கும்பகோணம் வராகப்பெருமாள் கோயில்

கும்பகோணம் வராகப்பெருமாள் கோயில் (Varahaperumal Temple, Kumbakonam) தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தின் மையப்பகுதியில் அருள்மிகு சக்கரபாணி திருக்கோயிலுக்கு தென்மேற்கில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்த மிகப் பழமையான ஆலயம். இதன் அருகிலேயே வராக விநாயகராகிய கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலும் உள்ளது.

வராகப்பெருமாள் கோயில்

தல வரலாறு

வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப்பெருமாள் என்ற பெயர் பெற்றார். வைகுண்டத்தில் திருமாலை தருசிக்க தேவர்கள் வந்தபோது ஜயன், விஜயன் என்ற துவாரபாலகர்கள் திருமாலை தரிசிக்க அனுமதிக்கவில்லை. வாயிலில் அமர்ந்து தியானித்து திருமாலை வேண்டினர். திருமாலும் காட்சி தந்து அருளினார். தங்களுக்கு தடையாக இருந்த துவாரபாலகர்களுக்கு பூமியில் அரக்கர்களாக பிறக்க சாபமிட்டனர். அதிர்ந்து போன துவாரபாலகர்கள் திருமாலை வேண்டி சாபம் கொடுத்தது கொடுத்ததுதான். பூலோகம் செல்லுங்கள், தக்க தருணத்தில் தாமே சாப விமோசனம் அளிப்பதாக கூறி அனுப்பினார். ஹிரண்யட்சன், ஹிரண்யாகசிபு என்ற பெயருடன் பூலோகம் சென்ற அரக்கர்கள், கடும் தவம் செய்து பூமியை பாதாளாத்துக்கு கொண்டு சென்றார்கள். இக்கொடிய செயலைக் கண்ட வானவர்கள் பூமியின் இயக்கம் தடைபடக் கூடாது என்பதற்காக வைகுண்டத்தில் திருமாலை வணங்கி நிகழ்ந்ததைக் கூறிக் காப்பாற்றும்படி வேண்டினர். அசுரனால் கவரப்பெற்ற பூமியை வெளிக்கொணர வராக (பன்றி) உருவெடுத்து பாதாளம் புகுந்து அவ்வசுரனுடன் போர் புரிந்தார். ஒரு கொம்பினால் அவனை அழித்துச் சுற்றத்தாரையும் அழித்தார். மற்றொரு கொம்பினால் பூமியைத் தாங்கிக்கொண்டு மேலே வந்து பூமியை முன்போல் நிலைபெறச் செய்தார். பூமியைத் தோண்டி வெளிக்கொணர்ந்து நிலை பெறச்செய்ததைப் புலப்படுத்த பூமிதேவி தமது இடது மடியிலேயே வீற்றிருக்கும் நிலையில் மாசி மாதம் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திரம் கூடிய மகாமகத்தன்று புண்ணிய தீர்த்தமான வராக குளக்கரையின் மேலே எழுந்தருளினார். இக்கோயிலின் முக்கிய திருவிழா 12 கருடசேவையாகும்.[1] இந்த இடமே வராகபெருமாள் ஆலயம். இது பவிஷ்யோத்ர புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் வராக பெருமாள், கருடாழ்வார், விஷ்வக்சேனர், நிகமாந்த மகாதேசிகர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

மூலவர், தாயார்

இக்கோயிலில் உள்ள மூலவர் ஆதிவராகப்பெருமாள் ஆவார். தாயார் பூமிதேவி (அம்புஜவல்லி)

தீர்த்தம்

வராக தீர்த்தம்

தீர்த்தவாரி

50 ஆண்டுகளுக்குப் பின் இக்கோயிலின் வராகக் குளத்தில் 19 பிப்ரவரி 2019 அன்று தீர்த்தவாரி நடைபெற்றது.[2]

12 கருட சேவை

கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.[3][4]

குடமுழுக்கு

2016 மகாமகத்தை முன்னிட்டு அக்டோபர் 26, 2015இல் இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.[5][6]

மேற்கோள்கள்

  1. மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்.
  2. மாசிமக திருவிழா: 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் தீர்த்தவாரி, தினமணி, 20 பிப்ரவரி 2019
  3. 12 கருட சேவை தரிசனம், தி இந்து, 5 மே 2016
  4. "கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே பந்தலில் 12 பெருமாள் கோயில்களின் கருட சேவை உற்சவம் நடைபெற்றது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம், தினச்சங்கு, 10 மே 2016". Archived from the original on 2018-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-12.
  5. கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா, தினமணி, அக்டோபர் 23, 2015
  6. கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், கும்பகோணத்தில் 14 கோயில்களில் குடமுழுக்கு, தினமணி, அக்டோபர் 27, 2015

26 அக்டோபர் 2015 குடமுழுக்கு படத்தொகுப்பு