கிள்ளிமங்கலங் கிழார்

கிள்ளிமங்கலம் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாக 4 பாடல்கள் உள்ளன. அவை குறுந்தொகை 76, 110, 152, 181 ஆகியவை. இவரது மகனார் சேரகோவனார் பாடல் ஒன்றும் உள்ளது.

குறுந்தொகை 76 பாடல்

  • குறிஞ்சித்திணை

காந்தள் வேலி ஓங்குமலை நன்னாட்டுச்
செல்வல் என்பவோ கல்வரை மார்பர்
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள்ளிலை
பெருங்களிற்றுச் செவியின் மானத்தை

இத்தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.

குறுந்தொகை 76 தரும் செய்தி

அவர் கல்வரை (=கல்மலை) போன்ற மார்பை உடையவர். வேலி முள்ளில் காந்தள் பூத்திருக்கும் மலைநாட்டைக் கடந்து செல்லப் போகிறேன் என்கிறார். யானை சேம்பு இலை போன்ற தன் காதை ஆட்டிக்கொள்ளும் கடும்பனிக் காலத்தில் நான் நடுங்கித் துன்புறுவதை எண்ணாமல் செல்லப்போகிறேன் என்கிறார்.

தலைவன் பிரிவை முன்கூட்டியே அறிந்த தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

உவமை

யானைக்காது சேப்பங்கிழங்குச் செடியின் இலை போல் இருக்கும்.

குறுந்தொகை 110 பாடல்

  • முல்லைத்திணை

வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யாராகியரோ தோழி நீர
நீலப் பைம்போது உளரிப் புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை நாட்டி
நுண்முள் ஈங்கை செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம்மலர் உதிரக் தண் என்று
இன்னா எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே.

குறுந்தொகை 110 தரும் செய்தி

அவர் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? அவர் நமக்கு யார்? வாடை நீரில் பூக்கும் நீல மலரை உலரச் செய்கிறது. புதரில் மயில் பீலி போல் பூத்த கருவிளைப் பூவை நடுங்கி ஆடும்படி செய்கிறது. முள்ளில் பூத்திருக்கும் ஈங்கைப் பூவை உதிரும்படி செய்கிறது. தண் என்று வீசி நடுங்கச் செய்கிறது. இந்த நிலையில் என்ன ஆனால் என்று எண்ணாத அவர் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? அவர் நமக்கு யார்? - இவ்வாறு தலைவி தோழியிடம் கூறுகிறாள். (தோழி தலைவியிடம் கூறி அவளை ஆறுதல் கொள்ளச் செய்கிறாள் என்றும் கொள்வர்)

குறுந்தொகை 152 பாடல்

  • குறிஞ்சித்திணை

யாவதும் அறிகிலர் கழறுவோரே
தாயில் முட்டை போல உள் கிடந்து
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம் காதலர் கையற விடினே.

குறுந்தொகை 152 தரும் செய்தி

பிரிவைப் பொறுத்துக்கொள் என்று தோழி தலைவியை வேண்டினாள். அப்போது தலைவி தோழிக்குச் சொல்கிறாள்.

பொறுத்துக்கொள் என்று சொல்பவர்களுக்கு என்ன தெரியும்? தாய் வயிற்றில் இருக்கும் முட்டை எப்படி இருக்கும் என்று தாய்க்குத்தான் தெரியும். கருமுட்டை அதுவாகவே வேளிவந்துதான் உடையவேண்டும். ஆமை முட்டைநிட்டு மணலில் புதைத்துவிட்டுச் செல்வது போல அவர் சென்றுவிட்டார். இனிப் பொரியும் குஞ்சுதான் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். (நானும் என்னை நானே காப்பாற்றிக்கொள்ளும் நிலையில்தான் உள்ளேன்)

குறுந்தொகை 181 பாடல்

  • திணை - மருதம்

இது மற்று எவனோ தோழி! துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி
இரு மருப்பு எருமை ஈன்று அணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஇல் பைம்பயிர் ஆரும் ஊரன்
திருமனைப் பல்கடம் பூண்ட
பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே.

குறுந்தொகை 181 தரும் செய்தி

உழவன் எருமைக் கன்றைக் கட்டிவைப்பான். தாய் எருமையை மேய விடுவான். அந்த எருமைக்கு மேய்ச்சல் ஒரு கண். தன் கன்று ஒரு கண். அல்லது மேய்ச்சல் ஒரு நினைவு. தன் கன்று ஒரு நினைவு. கிழத்தியின் கணவன் கிழவனும் தாய் எருமையைப் போலத்தான் அவ்வப்போது சென்று (பரத்தையை) மேய்ந்துவிட்டு மீள்கிறான். பக்கத்தில் உள்ள விளைச்சல் பயிரை எருமை மேய்ந்துவிட்டு மீள்வது போல இவன்(கிழவன்) அவ்வப்போது மேய்ந்துவிட்டு மீள்கிறான்.

காரணம்!

நான் திருமனையில் வாழ்கிறேன். பல கடமைகள் பூண்டவளாக வாழ்கிறேன். பொறுப்புள்ள பெருமுது பெண்ணாக உள்ளேன். அதனால் அவன் தன் விருப்பம் போல் சென்று மேய்ந்துவிட்டு வருகிறான்.

இவ்வாறு மனைக் கிழத்தி ஒருத்தி தன் கணவனோடு வாழும் தன் வாழ்க்கையை எண்ணிப் பார்த்துத் தன் தோழியிடம் தன் கணவனை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறாள். அவன் மேய்ச்சலுக்குப் பொறுப்பு தன் கடமை உணர்வுதான் என்கிறாள்.

"https://tamilar.wiki/index.php?title=கிள்ளிமங்கலங்_கிழார்&oldid=12403" இருந்து மீள்விக்கப்பட்டது