்துக்கள்
- விடுதலைப் பயணம்
- இறைவனா புலவனா
- முதல் குடும்பம்
- பூதத்தம்பி
- குண்டலகேசி
- நவீன விவசாயம்
நூல்கள்
- இன்பத்தமிழின் இதய ஓலம்
- அறப்போர் அறை கூவல்
- இயாகப்பர் இன்னிசைப் பாடல்கள்
- நாம் (மலர் - 1)
- நாம் (மலர் - 2)
- நாம் (மலர் - 3)
- பரிசு பெற்ற நாடகங்கள் (சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது – 1998)
- மரபு வழிநாடகங்கள்
- மாதோட்டம் (கவிதை)
வெளி இணைப்புகள்
உசாத்துணை
- "நாடகம் – அரங்கியல்: பழையதும் புதியதும்" பேராசிரியர் சி. மெளனகுரு: குமரன் புத்தக இல்லம்: கொழும்பு-சென்னை 2021
- http://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/03/31/?fn=f13033123
- http://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/03/31/?fn=f13033123