காரமடை அரங்கநாதசாமி கோயில்
காரமடை அரங்கநாதசாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1] இக்கோவில் ஏறக்குறைய 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு பகுதிகளில் இருக்கும் வைணவ தலங்களில் புகழ்பெற்றது.[2]
அருள்மிகு அரங்கநாதசாமி கோவில் | |
---|---|
கோபுரம் கோபுரம் | |
ஆள்கூறுகள்: | 11°14′32″N 76°57′37″E / 11.24222°N 76.96028°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | ரங்கநாதசாமி கோவில் |
பெயர்: | காரமடை அரங்கநாதசாமி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர் |
அமைவிடம்: | கிழக்கு ரதவீதி, காரமடை, மேட்டுப்பாளையம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | மேட்டுப்பாளையம் |
மக்களவைத் தொகுதி: | நீலகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | அரங்கநாதர் |
தாயார்: | அரங்கநாயகி |
சிறப்புத் திருவிழாக்கள்: | 5 சனிக்கிழமைகள், ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி |
உற்சவர்: | வெங்கடேசப்பெருமாள் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென்னிந்திய கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டிய நாள்: | 15ம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள் |
அமைவிடம்
கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 67) உள்ள காரமடை என்னும் ஊரில் கோயம்புத்தூரிலிருந்து சுமார் 27 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[3]
வரலாறு
இக்கோயில் 15ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு. இக்கோயிலின் தலவிருச்சமாக காரை மரம் உள்ளது. கரை மரங்கள், நீர் மடைகள் நிறைந்த பகுதியாதலால் இந்த ஊர் கரைமடை என பெயர்பெற்றது.[4][5]
தொன்மம்
கருடாழ்வாரின் விருப்பத்துக்கு உட்பட்டு இத்தலத்தில் கல்யாணக் கோலத்தில் அவருக்கு காட்சியளித்தார் மகாவிஷ்ணு. பின்னர் இந்த இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். நாளடைவில் இப்பகுதி காரை மரங்கள் கொண்ட காடாக மாறியது. இந்தக் காட்டுப் பகுதியில் அருகில் உள்ள சிற்றூர்களைசே சேர்ந்த சில இடையர்கள் மாடுகளை மேய்த்துவந்தனர். அந்த மாடுகளில் ஒரு மாடு திடீரென்று பால் தருவதை நிறுத்திவிட்டது. இந்த மாட்டின் பாலை யாரோ திருடுவதாக ஐயமுற்ற இடையர் அந்த மாட்டை தீவிரமாக கண்காணித்தார்.
காட்டில் மேய்ந்து கொண்டிருந்த அந்தப் பசு ஒரு காரை மரத்தின் அடியில் நின்று அங்கிருந்த ஒரு புதர்மீது பாலை சொரிந்தது. இதனால் கோபமுற்ற இடையர் புதரை கோடாரியால் வெட்டினார். அப்போது அங்கிருந்து குருதி வெளிப்பட்டது. இதைப் பார்த்த இடையரின் கண்பார்வையும் இல்லாமல் போனது.
தகவல் அறிந்து ஊர்மக்கள் திரண்டுவந்து பார்த்தபோது, குருதி பீரிட்ட இடத்தில் பெருமாள் சுயம்புவாக இருக்கிறார் என அசரீரி ஒலித்தது. பின்னர் இடையரின் பார்வை திரும்ப வந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு அப்பகுதி மக்கள் இந்த இடத்தில் கோயில் எழுப்பினர் என்ற தொன்மக்கதை உள்ளது.[4]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் மூலவராக உள்ள அரங்கநாதர் சதுர வடிவில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். அரங்கநாத சுவாமி சன்னிதானத்துக்கு வலப்புறம் அரங்கநாயகித் தாயார் சன்னிதியும் இடப்புறம் ஆண்டாள் சன்னிதியும் முன்புறம் கருடக் கம்பமும் உள்ளன. அரங்கநாயகித் தாயார் சன்னிதிக்கு வலப்புறம் பரவாசுதேவர் சன்னிதியும் 12 ஆழ்வார்களின் திருவுருவங்களும் சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆண்டாள் சன்னிதிக்கு இடப்புறம் வீரஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
தொன்மக் கதையில் கூறப்படடதன்படி கோடாரில் வெட்டப்பட்ட சுயம்பு மூர்த்தியின் மேல் வெட்டுத் தழும்பு தற்போதும் உள்ளது என கூறுகின்றனர்.[4] இக்கோயிலில் அரங்கநாதர், அரங்கநாயகி சன்னதிகளும், ஆஞ்சநேயர், ஆண்டாள், அரங்கநாயகிதாயார். ராமானுஜர், ஆழ்வார்கள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன.
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[6] இப்பகுதியில் உள்ள வொக்கலிகா கவுடா சமூகத்தினர் குலதெய்வமாக இரங்கநாதரை வணங்கி வருகின்றனர்.
தலம் | சிறப்பு |
---|---|
தல விருட்சம் | காரை மரம் |
தீர்த்தம் | பிரம்ம, கருட மற்றும் அஷ்டதீர்த்தம் |
ஆகமம்/பூஜை | பாஞ்சராத்ரம் |
வழிபாடு
பொதுவாக பெருமாள் கோயில்களில் பக்தர்களின் தலையில் சடாரியை வைத்து ஆசிர்வதிப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் பெருமாளின் இரம்பாணத்தை வைத்து ஆசர்வதிக்கின்றனர்.[4] இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் மாசிமகம் 7வது நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. மாசி மாதம் மாசிமகம் 9வது நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.[7]
தல வரலாறு
இப்பகுதியில் அதிகமாக காரைப் பசுக்கள் மற்றும் காரை மரங்கள் இருந்ததன் காரணமாக இவ்வூருக்கு இப்பெயர் வந்தது. ஒருகாலத்தில் இங்குள்ள நாயக்கர் சமூக மக்கள் ஆடு, மாடுகளை அதிக அளவில் வைத்து இருந்தனர். அந்த கூட்டத்தில் இருந்த ஒரு காரைப் பசு தனியாக சென்று வருவதைக் கால்நடைகளை மேய்க்கக் கொண்டு சென்ற நாயக்கர் கண்டார். அவர் அம்மாட்டினைப் பின் தொடர்ந்து சென்றார். அது ஓரிடத்தில் காரைப்புதரில் பால் சொரிவதைப் பார்த்த அவர் கோபத்தில் புதரை வெட்ட ரத்தம் சொட்டியது. இதனைக் கண்ட அந்த நாயக்கர் தனது கண்பார்வையை இழந்தார். அவ்விடத்தில் கோவில் கட்டி வழிபடும்படி அசிரிரீ ஒலித்தது. அப்பசுவின் உரிமையாளருக்கும் கண்பார்வை திரும்பியது. சந்தனக் காப்பிட்டுப் பார்த்தபோது பெருமாள் சுயம்புவடிவில் காணப்பட்டார். அவ்விடத்தில் பெருமாளுக்குக் கோயில் எழுப்பப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இன்றும் பெருமாளின் மீது வெட்டுக்காயம் காணப்படுகிறது.
நம்பிக்கைகள்
விஜயநகர பேரரசின் மதுரை நாயக்க மன்னர் திருமலை நாயக்கர் கொடிய நோய் ஒன்றில் அவதிப்பட்டதாகவும் இக்கோவிலுக்கு வந்து வேண்டியதால் அந்நோய் தீர்ந்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. அந்நோய் தீர்ந்த காரணத்தால் நாயக்கர் சமுதாய மக்கள் வழிபட்டு வந்த சிறிய கோவிலை கோபுரங்கள் அமைத்து தற்போது உள்ள கோவிலை அமைத்தார். இக்கோவிலில் உள்ள காரை என்னும் ஒரு வகை மரம் தலவிருட்சமாக உள்ளது. இம்மரத்தில் கயிறு கட்டினால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் வரும் என்று நம்புகின்றனர் .
திருவிழாக்கள்
மாசி மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா, மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடகம் , ஆந்திரம் போன்ற பகுதிகளில் இருந்து பலர் இக்கோவிலுக்கு வருகின்றனர். இங்கு நடைபெறும் தேர்த்திருவிழா புகழ்பெற்றது.
மாசி மகம், புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் .
தேர்த்திருவிழா
இக்கோயிலில் மாசி மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா சிறப்பானது. இவ்விழா 12 நாட்கள் நடைபெறும். தொடக்க நிகழ்ச்சியாகத் தெருக்களில் துஷ்ட சக்திகளை விரட்ட அஷ்டபலி எனப்படும் கிராமசாந்தியும். அடுத்து துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்தினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் பெருமாள் அன்னவாகனம், சிங்கவாகனம், அனுமந்தவாகனம் எனத் திருவீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். அடுத்த நாள் பெருமாளிடம் கோபித்துக் கொண்டு அருகிலுள்ள பெட்டதாபுரம் மலையில் அமர்ந்திருக்கும் அரங்கநாயகித் தாயாரை அழைத்து வந்து ஆண்டாளுடன் யானை வாகனத்தில் தோன்றுகிறார். அதற்கடுத்த நாள் காலை திருக்கல்யாண உற்சவமும் மாலை தேர் உற்சவம் நடைபெறும். தேருக்கு அடுத்த நாள் இரவு குதிரை வாகனத்தில் பாரிவேட்டை, மறுநாள் காலை சேஷ வாகனத்தில் தெப்பத்தேர். இறுதியாகத் தாயார் மீண்டும் கோபித்துக்கொண்டு மலைக்குச் செல்லும் நிகழ்வோடு விழா நிறைவுபெறும்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
- ↑ "Karamadai Ranganathar Temple". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
- ↑ "Aranganathaswami Temple : Aranganathaswami Aranganathaswami Temple Details | Aranganathaswami - Karamadai | Tamilnadu Temple | அரங்கநாதசுவாமி". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
- ↑ 4.0 4.1 4.2 4.3 எஸ். அஸ்வின் (2016). தி இந்து பொங்கல் மலர் 2016. சென்னை: இந்து தமிழ். pp. 49–50.
- ↑ History of Karamadai Ranganathar Temple திருத்தல வரலாறு அருள்மிகு அரங்கநாதசாமி கோவில் காரமடை, பார்க்கப்பட்ட நாள் 2022-10-09
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
- ↑ "Covaipost". Covaipost (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.