குன்றியனார்

குன்றியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அகநானூறு 40, 41, குறுந்தொகை 50, 51, 117, 238, 301, 336, நற்றிணை 117, 239 ஆகிய 10 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.

பாடல் தரும் செய்திகள்

அன்றில் குடம்பை

பனைமரத்தில் அன்றில் பறவை கூடு கட்டிருக்கும். அந்தக் கூட்டில் இருந்துகொண்டு முட்டையிடப் போகும் பெண்அன்றில் இரவில் அகவும். அது உன்னைப் பிரிந்து தூங்காமல் இருக்கும் தலைவியின் காதுகளில் உன் தேரின் மணியோசைபோல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும். - குறுந்தொகை 301
அன்றில் அகவும் என்று பாடல் கூறுவதால் அன்றில் மயில் போன்றதோர் பறவை என உணரமுடிகிறது
தூக்கணாங்குருவி தென்னைமட்டையின் நுனியில் கூடு கட்டிக்கொண்டு வாழ்வது போல் அன்றில் தென்னையின் அடிமட்டை இடுக்குகளில் கூடு கட்டிக்கொண்டு வாழும் போலும்

தொண்டி

அவல் இடித்த உலக்கையை நெல்லுக்குவியல் தலையணையில் தூங்கவைத்துவிட்டு மகளிர் வண்டல் விளையாடும் மகிழ்ச்சி மிக்கது தொண்டி நகரம். அந்தத் தொண்டி போன்ற என் மகிழ்ச்சி நலத்தை நீ செல்லும்போது இழந்துவிடுகிறேன். நீ சென்றால், என் மகிழ்ச்சிநலத்தை என்னிடமே தந்துவிட்டுச் செல்க என்கிறாள், தலைவி தலைவனிடம். - குறுந்தொகை 238.

அண்டர்

மாரியில் நனைந்திருக்கும் ஆம்பல் மலர்போல் அமர்ந்திருக்கும் கொக்குக்கு அஞ்சி நண்டு கண்டல் மரத்து வேருக்குப் பக்கத்தில் அமைத்துள்ள தன் வளைக்குள் சென்றுவிடும். (அதுபோலத் தலைவன் ஊராருக்கு அஞ்சிச் சென்றுவிட்டான்.) கவலை வேண்டாம். கொங்கு நாட்டில் வாழ்ந்த ஆடுமாடு மேய்க்கும் ஆயர் குடிமக்கள் அண்டர் எனப்பட்டனர். அண்டர் எருதுகளைக் கயிற்றில் கட்டி இழுத்துச் செல்வர். அதுபோல வாராத உன் காதலனை நம் வினைஞர்கள் கையால் வளைத்துப் பிடித்து இழுத்துவந்துவிடுவர். கவலை வேண்டாம் என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

ஞாழல் மலர்

ஐயவி என்னும் வெண்சிறு கடுகு போல் முண்டக மலர் கொட்டும் துறையை உடையது அவர் ஊர். அவனைத் தழுவிய என் தோள் வாடுவதும், அதனால் தோள்வளை நழுவுவதும் ஆயிற்றே! தலைவி இப்படிக் கூறுகிறாள். - குறுந்தொகை 50.

முண்டக மலர்

முண்டக மலர்கள் நூலறுந்து கொட்டும் முத்துக்கள் போலப் பரந்துகிடக்கும் சேர்ப்பன் அவன். நானும் அவன்மேல் காதல் கொண்டுள்ளேன். என்தாயும் என் காதலை விரும்புகிறாள். என் தந்தையும் அவனுக்குத் தரவேண்டும். ஊராரும் அவனைப்பற்றியே பேசட்டும். அதுதான் நல்லது என்கிறாள் தலைவி. - குறுந்தொகை 51.

முருக்கம் பூஞ்சினை

மரம் பற்றி எரிவது போல் காணப்படும் முருக்கு என்கின்ற மரத்தின் முருக்கம் பூக்கள் கொட்டும் பாலைநிலத்தில் செல்கிறேன். எருது பூட்டி நிலத்தை உழும் உழவர் மாட்டை அதட்டி ஓட்டும் 'தெள்விளி' ஊரில் கேட்கும். அதைக் கேட்கும்போது என் காதலி மாயோள் தோள் வாடி வருந்துவாளோ! என்று தலைவன் பொருளீட்டச் செல்லும் வழியில் நினைக்கிறான். - அகநானூறு 41.

நெய்தலை மிதிக்கும் அலவன்

மாலை வேளையில் நண்டு நெய்தல் பூவை மிதிக்கும் சேர்ப்பன் அவன். வளையல் உடைந்தாலும் பரவால்லை. அவனை ஆரத் தழுவு என்கிறது இந்த ஊர். அவனைத் தழுவினால் அலர் தூற்றுமே! என்ன செய்வது என்று தோழி, தலைவியிடம், தொலைவில் காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்குமாறு சொல்கிறாள். - நற்றிணை 239

நெய்தல் மேல் ஏறும் நேமி

துறைவ! நீ இரவில் வந்துசெல்கிறாய். உன் தேர் வரும்போது ஒலிக்கும் மணியோசை விளரிப்பண்ணாக (இரங்கல் பண்ணாக) இருக்கிறது. அந்தத் தேர்ச்சக்கரம் ஏறிய நெய்தல் கொடிபோல் இவள் உன் பிரிவால் வாடிக்கிடக்கிறாள். நம் பகைவர்களுக்கு மகிழ்ச்சி தரும்படி இப்படு வந்து போகலாமா? (மணந்துகொள்ள வேண்டாமா?) என்கிறாள் தோழி. - குறுந்தொகை 336

பன்னாள் வாழலேன்

மால்ப்பொழுது வந்தால் எனக்கும் காதல் பிணி(நோய்) வந்துவிடுகிறது. ஊர்மக்கள் இந்தப் பிணிக்குக் காரணம் அறியாமல் வேறு காரணம் கூறுகின்றனர். எனவே நான் இனி நலநாள் உயிர்வாழ முடியாது - என்கிறாள் தலைவி. (இதனைக் கேட்டுக்கொண்டிருக்கும் தலைவன் விரைந்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது கருத்து) - நற்றிணை 117
"https://tamilar.wiki/index.php?title=குன்றியனார்&oldid=12420" இருந்து மீள்விக்கப்பட்டது