குஞ்சிதம் குருசாமி

குஞ்சிதம் குருசாமி அம்மையார் (சூலை 12, 1909 - சூலை 30, 1961) திராவிட இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பெண் செயற்பாட்டாளர்.

இயற்பெயர்/
அறியும் பெயர்
குஞ்சிதம் குருசாமி
பிறந்ததிகதி (1909-07-12)12 சூலை 1909
இறப்பு சூலை 30, 1961(1961-07-30) (அகவை 52)
தேசியம் இந்தியர்
அறியப்படுவது திராவிட இயக்கத்தின் பெண் செயற்பாட்டாளர், மேடைப்பேச்சாளர்
பெற்றோர் திருவாரூர் சுப்பிரமணியம்[1]
துணைவர் குத்தூசி குருசாமி
பிள்ளைகள் கு. கு. இரஷ்யா, கௌதமன்

வாழ்க்கைக் குறிப்பு

குஞ்சிதம் டி. சுப்பிரமணிய பிள்ளை – தங்கம்மாள் தம்பதிகளுக்கு தலைமகளாக சென்னையில் பிறந்தார். சென்னை ஜார்ஜ் டவுனில் தொடக்கக் கல்வி பயின்றார். பள்ளி இறுதித் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார்.[2] இராணி மேரி கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்று, பல்வேறு பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றி இந்தியாவிலேயே முதல் கல்வியதிகாரியாகப் பணியாற்றியவர்.

‘ரிவோல்ட்’ எனும் ஆங்கில இதழின் இதழாசிரியராக இருந்த குருசாமி என்பவரை 08.12.1929 இல் பெரியார் – நாகம்மையார் முன்னிலையில் கலப்புத் திருமணம் செய்து கொண்டார், இதுவே முதல் சுயமரியாதைத் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவரும் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால், கணவரின் கொள்கைக்கேற்ப தாலி, குங்குமம் முதலியவற்றைத் துறந்தார். இவர் பல சுயமரியாதை இயக்க மாநாடுகளுக்கு கணவருடன் இணைந்து சொற்பொழுவுகள் பல நிகழ்த்தியும், சுயமரியாதை மாநாடுகளுக்கு தலைமைப் பொறுப்பேற்று சிறப்புற நடத்தியும் சுயமரியாதைக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றார்.

சமூகத்தைப் பிடித்திருக்கும் விதவைத் தன்மை, பாலிய மணம், கல்யாணம் என்ற பெயரால் பெண்களை விற்றல் முதலான கொடுமைகள் ஒழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் படித்தாலொழிய முடியாது என 27.02.1959 ல் வானொலியில் உரையாற்றினார். சொத்துரிமையும், படிப்புரிமையும் தந்தாலே பிற உரிமைகள் பெண்களுக்குத் தானாகவே கிடைத்துவிடும் என்று சேலம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மாநாட்டின்போது (1933) பேசினார். மேலும் மற்றுமொரு சுயமரியாதை மாநாட்டில் “நமது பெண்களைச் சுற்றி இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும் மதம் என்ற சங்கிலியை அவிழ்த்து விடுவோமானால் அவர்கள் உலகில் அரிய பெரிய காரியங்களைச் சாதிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை” எனக்குறிப்பிட்டார். (ஸ்ரீரங்கம் சுயமரியாதை மாநாடு, 1933)

ஆதி திராவிடர்களுக்கு இலவசக் கல்வி கொடுக்கவும், கடவுளின் பெயரால் செய்யப்படும் வீண் செலவுகளைத் தவிர்த்து, ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு துணி, புத்தகம் முதலியவற்றை வாங்கிக் கொடுக்கவேண்டும். வாண வேடிக்கைக்காக விரயமாகும் பணத்தைச் சுகாதாரத்தைப் போதிக்கும் காண்காட்சிகள் அமைக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். தெய்வங்களுக்காகச் செலவிடப்படும் பணத்தில் நூலகங்களும், மருத்துவமனைகளும் அமைக்கப்பட வேண்டும் என்பன போன்ற முற்போக்குச் சிந்தனைகளை முன்வைத்துப் போராடினார். புரோகிதர்களை எதிர்த்தார். பால்ய விவாகம், பெண்ணடிமை முதலானவற்றைச் சாடினார். “ஜாதகம் சரியாயிருப்பதாக ஒரு பெண்ணை ஒரு கழுதைக்குக் கட்டிக் கொடுப்பதா” என்று கேட்டு ஜோதிட மூட நம்பிக்கையை எதிர்த்தார். அதுமட்டுமல்லாமல் எல்லா சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் மதங்களே காரணம் அவை ஒழிய வேண்டும் என முழக்கமிட்டார். கலப்பு மணம், விதவை மணம், காதல் மணம் முதலியவற்றை ஆதரித்தார். பாரதிதாசன் கவிதைகளைத் தொகுத்து முதன்முதலில் தொகுப்பாக வெளியிட்டது இவரது குறிப்பிடத்தக்க இலக்கியப்பணி. பெண்கல்வி, சமூகச்சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக உழைத்து சுயமரியாதை இயக்க வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றார். அவர் 30.07.1961 இல் புற்றுநோயின் காரணமாக மறைந்தார்.[3]

இவரது உரைகள் குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள் என்ற பெயரில் வாலாசா வல்லவன் அவர்களால் தொகுக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டது.

உசாத்துணை

  1. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்; பகுதி 1; பக்கம் 314-316; 568
  2. முன்னுரை (2007). குஞ்சிதம் குருசாமியின் சொற்பொழிவுகள். சென்னை: தமிழ்க் குடியரசு பதிப்பகம். பக். 3. 
  3. ச. சிவகாமி (ப.ஆ) இருபதாம் நூற்றாண்டின் சாதனைத் தமிழ்ப் பெண்மணிகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2009.

}

"https://tamilar.wiki/index.php?title=குஞ்சிதம்_குருசாமி&oldid=23864" இருந்து மீள்விக்கப்பட்டது