குயிலி ராஜேஸ்வரி

குயிலி இராஜேஸ்வரி தமிழகத்தின் பெண் சிறுகதை, புதின எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் கதைகளும், நாடகங்களும் பாடல்களும், நாட்டிய நாடகங்களும் எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

குயிலி ராஜேஸ்வரி, அக்டோபர் 27, 1935 அன்று பிறந்தார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி கற்றார்.

தனி வாழ்க்கை

குயிலி ராஜேஸ்வரி, இதழாளராகச் செயல்பட்டார். பிரபல இதழாளர் எஸ். ரஜத் இவரது சகோதரர். மண வாழ்க்கை விவரங்களை அறிய இயலவில்லை.

இலக்கிய வாழ்க்கை

குயிலி ராஜேஸ்வரியின் முதல் படைப்பு 1950-ல் வெளியானது. தொடர்ந்து பல சிறுகதைகள, கட்டுரைகளை, கலை விமர்சனங்களை கல்கி, கோகுலம், கலைமகள், தினமணி கதிர், தினமணி சுடர் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதினார். ஆங்கிலத்திலும் எழுதினார். தெலுங்கு, மராத்தி, இந்தி போன்ற மொழிகளில் குயிலி ராஜேஸ்வரியின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டன.

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் ‘அன்பு சுடும்’ என்னும் தலைப்பிலான குயிலி ராஜேஸ்வரியின் நாவல் பாடமாக வைக்கப்பட்டது. குயிலி ராஜேஸ்வரி சிறுகதைகள், நாவல்கள், பாடல்கள், நாடகங்கள் என 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

சிறார் இலக்கியம்

குயிலி ராஜேஸ்வரி, சிறார்களுக்காகப் பல கதை, கட்டுரை நூல்களை எழுதினார். நேஷனல் புக் டிரஸ்டுக்காக சிறார் கதைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். ‘மாதங்கி மகேஸ்வரி பீம்ஸ்’ என்ற குழந்தைகள் சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் வானொலியிலும், தொலைக்காட்சியிலும், நேரடியாகவும் பல சிறார் நிகழ்வுகளை நடத்தினார்.

இலக்கிய இடம்

பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்தவர் குயிலி ராஜேஸ்வரி. ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன், அநுத்தமா, கோமகள், பாசரசு வரிசையில் பெண்களின் வாழ்க்கையை நேர்த்தியான மொழியில் காட்சிப்படுத்திய படைப்பாளியாக குயிலி ராஜேஸ்வரி மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

நாவல்
  • மாலினி
  • உணராதநெஞ்சம்
  • சொல்லிப் புரிவதில்லை
  • அன்பின் பிணைப்பு
  • வாழ்க்கைப் பின்னல்
  • தெய்வம் சிரித்தது
  • பணம் தந்த பரிசு
  • பூங்குயிலி
  • சசிரேகா
  • அன்பு சுடும்
  • செதுக்காத சிலை
சிறுகதைத் தொகுப்பு
  • பாரதி ஆத்திச்சூடி
  • நெஞ்சில் நீர்
  • காணிக்கை
கட்டுரைத் தொகுப்பு
  • குடும்பத்தின் குல விளக்கு
  • குலமகள்
  • ஒப்பனைக் கலை
  • நாங்கள் காணும் இந்தியா-தமிழகம்
  • நாங்கள் காணும் இந்தியா-கேரளம்
  • சமூகப் பண்பாடு
  • இன்ப இல்லத்தரசி
  • இன்ப இல்லம்
  • சுதந்திரத்தின் கதை
  • மகளிர் கலை
  • மாதர்குல மணிகள்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=குயிலி_ராஜேஸ்வரி&oldid=3889" இருந்து மீள்விக்கப்பட்டது