குறள்வெண் செந்துறை

குறள்வெண் செந்துறை தமிழ் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. இஃது அளவொத்த (ஒரே சீர் எண்ணிக்கை கொண்ட அடிகள்) இரண்டடிகளில் அமையும். அவ்வடிகள் அளவடியாகவோ (நான்கு சீர்) நெடிலடியாகவோ (ஐந்து சீர்) கழிநெடிலடியாகவோ (ஐந்துக்கும் மேற்பட்ட சீர்கள்) அமையும். இது செந்துறை வெள்ளை என்றும் அறியப்படுகிறது. தடையில்லாத இனிய ஓசையும் மென்மையான பொருளும் பெற்று வரும் என குறள்வெண் செந்துறை விளக்கப்பட்டுள்ளது. [1][2]

எடுத்துக்காட்டு 1

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

எடுத்துக்காட்டு 2

நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலம் செய்து கொள்ளாரே

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. ‘ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய்
    விழுமிய பொருளது வெண்செந் துறையே’. (யாப்பருங்கலம்]

    ‘அந்தம் குறையா தடியிரண் டாமெனிற்
    செந்துறை என்னும் சிறப்பின தாகும்’. என்றார் காக்கைபாடினியார்

    ‘ஈரடி இயைந்தது குறள்வெண் பாவே
    ஒத்த அடித்தே செந்துறை வெள்ளை’. என்றார் அவிநயனார். (யாப்பருங்கலம் பக்கம் 266, 267)

  2. முதுமொழிக்காஞ்சி நூலில் வரும் முதல் இரண்டு அடிகளை எடுத்துக்கொண்டால் அவை குறள்வெண்செந்துறை.
"https://tamilar.wiki/index.php?title=குறள்வெண்_செந்துறை&oldid=12085" இருந்து மீள்விக்கப்பட்டது