காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில்

காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் (மாகாளேசம்) என்றறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், இராகு-கேது பூஜித்த தலமும், இராகு - கேது பரிகார தலமுமாக அறியப்பட்ட இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

காஞ்சிபுரம் மாகாளேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் மாகாளேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாகாளேஸ்வரர்.

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: மாகாளேசுவரர்.
  • வழிபட்டோர்: மாகாளன் என்னும் பாம்பு.

தல வரலாறு

காளத்தியில் மாகாளன் என்னும் பாம்பு வீடு பேற்றையடைய வேண்டி வழிபட்டுக்கொண்டிருந்தது. இறைவன் பணித்தமையால், அப்பாம்பு காஞ்சியை அடைந்து தன் பெயரில் சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபட்டு, மீண்டும் காளத்தியை அடைந்து வீடு பேற்றையடைந்ததென்பது தல வரலாறாகும்.[2]

தல விளக்கம்

மகாளேசம், மாகாளன் என்னும் பாம்பு திருக்காளத்தியில் பூசனை புரிந்து வீடு பேற்றை விரும்பப் பெருமான் கட்டளைப்படி காஞ்சியை அடைந்து சிவலிங்கம் நிறுவிப் போற்றி அருள்பெற்றுப் போய்த் திருக்காளத்தியில் முத்தியை எய்திற்று. இத்தலம் காமகோட்டத்திற்கும், காளிகோயிலுக்கும் இடையில் உள்ளது.[3]

தல பதிகம்

  • பாடல்: (மாகாளேச்சரம்) எண்சீரடியாசிரிய விருத்தம்.
உலகாணித் தடமருங்கு மாகா ளேசம் ஒன்றுளது மாகாளன்
எனும்பே ரன்பின், விலகாத பாப்பரசு வீடுபேறு விழைந்தேதென்
திசைக்கயிலை வேணித் திங்கட், கலையானைத் தொழுதுறைநாள்
ஆணை யாற்றாற் காஞ்சியிற்போந் தவ்விலிங்கம் நிறுவிப் போற்றி,
நிலம்நீடு தென்கயிலை மீள நண்ணி நீப்பரிய பெருவாழ்வு நிலாய
தன்றே.
  • பொழிப்புரை:
உலகாணித் தீர்த்தத்தின் மருங்கில் மாகாளேச்சரம் ஒன்றுள்ளது.
மாகாளன் என்னும் பாம்பரசு பேரன்பினின்றும் பிறழாத வீடு பேற்றினை
விரும்பித் தென் திசைக் கயிலையாகிய காளத்தியில் சடையில் இளம்பிறை
யணிந்த பிரானைத் தொழு துறையு நாள் அப்பிரானின் திருவாணையால்
காஞ்சியிற் போந்தவ் விலிங்கம் தாபித்துப் போற்றி நிலத்தில் சிறப்புத்
தங்கிய தென் கயிலையை மீள நண்ணி நீப்பரிய பெரிய வாழ்வு நிலாவியது.[4]

அமைவிடம்

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியில்காஞ்சி காமாட்சியம்மன் கோயிலின் மேற்கு இராசகோபுரம் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ கிலோமீட்டர் தொலைவிலுள்ள காளி கோட்டம் எனும் ஆதி காமாட்சி கோயிலுக்கு கிழக்கிலும், குமரகோட்டத்திற்கு வடகிழக்கிலும் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[5]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 55. கண்ணேசப் படலம் (1775-1786) | 1786 மாகாேளச்சரம்
  2. "shaivam.org | மாகாளேசம் மாகாளேசுவரர்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-03-31.
  3. tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | மகாளேசம் | பக்கம்: 828.
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | கண்ணேசப் படலம் | பாடல் 12 | பக்கம்: 526 - 527
  5. dinaithal.com | மாகாளேசம் | அமைவிடம்.

புற இணைப்புகள்