கா. ஸ்ரீ. ஸ்ரீ

காஞ்சிபுரம் சிறீரங்காச்சாரியார் சிறிநிவாசாச்சாரியார் அல்லது பொதுவாக கா. ஸ்ரீ. ஸ்ரீ (திசம்பர் 15, 1913 - சூலை 28, 1999) தமிழக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். பிரபல மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் பல புதினங்களையும், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

கா.ஸ்ரீ.ஸ்ரீ உத்திரப் பிரதேசத்தில் பிருந்தாவனம் என்ற ஊரில் 1913 ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தை ஸ்ரீரங்காச்சாரியார், தாய் ருக்குமணி அம்மாள் தமிழ்நாடு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை இந்தி, தெலுங்கு, வங்க மொழிகள் அறிந்தவர், கா. ஸ்ரீ. ஸ்ரீ தந்தையிடம் சிறு வயதிலேயே வடமொழி காவியங்களையும், நாடகங்களையும், வைணவ நூல்களையும் பயின்று வந்தார். தந்தையார் பம்பாயில் லட்சுமி வெங்கடேசுவர அச்சகத்தில் பணியாற்றிய போது கா. ஸ்ரீ. ஸ்ரீ. வீட்டிலேயே தமிழ் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். மராட்டிப் பள்ளியில் சேர்ந்து ‌ மராட்டியும் ஆங்கிலமும் பயின்றார்[1].

இள வயதிலேயே சுகவீனமுற்றதால், சென்னைக்கு வந்து தாயின் ஆதரவில் பச்சயப்பன் உயர்நிலப்பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தில் ஒரு வேத பண்டிதரிடம் வேதக் கல்வி பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்தும் 1930 ஆம் ஆண்டு இலட்சுமி அம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

சென்னையில் இந்திப் பிரச்சார சபை அச்சகத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். சில மாதங்களில் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். நாள் தோறும் அச்சுக் கூட வேலை முடிந்ததும், பெரம்பூரில் இந்தி வகுப்பு நடத்துவார்[1].

1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகாத்மா காந்தி சென்னை வந்தார். அப்போது, உ. வே. சாமிநாதையர் எழுதிய தமிழ் வரவேற்புரையை இந்தி மொழியாக்கம் செய்தார். இதன் மூலம் கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகன்னாதனின் அறிமுகம் கிடைத்தது. இதை தொடர்ந்து கலைமகள் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார்[1].

தமிழகக் காண்டேகர்

1940களில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் இலக்கிய ஆக்கங்களை மொழிபெயர்க்கத் தொடங்கினார். காண்டேகரின், எரிநட்சத்திரம், இருதுருவங்கள், மனோரஞ்சிதம், வெண்முகில், இருமனம், வெறுங்கோயில், சுகம் எங்கே, முதற்காதல், கருகிய மொட்டு, கிரௌஞ்சவதம், கண்ணீர், யயாதி, அமுதக்கொடி, ஆகிய 13 நாவல்களும் 150 சிறுகதைகளும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழகக் காண்டேகர் என்றே இவர் அழைக்கப்பட்டார்.[2] காண்டேகரின் பல நூல்கள் முதன் முதலாக தமிழில் வெளியான பிறகே பிற மொழிகளில் வெளியாயின[3].

ஏனைய மொழிபெயர்ப்புகள்

கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழ்ப் படைப்புகளையும் மராத்தி, இந்தி மொழிகளில் மொழிப்பெயர்த்துள்ளார். ஆர். சூடாமணியின் சிறுகதையை மராத்தியில் மொழிபெயர்த்தார். மாதவையா முதல் சிதம்பர சுப்பிரமணியன் வரையில் பன்னிரண்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள், பாரதியாரின் தராசு ஆகியவற்றை இந்தியில் மொழிபெயர்த்தார்[1].

மறைவு

காண்டேகரின் சொந்த ஊரான மகாராட்டிராவின் நாசிக் நகரத்தில், கா. ஸ்ரீ. ஸ்ரீ 1999 சூலை 28 இல் தனது 86-வது அகவையில் காலமானார்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கா._ஸ்ரீ._ஸ்ரீ&oldid=3793" இருந்து மீள்விக்கப்பட்டது