காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில்

காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் (மகா லிங்கேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும் . மேலும், மூலவர் மகாலிங்கேசுவரர் - பேருக்கேற்ப பெரிய ஆவுடையாரில் மிகப்பெரிய மூர்த்தத்தில் கம்பீரமாக காட்சி தரும் இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது [1]

காஞ்சிபுரம் மகா லிங்கேசம்
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் மகா லிங்கேசம்
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மகாலிங்கேசுவரர்.

இறைவர், வழிபட்டோர்

தல வரலாறு

பிரம்மனும், திருமாலும் தம்மில் யார் பெரியவர் என்று செருக்குற்று போர் செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றி. போர் விளைத்த இருவரும் இறைவனாரின் அடியையும் முடியையும் காணும் பொருட்டு முயன்று தோற்றனர். பின்பு ஆனவ மயக்கந் தெளிந்து இறைவனைப் போற்றித் துதித்து, காஞ்சியில் மகாலிங்கம் எனும் பெயரில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டனர் என்பது தல வரலாறு.[2]

தல விளக்கம்

மகாலிதானம் என்பதில் விளங்குவது, ஓர் ஊழிமுடிவில் துயிலெழுந்த பிரமன் உலகைப் படைக்க எண்ணுகையில் வெள்ளத்தில் பாம்பணைமேல் (ஆதிசேடன் படுக்கை) துயிலும் தன் தந்தையாகிய திருமாலை மயக்க உணர்வினால் ‘நீயாரென’ வினவினான். திருமால் ‘உலகிற்கு முதல்வன் யான்’ எனக் கூறக்கேட்ட பிரமன் நகைத்து ‘உலகிற்கு முதல்வன் நீயுமில்லை; பிறரும் அல்லர்; யானே முதல்வன்’ என்றனன். இவ்வாறு இருவரும் சொற்போர் புரிந்து முதிர்ந்து விற்போரால் தேவப் படைகளை வீசிப் பதினாயிரம் வருடம் போர் செய்தனர். பிரமன் விடுத்த பாசுபதமும் திருமால் விடுத்த உருத்திரக்கணையும் நிகழ்த்திய போரிடையே சிவபிரானார் தீப்பொறி சிதறச் சோதிலிங்க வடிவமாய்த் தோன்ற அவ்விரு படையும் இவ்விலிங்கத்துள் மறைந்தன.

திருமால் பன்றியாய் அச்சோதிலிங்கத்தின் அடியையும், பிரமன் அன்னமாய் அதன் முடியையும் காண்பான் முறையே பூமியை இடந்தும், விசும்பிற் பறந்தும் ஆயிரம் வருடம் தேடியும் வெற்றிகாணாமையால் மயங்கினர். அப்பொழுது நாதம் ஒலிவடிவமாய் ஓம் உம என இருபகுப்பாகி ஒன்று கலந்து இருக்கு, யசுர், சாமம் என்னும் மூன்று வேதமாய் விரிந்து இறைவன் இயல்பை விளக்கி அவனது அருட்குறியாகும் இது’ எனக் கூறின. மயக்கம் நீங்கி உண்மையை உணர்ந்த இருவரும் இறைவனைப் போற்றி செய்தனர். வெளி நின்ற சிவபிரானாரை இத்தகைய மயக்கம் அணுகாமையையும் பெருமான்பால் அன்புடைமையையும் திருமால் பிரமர் வேண்டிப் பெற்றனர். பின்பு சிருட்டித் தொழில் தனக்கு நிலைபெறத் தன்னிடத்துப் பெருமான் தோன்ற வேண்டுமெனப் பிரமன் வேண்டினன். அதனை அவனுக்கு வழங்கிய இறைவன் மேலும் சில அருள் செய்தனர்.

‘நீவிர் இருவரும் காஞ்சியை அணுகி இதுபோலும் ஓர் சிவலிங்கம் தாபித்துப் பூசித்துப் படைத்தல் காத்தலுக்குரிய உரிமையைப் பெறுவீர்களாக. மானிடர் தேவர் யாவரும் சிவலிங்க பூசனையை மேற்கொள்வார்களாக. அவ்வாறு பூசனை புரிவார்க்கு மயக்கம், வறுமை, பயம், மனக்கவலை, பசி, நோய் முதலிய தோன்றி வருத்தும் பிறவி ஒழிவதாக. ஓர்கால் பிறப்பினும் வருத்தமின்றி மகிழ்ச்சி எய்தி அவர் வாழ்வாராக. இயமன் ஒருகாலும் அவர் தம்மை அணுகாதொழிக. பூசனை புரியாதார் தமக்கொரு களைகண் இல்லாதவ ராவார். அவர்களுடன் வார்த்தையாடுதலும் இழிஞரிலும் இழிஞர் ஆதற்கு ஏதுவாகும். வேள்வி, தானம், விரதம், முதலானவை தரும்பயன் பூசனையால் வருபயனுக்கு கோடியில் ஒரு பங்கிற்கும் நிகராகா. உலகம் உய்யுமாறு இத்தகு ஆணைகளை விதித்தோம்’ என்றருளி மறைந்தனர். திருமாலும், பிரமனும் காஞ்சியை அடைந்து சிவலிங்கம் நிறுவிப் பூசித்துப் பயன் பெற்றனர். சிவலிங்க பூசனையின் பயனை வரையறுத்துக் கூற வல்லவர் ஒருவர் உளரேயோ?

மகாலிங்கத் தானம் என்னும் இத்தலம் கேசரிகுப்பம் அப்பாராவ் முதலியார் தெருவில் மேற்கு நோக்கிய தின்பினை உடைத்தாய் விளங்குகின்றது. மிகப் பெரிய திருவுருவம் விளங்கும் இம்மூர்த்தியை அண்டக நாயனார் எனவும் வழங்குவர். [3]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் வடக்கு பகுதியில், (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) அப்பாராவ் முதலியார் தெருவில் பிரியும் குருந்தேரு (சந்தில்) பகுதியில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

  1. Project Madurai, 1998-2008 | 51. மகாலிங்கப்படலம் 1669 - 1691
  2. tamilvu.org | காஞ்சிப் புராணப் படல அட்டவணை | மகாலிங்கப் படலம் 493
  3. Tamilvu.org | திருத்தல விளக்கம் | மகாலிதானம் | பக்கம்: 831 - 832
  4. "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | (மகாலிங்கேசம்) மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.

புற இணைப்புகள்