காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் (புண்ணியகோடீசம்) என்று அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். மேலும் திருமால், மற்றும் கசேந்திரன் எனும் யானையும் வழிப்பட்டதாக கூறப்படும் இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]
காஞ்சிபுரம் புண்ணியகோடீசம். | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 12°49′02″N 79°43′13″E / 12.8173°N 79.7204°E |
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் புண்ணியகோடீசம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | புண்ணியகோடீசுவரர். |
தாயார்: | புவனப் பூங்கோதை |
தீர்த்தம்: | புண்ணிய கோடி தீர்த்தம் |
வரலாறு | |
நிறுவிய நாள்: | 13 ஆம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | மூன்றாம் இராஜராஜ சோழன் |
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி என்றழைக்கப்படும், சிறிய காஞ்சிபுரத்தின் கிழக்கு பிராந்திய செட்டிதெருவின் கடைக்கோடியிலுள்ள, வரதராசபெருமாள் கோயிலின் சற்றுமுன்னர் தென்திசையில் சதாவரம் செல்லும் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]
இறைவர், வழிபட்டோர்
- இறைவர்: புண்ணியகோடீசுவரர்
- வழிபட்டோர்: திருமால், கஜேந்திரன் யானை.
தல வரலாறு
இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் (குளத்தில்) நீராடி இவ்விறைவனை வழிபட்டால், வழிபட்ட புண்ணிய பலன் பன்மடங்கு பெருகுமென்று சொல்லப்படுகிறது. ஆதலினால் இக்கோயில் புண்ணியகோடீசம் எனப்பட்டது.
திருமால் மேகவடிவில் இவ்விறைவனை தாங்கி வழிபட்டமையால், அவருக்கு பணிசெய்த கஜேந்திரன் யானையை, இறைவன் முதலையின் பிடியிலிருந்து மீட்டார், அவ்யானையோடு திருமால் காஞ்சிக்கு வருகைத்தந்து இவ்விறைவனை வழிபட்டார். மனமகிழ்ந்த இறைவன் திருமால் முன் தோன்றி அவருக்கு வேண்டிய வரங்களை கொடுத்தருளினார். அவ்வரங்களால் திருமால் "வரதன்" (வரதராசபெருமாள்) என்னும் நாமத்தையும், அவர் தங்கிய இடம் யானையின் பெயரால் (அத்தி-யானை) அத்திகிரி என்னும் பெரும்பெயர் பெற்று சிறப்புற்றதாக இத்தல வரலாறு காணப்படுகிறது.[3]
தல விளக்கம்
புண்ணியகோடீசர், தல விளக்கத்தின்படி, திருமால் பிரமனையும் பதினான்கு உலகங்களையும் படைக்க விரும்பித் தனக்குப் பொற்றாமரைப் பொய்கையினின்றும் மலர் பறித்துதவிய கசேந்திரன் என்னும் யானை ஆதிமூலம் என்றலறப் பற்றிய முதலையைச் சக்கரத்தால் பிளந்து அவ்வியானையைக் காத்து அதன் பூத்தொண்டினைக் கொண்டு சிவபிரானை அருச்சித்து ஆங்குச் செய்யப்படும் புண்ணியம் ஒன்று கோடியாகவும் ‘வரதா வரதா’ என இறைவனைப் பலமுறை எதிரெழுந்தருள்கையில் போற்றி, வரதராசன் என்னும் திருப்பெயர் தனக்கு உண்டாகவும் வரம் அருளப்பெற்ற திருத்தலம். சின்ன காஞ்சிபுரம் அமுதுபடித் தெருவின் பின்னுள்ளது இது.[4]
வரலாறு
இக்கோயிலானது 13ஆம் நூற்றாண்டில் மூன்றாம் இராஜராஜ சோழனால் கட்டபட்டதாக அறியப்படுகிறது. பின்னர் விஜய நகரப் பேரசின் குமார கம்பணன் இக்கோயிலுக்கு திருப்பணிகளைச் செய்ததாக அறியப்படுகிறது. கி.பி. 1913 முதல் 1926 வரை ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெற்றுள்ளது. பிறகு என்னக் காரணத்தினாலோ திருவிழா நடக்கவில்லை. 13, மே, 2024 அன்று குடமுழுக்கு நடைபெற்றது.[5]
அமைப்பு
கோயிலுக்குள் நுழைந்தவுடன் காணப்படும் மண்டபத்தின் 26 தூண்களில் ஏராளமான சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையில் புண்ணியகோடீசுவரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறையில் உள்ள கோட்டங்களில் நிற்ற நிலையில் விநாயகர், தென்முகக்கடவுள், மகாவிஷ்ணு, விஷ்ணு துர்கை, நான்முகன் ஆகியோர் அமைந்துள்ளனர். இத்தலத்தில் உள்ள அம்மனுக்கு புவனப் பூங்கோதை, புவனேசுவரி, தர்மசம்வர்த்தனி ஆகிய பெயர்கள் வழங்கப்படுகின்றன. இக்கோயிலில் சனி பகவான், நவக்கிரகங்கள், வள்ளி தெய்வாணை உடனுறை முருகர், நடராசர், நால்வர், சப்தமாதர், பிள்ளையார், பைரவர், ஆஞ்சனேயர், நவநீத கிருஷ்ணனன் ஆகியோருக்கான திருமுன்களும் அமைந்துள்ளன.[5]
மேற்கோள்கள்
- ↑ சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த-காஞ்சிப் புராணம்-புண்ணிய கோடீசப் படலம் (158-166)
- ↑ தினஇதழ்|புண்ணியகோடீசுவரர் கோயில்
- ↑ "சிவம் ஒஆர்ஜி|காஞ்சி சிவத் தலங்கள்". Archived from the original on 2014-08-25. பார்க்கப்பட்ட நாள் 2016-02-09.
- ↑ புண்ணியகோடீசர்|திருத்தல விளக்கம்|806 - 807
- ↑ 5.0 5.1 "முன்வினை பாவங்கள் தீர்க்கும் காஞ்சிபுரம் புண்ணிய கோட்டீஸ்வரர்". Hindu Tamil Thisai. 2024-10-03. பார்க்கப்பட்ட நாள் 2024-10-04.