காளை அல்லது எருது என்பது கழுத்திற்கும், முதுகிற்கும் நடுவில் உயர்ந்த திமிலும், வாயிலிருந்து முதல் முன்னங்கால் வரை தொங்கு சதையும் கொண்டிருக்கும் ஆண் மாடுகளாகும்.

வேளாண் பெருங்குடிமக்கள் காளைகளை இனப் பெருக்கத்திற்கும், நிலத்தை உழுவதற்கும், போக்குவரத்திற்கும், சுமை ஏற்றவும், நீர் இறைப்பதற்கும் அதிகம் பயன்படுத்தினர். ஆண்டிற்கு ஒரு முறை ஏறுதழுவல், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீரவிளையாட்டிற்காக காளைகளைப் பழக்கப்படுத்துகின்றனர். கிராமக் கோயில்களில் காளை மாட்டை நேர்த்திக்கடனாக விட்ட கோயில் காளைகளை யாரும் எவ்வகையிலும் தீங்கு செய்வதில்லை.

பால் உற்பத்தியாளர்கள், பொதுவாக காளைகளிடமிருந்து பால் கறக்க இயலாத காரணத்தினாலும், அவைகளுக்கு தீனி போடுவதற்கு தங்களின் பொருளாதாரம் இடம் அளிக்காத காரணத்தினாலும். பசுக்கள் காளை அல்லது எருதுக் கன்று ஈனுவதை விரும்புவதில்லை. எனவே இளம் காளை அல்லது எருதுகளை இறைச்சிக்காக விற்று விடுகின்றனர். வசதி படைத்த வேளாண் குடி மக்கள் மட்டும், இனச்சேர்க்கைக்காகவும், போக்குவரத்து வசதிக்கும், சுமை ஏற்றுவதற்கும் மட்டுமே காளை மாடுகளை வளர்க்கின்றனர்.

உலக நாடுகளில் குறிப்பாக ஸ்பெயின், மெக்சிகோ போன்ற நாடுகளில் பாரம்பரியமாக நடைபெறும் காளைச் சண்டை உலக அளவில் மிகவும் பிரபலமானது.[1][2]

தமிழ்நாட்டின் சிறப்பு மிக்க காளையினங்கள்

காங்கேயம் காளை, உம்பளச்சேரி காளை, புளியங்குளம் காளை, பர்கூர் காளை மற்றும் தேனி மலை மாடுகள் தமிழகத்தின் பெருமையையும், மரபையும் தூக்கிப் பிடிப்பவையாகும். தமிழ் மண்ணின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த காளையினங்களில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி காளையினம் அற்றுப்போய்விட்டது.

இந்தியாவின் சிறப்பு மிக்க காளையினங்கள்

சிந்து வெளி நாகரீகத்தில் காளைச் சின்னங்கள்

 
சிந்து வெளி நாகரீக காலத்திய காளை உருவம் பொறித்த முத்திரைகள்

கி மு 3000 – 2500 ஆண்டிற்கு இடைப்பட்ட சிந்து வெளிப் பகுதிகளில் கிடைத்த பல முத்திரைகளில் காளை உருவம் பொறித்த முத்திரைகள் தொல்லியலாளர்களுக்கு அதிகம் கிடைத்துள்ளது.

சைவ சமயத்தில் காளை

 
நந்தி சிற்பம், கங்கைகொண்ட சோழபுரம்
 
அனைத்து சிவாலயங்களின் திருவிழாக்களின் போது கொடிக் கம்பத்தில் ஏற்றப்படும் காளையின் உருவம் பொறித்த கொடி

சைவ சமயத்தில் காளையை நந்தி எனப் போற்றுவர். உலகின் அனைத்து சிவாலயங்களின் சிவச் சன்னதிற்கு எதிராக காளை, நந்தி எனும் வடிவத்தில் அமைந்த சிற்பம் இருக்கும். காளை, அனைத்து சிவகணங்களுக்கும் தலைவர் எனும் முறையில் அதிகார நந்தி என அழைக்கப்படுவர். மேலும் காளையானது சிவ-பார்வதியின் வாகனமாகவும் அமைந்துள்ளதுடன், கயிலை மலையின் தலைமைக் காவலராகவும் உள்ளார். அனைத்து சிவாலயங்களின் திருவிழாக்களின் போது, கொடிக் கம்பத்தில் காளையின் உருவம் பொறித்த கொடி ஏற்றப்படுகிறது.

தமிழர் பண்பாட்டில் காளை

ஏறுதழுவல் போட்டியில் தாம் வளர்க்கும் காளையை அடக்கும் இளைஞருக்கே தம் மகளை திருமணம் செய்து வைப்பது என்பது தமிழர் பண்பாட்டின் ஒரு கூறாகும்.

அழிவின் விளிம்பை நோக்கி காளையினங்கள்

நகரமயமாதல், நவீன வாகன வசதிகள், இயந்திரமயமான வேளாண்மை, ஜல்லிக்கட்டிற்கு எதிரான போக்குகள், கிராமப்புறங்களின் காளைகளை பராமரிக்க இயலாத நிலை போன்ற காரணங்களால் காளை இனங்கள் அருகி வருகின்றன. காளைகளை இறைச்சிக்காக மட்டும் வளர்க்கும் சூழ்நிலை இந்தியாவில் உருவாகி விட்டது. சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான கார்த்திகேய சிவசேனாதிபதி போன்றவர்களால் காங்கேயம் காளைகள் இன்னும் தமிழ்நாட்டில் உயர்ப்புடன் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=காளை&oldid=13152" இருந்து மீள்விக்கப்பட்டது