குறிஞ்சி ஆண்டவர் கோயில்

குறிஞ்சி ஆண்டவர் கோவில் இந்தியாவில் தமிழ்நாட்டின் கோடைமலையில் உள்ள ஒரு முருகன் கோவில். கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு இதுவும் ஒரு முக்கிய உலாவிடமாக உள்ளது.

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ (2.5 மை) தொலைவில் இந்தத் திருக்கோயில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கும் குறிஞ்சி மலர்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகன் திருவுரு ஸ்ரீகுறிஞ்சி ஈசுவரன் என அழைக்கப்படுகிறது. 1936ஆம் ஆண்டில் லீலாவதி என்ற ஐரோப்பிய அம்மையாரால் கட்டப்பட்டது. இவர் இலங்கையில் இருந்தபோது இந்து சமயத்திற்கு மதம் மாறி பொன்னம்பல இராமநாதன் என்ற தமிழரை மணம் புரிந்தவர். எனவே இவரை லேடி இராமநாதன் என்போரும் உண்டு. இவரது மகளின் வளர்ப்புப் பெண்ணான பத்மினி என்கிற தேவி பிரசாத் பாஸ்கரனும் அவரது கணவர் பாஸ்கரனும் பின்னர் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு இந்தக் கோயிலை கொடுத்துள்ளனர்.