கிளேபாங் தமிழ்ப்பள்ளி

கிளேபாங் தமிழ்ப்பள்ளி மலேசியா பேராக் மாநிலத்தில் ஈப்போ புறநகர்ப் பகுதியில் உள்ளது. ஈப்போ மாநகரத்தில் இருந்து சிம்மோர் நகரத்திற்குச் செல்லும் வழியில் கிளேபாங் எனும் இடத்தில் இப்பள்ளி அமைந்து உள்ளது. கிளேபாங் தமிழ்ப்பள்ளி நூறு ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. மலேசியாவின் முன்னோடிப் பள்ளிகளில் ஒன்று.

கிளேபாங் தமிழ்ப்பள்ளி
SJK(T) Klebang, Chemor
அமைவிடம்
சிம்மோர், ஈப்போ, மலேசியா
தகவல்
வகைஇரு பாலர் பயிலும் பள்ளி
குறிக்கோள்கல்வியே வாழ்வு
தொடக்கம்1914
நிறுவனர்ஆண்டியப்பன்
பள்ளி மாவட்டம்கிந்தா
கல்வி ஆணையம்மலேசியக் கல்வி அமைச்சின் பகுதி உதவி
பள்ளி இலக்கம்ABD 2175
தலைமை ஆசிரியர்திரு.பழனிச்சாமி
தரங்கள்1 முதல் 6 வகுப்பு வரை
மாணவர்கள்478
கல்வி முறைமலேசியக் கல்வித்திட்டம்

கிளேபாங் தோட்ட மாரியம்மன் ஆலயத்தில் 1914 ஆம் ஆண்டு, ஓர் ஒண்டுக் குடிலாகத் தொடங்கிய ஒரு தமிழ்ப்பள்ளி இன்று ஓர் ஆல விருச்சகம் போல வளர்ந்து வேர் விட்டு நிற்கிறது. மலேசிய தேசிய விமான நிறுவனமான ‘மாஸ்’ இப்பள்ளியைத் தத்து எடுத்து ஆண்டுதோறும் 100 மாணவர்களுக்கு பல வகையான அன்பளிப்புச் சேவைகளைச் செய்து வருகின்றது.

வரலாறு

இருபது மாணவர்களுடன் தொடங்கிய கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் இப்போது 500 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். மலேசியாவில் பல ஆசிரியர்கள், மருத்துவர்கள், விமானிகள், தொழில்துறை நிர்வாகிகள், அறிவியல் வல்லுநர்களை உருவாக்கிய ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம் இந்தக் கிளேபாங் தமிழ்ப்பள்ளி.

1900 ஆம் ஆண்டுகளில்

1900களில் சிம்மோர் வட்டாரத்தில் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. பிரித்தானிய, பிரெஞ்சு நிறுவனங்கள் காடுகளை அழித்து ரப்பர் தோட்டங்களைப் போட்டன. அத்தோட்டங்களில் வேலை செய்ய தமிழர்கள் சஞ்சித் தொழிலாளர்களாகத் தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டனர்.

அப்படி வந்தவர்களில் பலர் சுங்கை சிப்புட், கோலா கங்சார், செங்காட் கிண்டிங், தஞ்சோங் ரம்புத்தான், கந்தான், சிம்மோர், சத்தியசாலா போன்ற இடங்களில் இருந்த ரப்பர் தோட்டங்களுக்குச் சென்றனர். அவர்களில் சிலர் கிளேபாங் தோட்டத்தில் குடியேறினர்.

மாரியம்மன் ஆலயத்தில் வகுப்புகள்

முதன் முதலில், 1903 ஆம் ஆண்டு கிளேபாங் தோட்டத்தில் ஒரு கோயிலைக் கட்டினர். அதன் பெயர் மகா மாரியம்மன் ஆலயம். அந்தக் கட்டத்தில் அவர்களுடைய பிள்ளைகள் படிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடம் இல்லாமல் போனது. அதனால் மாரியம்மன் ஆலயத்தில் தடுப்புகள் போட்டு வகுப்பறைகளை உருவாக்கினார்கள்.

1914 ஆம் ஆண்டு 20 மாணவர்களுடன் மகா மாரியம்மன் ஆலயத்தில் ஒரு பள்ளிக்கூடம் உருவானது. அந்த மாணவர்களுக்கு ஒரே ஓர் ஆசிரியர். அவர் தான் தலைமை ஆசிரியரும் கூட. அவரின் பெயர் திரு.ஆண்டியப்பன். கிளேபாங் தமிழ்ப்பள்ளியின் தோற்றுநர். இவர் 12 ஆண்டுகள் அப்பள்ளியில் பணி புரிந்தார். 1927 ஆம் ஆண்டு ஜி.சிவானந்தம் என்பவர் அடுத்த தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கோலகங்சார் சாலைக்கு இட மாற்றம்

1952 ஆம் ஆண்டு கிளேபாங் தோட்டத்தில் இருந்து அப்பள்ளி கோலகங்சார் சாலையின் அருகாமையில் உள்ள ஓர் இடத்திற்கு மாற்றம் செய்யப் பட்டது. 1967 ஆம் ஆண்டு கிளேபாங் தமிழ்ப்பள்ளி செப்பனிடப் பட்டது. அதே ஆண்டு கிளேபாங் தோட்ட மேலாளர் ஜே.எப்.போலன்லட் என்பவர் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயரத் தொடங்கியது. அதனால் கூடுதலான வகுப்பறைகளை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடுதலான வகுப்பறைகளை உருவாக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

புதிய கட்டிடம்

புதிய கட்டிடம் கட்டுவதற்கு கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் ஒரு கட்டிடச் செயற்குழு உருவாக்கப் பட்டது. அக்குழுவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. அக்குழுவிற்கு முன்னாள் தலைமையாசிரியர் இரா.மாணிக்கம் தலைமை தாங்கினார்.

புதிய இரண்டு மாடிக் கட்டிடம் கட்டப்படுவதற்கு மலேசியப் பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு மிகுந்த உதவிகளைச் செய்தார். அதன்படி 1994 திசம்பர் 3 ஆம் நாள் ஒரு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அதை முறைப்படி டத்தோ சாமிவேலு 1995 ஆம் ஆண்டு சூலை 16 இல் திறந்து வைத்தார். அப்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இரா.மாணிக்கம் என்பவர் இருந்தார்.

கிளேபாங் தமிழர்களின் நனவுகள்

அழகான அந்தப் புதிய கட்டிடம் கோலா கங்சார் சாலையில் பயணிக்கும் மற்ற இனச் சமூகத்தைச் சார்ந்த சீனர்கள், மலாய்க்காரர்களை மறுபடி பார்க்க வைக்கும் தமிழர்களின் ஓவியமாகத் திகழ்கின்றது. இக்கட்டிடத்தில் 13 வகுப்பறைகள், பல்லூடக அறை, கணினி மையம், பள்ளி நூலகம் அமைந்து உள்ளன. இந்தக் கட்டிடம் இப்போது கோலா கங்சார் சாலையில் இருக்கும் தாமான் கிளேபாங் ஜெயாவில் இருக்கின்றது.

2001ஆம் ஆண்டு மலேசியக் கல்வி அமைச்சினால், இப்பள்ளி ‘பி’ தகுதியிலிருந்து ‘ஏ’ தகுதிக்கு உயர்த்தப் பட்டது. இப்பள்ளியில் இப்போது 478 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 28 ஆசிரியர்களும், 5 பொது அலுவலர்களும் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப் படுகின்றது.

கிளேபாங் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்

  • திரு.ஆண்டியப்பன் (1914–1926)
  • திரு.ஜி.சிவநாதன் (1927–1968)
  • திரு.எஸ்.சோமசுந்தரம் (1969–1986)
  • திரு.வி.வைரவன் (1986–1987)
  • திரு.எஸ்.குழந்தைசாமி (1987–1992)
  • திரு.இரா.மாணிக்கம் (1993–1997)
  • திரு.கு.பழனிசாமி (1997–2010)
  • திரு.எம்.சின்னசாமி (2011ல் இருந்து)

மலேசியாவில் 523 தமிழ்ப்பள்ளிகள்

மலேசியாவில் 523 தமிழ்ப்பள்ளிகள்மே மாதம் 2011 உள்ளன. இவற்றில் 137 தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே அரசாங்கத்தின் முழு உதவிகளைப் பெறுகின்றன். மற்ற 386 தமிழ்ப்பள்ளிகள் அரசாங்கத்தின் பகுதி உதவிகளைப் பெறுகின்றன. அதாவது 60 விழுக்காடு மான்யங்களைப் பெறுகின்றன. அந்த 523 தமிழ்ப்பள்ளிகளில் ‘பி’ தகுதியிலிருந்து ‘ஏ’ தகுதிக்கு உயர்த்தப் பட்ட பள்ளிகள் மொத்தம் 42 தான்.

2000 ஆம் ஆண்டுகளில் கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கும் தாமான் கிளேபாங் ஜெயா நில மேம்பாட்டாளருக்கும் இடையே நில உரிமைப் போராட்டம் நடைபெற்றது. கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை தாமான் கிளேபாங் ஜெயா நில மேம்பாட்டாளர் நிறுவனம் ஏ.எம்.ஸெட் அபகரித்துக் கொண்டதாக வழக்குத் தொடரப் பட்டது.

கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கு 3.5 ஏக்கர் நிலம்

அந்த வழக்கின் தீர்ப்பு 03.12.2002ல் வழங்கப் பட்டது. அந்தத் தீர்ப்பை நீதிபதி டத்தோ பாலியா யூசோப் வாகி வழங்கினார். அந்த வழக்கில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றது. அதன்படி 3.5 ஏக்கர் நிலம் கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கு மறுபடியும் கிடைத்தது. அந்த நிலத்தில் மேலும் ஆறு வகுப்பறைகள் கட்டப் பட்டன. கிளேபாங் தமிழர்களுக்கு கிடைத்த மற்றும் ஒரு சாதகமானச் சுவடு.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கிளேபாங்_தமிழ்ப்பள்ளி&oldid=26853" இருந்து மீள்விக்கப்பட்டது