காடையூர் வெள்ளையம்மாள்

காடையூர் வெள்ளையம்மாள் ( பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) கொங்குநாட்டின் நாட்டார் வாய்மொழி வரலாற்றில் பேசப்படும் வீரப்பெண்மணி,. காடையூரில் காடையீசுவரர் கோயிலில் வெள்ளையம்மாள் கோயில் உள்ளது. இந்த அம்மனை கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தினர் புனிதமாக கருதுகின்றனர்.[1]

வெள்ளையம்மாள் கதை

தமிழ்நாட்டில் கொங்குநாட்டு பகுதியில் உள்ள காங்கயம் என்ற ஊருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரும் சம்சாரிக்கு (விவசாயிக்கு) நான்கு மகன்களும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். பெண் குழந்தை பிறவியிலேயே வெளுத்திருந்தாள். அவளை வெள்ளையம்மாள் என்று பெயரிட்டு அழைத்தார்கள். பெண் வளர்ந்து கல்யாணம் செய்யும் வயதை நெருங்கினாள். சம்சாரியும் அவர் மனைவியும் பெண் கல்யாணத்தை நினைத்து கவலைப்பட்டார்கள்.

அவர் பண்ணையிலே மாடு மேய்க்க தூர தேசத்திலிருந்து ஒரு வாலிபன் வந்து வேலைக்குச் சேந்தான். அவனும் அவர்கள் சாதிய சேந்தவன் தான். ஆனால் ஏழை. வெள்ளையம்மாளின் அய்யன் (தந்தை) அந்த மாடு மேய்ப்பவனுக்கே தம் பெண்ணைத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். நினைத்த உடனேயே அவர் பையனுடைய ஊருக்குச் சென்று அவன் பெற்றோரிடம் பேசி சம்மதிக்க வைத்தார். திருமணமும் நடந்தது. வெள்ளையம்மாள் மூன்று குழந்தைகளுக்குத் தாயானாள். பின்னர் வெள்ளயம்மாளின் அண்ணன்மார்களுக்கும் திருமணம் நடந்தது. அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர். வெள்ளையம்மாளின் தந்தையின் இறுதிக் காலம் நெருங்கியது. அப்போது அவர் தம் பிள்ளைகளைக் அழைத்து வெள்ளையம்மாளுக்கு ஒரு காணி நிலம் கொண்டுக்க சொல்லி விட்டு இறந்தார். ஆனால் வெள்ளையம்மாளின் அண்ணன்கள் அவளது கணவனை வஞ்சகமாகக் கொன்று விட்டு அவளை வீட்டை விட்டுத் துரத்தி விட்டனர்.

கர்ப்பிணியாக இருந்த வெள்ளையம்மாள் தன் மூன்று குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு எங்கு போவது என்று தெரியாது மனம்போன போக்கில் சென்றாள். அப்போது ஒரு சர்தார் (அந்நாளைய முஸ்லிம் அரசாங்க உயர் அதிகாரி) குதிரையில் அமர்ந்து வருவதைக் கண்டு அஞ்சி புதரில் ஒதுங்கினாள். சர்தார் அவளைப் பார்த்தவுடன் நின்று விசாரித்து அவள் அனாதை நிலையைக் கண்டு இரக்கம் கொண்டார். “நான் வரி வசூலுக்காக அவசரமாக சென்று கொண்டிருக்கிறேன். திரும்பி வந்ததும் உன்னுடைய கஷ்டத்தைத் தீர்த்து வைக்கிறேன். அதுவரை பக்கத்தில இருக்கும் கோட்டையில் பத்திரமாக இரு” என்று ஆறுதல் சொல்லி, அவளைக் கோட்டையில் தங்க ஏற்பாடு செய்து வரி வசூலிக்கச் சென்றார். பல மாதங்கள் கழிந்தன, வெள்ளையம்மாளுக்குக் குழந்தை பிறந்தது. திரும்பிய சர்தார் வெள்ளையம்மாளை அவளது ஊருக்கு அழைத்துச் சென்றார். வெள்ளையம்மாளின் அண்ணிகள் அவளை அவதூறாகப் பேசினர். அவள் ஒரு விபச்சாரி என்று ஏசினர். வெள்ளையம்மாள் சாதி கெட்டு விட்டதால் அவளுக்கு நிலம் தர அவளது அண்ணன்மார்கள் மறுத்தனர்.

இதக்கேட்ட வெள்ளையம்மாள தான் கடவுள் சாட்சியா எந்தத் தவறும் செய்ய வில்லை. இதை எங்கே வேண்டுமென்றாலும் சத்தியம் செய்வேன் என்று சொன்னாள். அவளது அண்ணன்கள் வெள்ளையம்மாள் மூன்று சத்தியங்கள் செய்தால் நாங்கள் எங்கள் நிலம் எல்லாவற்றையும் வெள்ளையம்மாளுக்கே கொடுத்துவிடுகிறோம், அப்படிச் செய்யாவிட்டால் இவள் தீக்குளிக்க வேண்டும் என்று கூறினர். அந்த சத்தியங்கள்:

  1. காளமாட்டை ஏரிலோ அல்லது வண்டியிலோ பூட்டிவதற்கு வெடத்தலாமரத்தில் நுகத்தடி செய்து வைத்திருப்பர் வச்சிருப்பாங்க. இது நல்லா முத்தி காய்ந்திருக்கும். அந்த நுகத்தடியை மண்ணில் நட்டு தண்ணீர் ஊற்றினால் அது துளிர் விடவேண்டும்
  2. அந்த ஊர்க்கோவிலில் நிறுத்தியிருக்கும் மண் குதிரைக்கு தண்ணீர் தெளித்தால் அது தலையைக் குலுக்கி கனைக்க வேண்டும்.
  3. இதற்கு தேவையான வேண்டிய தண்ணீர் சுடாத பச்சை மண் குடத்தில் எடுத்து வரவேண்டும். அப்போது அந்த மண்குடம் கரையாமல் இருக்க வேண்டும்.

இதைக்கேட்ட சர்தார் வெள்ளையம்மாளிடம் இவர்கள் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள். நீ இதற்கு ஒப்புக்கொள்ளாதே என்று கூறினார். ஆனால் வெள்ளையம்மாளோ, நான் பதிவிரதை, நான் இந்தச் சத்தியங்களைச் செய்வேன் என்று கூறினாள். அவ்வாறே செய்தும் காட்டினாள்.

வெள்ளையம்மாளின் அண்ணன்மார்கள் நால்வரும் சர்தாரிடம் வந்து எங்கள் சொத்து அனைத்தையும் வெள்ளையம்மாளுக்கே கொடுத்து விடுகிறோம் என்று சொல்லி ஊரை விட்டுச் சென்றனர். சர்தாரும் வெள்ளையம்மாளுக்கு வாழ்த்து சொல்லிட்டு தன் ஊருக்குப் போனார்.[1][2][3][4]

முழுக்காதன் குலம்

வெள்ளையம்மாள் பல காலம் தன் மக்களுடன் வாழ்ந்து விட்டு பின்னாடி தெய்வமானாள்.அப்படி அவள் உயிருடன் இருக்கும் போது , தன் குல குருவையும் ஊர் பெரியோர்களையும் அழைத்து தனக்கு நீதி கிடைக்கச்செய்த சர்தாருக்கு நன்றியாக, காலம் உள்ளவரை நமது பரம்பரைகள் ஏதாவது செய்யவேண்டும் எனக்கூறி கீழ்க்கண்ட முடிவுகளை எடுக்கிறார்கள்., இனிமேல் தன் குலத்தில் வரும் ஆண்மக்கள் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை முஸ்லீம்கள் போல காதுகுத்தாமல் இருந்து, பின் இரண்டு குழந்தைகள் ஆன பின் கணவன் மனைவி இருவரும் இன்னொரு திருமணச்சீர் போன்ற எழுதிங்கள் சீர் செய்து, அடுத்த நாள் குழந்தைகளுக்கு காது குத்தவேண்டும் என்று முடிவு செய்தார்கள். இந்தச்சீர் தான் இன்றும் முழுக்காதன் கூட்டத்தில் எழுதிங்கள் சீர் செய்து காது குத்தும் பழக்கம் தொடர்கிறது. அவளுடைய வம்சாவளி தற்காலத்தில் வெள்ளாளக் கவுண்டர் இனத்தில் முழுக்காதன் குலம் என்று அழைக்கப்படுகிறார்கள். வெள்ளாளக் கவுண்டர்களில் முழுக்காதன்குலம் என்பது ஒரு பிரிவு. மற்ற பிரிவினரைக் காட்டிலும் இந்தக் குலத்துக்காரங்களுக்கு வெள்ளாள இனத்தில் அதிக மதிப்பு உண்டு. காரணம் இவர்கள்தான் திருமணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள். இந்த குலப்பெயர் வந்ததுக்குக் காரணம் இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காது குத்தும்போது வெகு விமரிசையாக சீர் செய்து காது குத்துவதாகும். இவர்களுக்குத்தான் காது முழுதானதாகக் கருதப்படும். எனவே இவர்கள் முழுக்காது உள்ளவர்கள் என்று பட்டம் பெற்றவர்கள்.

இவர்களுக்கு முழுகாத குலம், பொருளந்தை குலம், பெறழந்தை, பிறழந்தை, பொருள்தந்த என மற்ற பெயர்களும் கூறப்படுகின்றன. வெள்ளையம்மன் சாபமிட்டதால் வட்டமலை ஆற்றில் வெள்ளம் வந்து மூன்று சகோதரர்களின் குடும்பத்தை அளித்ததாகவும், வெள்ளத்தால் முழுகாத இனமே ”முழுகாத இனம்” என கூறப்படுவதாகவும் அறியப்படுகிறது.

குலதெய்வம் கோயில்

முழுக்காதன் குலத்துக்கு குலதெய்வம் வெள்ளையம்மாள் தான். இந்தத் தெய்வத்துக்கு கோவை மாவட்டம் காங்கயம் பக்கத்தில காடையூரில் உள்ள பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி உள்ளது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "காடையூர் வெள்ளையம்மாள்". Tamil Wiki (in English). 2022-07-19. பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
  2. "வெள்ளையம்மா சரித்திரம் | Santhipriya Pages" (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
  3. jeyamohan (2022-07-19). "காடையூர் வெள்ளையம்மாள்". எழுத்தாளர் ஜெயமோகன் (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
  4. "காடையீசுவரர் பங்கசாட்சி வெள்ளையம்மாள் அறக்கட்டளை வெளியிட்ட புத்தகங்கள்". www.viruba.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=காடையூர்_வெள்ளையம்மாள்&oldid=131705" இருந்து மீள்விக்கப்பட்டது