கும்பகோணம் கௌதமேஸ்வரர் கோயில்

கும்பகோணம் மகாமகக்குளத்தின் தென்மேற்கு மூலையில் இத்தலம் உள்ளது.

கௌதமேஸ்வரர் கோயில்

தல வரலாறு

முன்பொரு காலத்தில் கௌதமர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் சிவபெருமானிடம் பெரும் பக்தி பூண்டவர். பல தலங்களைத் தரிசித்து கொண்டு தில்லையில் திருநடனங்கண்டு களித்துப் பின் சீர்காழியை அடைந்தார். அங்கு பஞ்சம் வந்தது. முனிவர் மனமிரங்கி பஞ்சம் நீங்கும் வரையில் அங்கேயே தங்கி எல்லோருக்கும் அன்னதானம் செய்து மகிழ்ந்திருந்தார். 12 ஆண்டுகள் கழிந்தன. இவ்வாறு உணவு அளித்து வரும்போது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ய எண்ணிய சிலர் தம் மாயையால் ஒரு பசுவை உண்டாக்கி அதனை கௌதம முனிவரிடம் அனுப்பினர். பஞ்சத்தால் இளைத்திருந்த பசுவினை கௌதம முனிவர் தடவிக்கொடுக்க அப்பசு கீழே விழுந்து இறந்தது. அம்முனிவருக்குப் பசுக்கொலையாகிய தீவினை வந்ததென்று உடனிருந்தோர் கூறினர். முனிவருக்கு அது சூழ்ச்சி என புரிந்தது. சீர்காழியைவிட்டு மயிலாடுதுறையை வந்தடைந்தார். அங்கு துருவாச முனிவரைக் கண்டார். தமக்குச் சீர்காழியில் நேர்ந்ததைக் கூறினார். துருவாச முனிவரும் பசு வதையினும் பாதகர் உறவு பொல்லாதது. அப்பாதக நிவர்த்திக்கு உடனே முயலவேண்டும் என்று கூறி "நீர் குடந்தை அடைந்து காவிரியாடி மகாமகக்குளத்தின்தென்மேற்கு மூலையில் எழுந்தருளி இருக்கும் உபவீதேசர் பெருமானை தரிசித்துப் பூசித்து வந்தால் பாதகம் நீங்கும்" என்றார். அவ்வாறே கௌதம முனிவரும் குடந்தையை அடைந்து காவிரியில் நீராடி இறைவனை வணங்கினார். இக்கோயிலின் பின்புறம் ஒரு தீர்த்தம் அமைத்து அதில் தினமும் நீராடி வழிபட்டு வரும் நாளில் இறைவன் காட்சியளித்தார். இத்திருக்கோயிலில் பூணூல் அணிவது மிகவும் விசேடமானது. அமிர்தக்கலசம் சிவபெருமானால் சிதைக்கப்பட்டபோது கும்பத்திலிருந்து விழுந்த பூணூல் விழுந்த இடம் இத்தலமாகும். [1]

பூணூலில் இருந்து தோன்றியவர். இக்கோயிலின் தீர்த்தம் கௌதம தீர்த்தம் ஆகும். [2]

இறைவன், இறைவி

இறைவன் கௌதமேசர், கௌதம முனிவருக்கு அருள் புரிந்ததால் கௌதமேசுவரர் எனப் பெயர் பெற்றார். இவருக்கு உபவீதேசர் என்ற பெயரும் உண்டு. இறைவி சௌந்தரநாயகி.

கௌதம முனிவர்

திருக்கோயிலின் திருச்சுற்றில் தென்மேற்கில் கௌதம முனிவரது திருமேனி சிலையாக அமைந்துள்ளதை இன்றும் காணலாம். முனிவர் திருவடியில் அவர் தம் இல்லத்தரசியார் நன்னீராட்டி வழிபடுவதை இப்படிமம் வடித்த சிற்பி அழகுடன் காட்டியுள்ளமை கண்டு மகிழத்தக்கதாய் உள்ளது. [3]

குடமுழுக்கு

2015 செப்டம்பர் 9 அன்று காலையில் குடமுழுக்கு நடைபெற்றது. [4] [5]

9.9.2015 கும்பாபிஷேகம் படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. மகாமகப் பெருவிழா 2004, இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்
  2. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)
  3. அருள்மிகு கௌதமேசுவரர் திருக்கோயில் திருத்தல வரலாறு, அருள்மிகு கௌதமேசுவரர் திருக்கோயில் நிர்வாகம், கும்பகோணம், 1998
  4. கெளதமேஸ்வரர் கோயிலில் நாளை குடமுழுக்கு, தினமணி, 8.9.2015[தொடர்பிழந்த இணைப்பு]
  5. குடந்தை கௌதமேஸ்வரர் கோயில் குடமுழுக்கு, தினமணி, 10 செப்டம்பர், 2015