காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில்

காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் (வயிரவேசம்) என்று அறியப்படும் இக்கோயில், காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகின்றன.[1]

காஞ்சிபுரம் வயிரவேசம்.
காஞ்சிபுரம் வயிரவேசம். is located in தமிழ் நாடு
காஞ்சிபுரம் வயிரவேசம்.
காஞ்சிபுரம் வயிரவேசம்.
புவியியல் ஆள்கூற்று:12°50′07″N 79°41′09″E / 12.8354°N 79.6857°E / 12.8354; 79.6857
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் வயிரவேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சோளீசுவரர்

இறைவர், வழிபட்டோர்

தல வரலாறு

இத்தல வரலாற்றில் அறியப்படுவது யாதெனில், ஒரு சமயம் பிரம்மா மேருமலைச் சிகரத்திலுள்ள முஞ்சமான் மலையில் வாழ்ந்துவந்த முனிவர்களிடம் சென்று, "தானே பரப்பிரம்மம்" என்றுரை செய்துகொண்டிருந்தான். முனிவர்கள், இதை மறுத்து, சிவபெருமானின் பெருமைகளை எடுத்தியம்பின. அவ்வேளையில் திருமாலும் அங்குத் தோன்றி "நானே கடவுள்" என்று கூறி பிரமனுடன் போர்புரிந்தார். இச்சமயத்தில் சிவபெருமான் அங்கே தோன்றிட, திருமால் அஞ்சி அவ்விடத்தினின்றும் அகன்றோடினார். ஆனால் பிரமனோ, இறைவனைப் பார்த்து "என் புத்திரனே வருக" என்று அழைத்தான். பெருமான் சினங்கொண்டார்; அவர் திருவுருவிலிருந்து வயிரவர் தோன்றி, பிரமனை வதம் செய்து, அவனது ஐந்தாவது சிரத்தை நகத்தால் கிள்ளியெறிந்தார். பின்பு, சிவனருளால் பிழைத்தெழுந்த பிரமன் தன் பிழைப் பொறுத்தருள வேண்டி நின்றான்.

அதன்பின், சிவபெருமான் வயிரவரிடம், "திருமால் உள்ளிட்டோர்களிடம் சென்று குருதிப்பலி ஏற்று அவர்களுடைய செருக்கை அடக்கி வருக" என்று பணித்தார். வயிரவரும் அவ்வாறே சென்று திருமாலுக்கு வாயிற்காவலில் இருந்த விடுவச்சேனரை சூலத்தால் குத்தி கோர்த்துக்கொண்டு, உட்சென்று திருமாலிடம் ரத்தப்பலி யேற்று அவர் மூர்ச்சையாகுமாறு செய்து திருமாலின் செருக்கை அடக்கினார். வயிரவர் இத்துடன் நில்லாது ஏனைய தேவர்களிடமும் சென்று அவர்கள்தம் செருக்கையடக்குவித்தார். இறைவனிடம் வந்த வயிரவர் வழிபட்டு பணிந்து, பெருமானின் ஆணைப்படி, நகரை காக்கும் காவல் பொறுப்பை ஏற்று, விடுவச்சேனரை (விஷ்வக்சேனர்) சூலத்தினின்றும் விடுவித்து திருமாலிடம் அனுப்பிவிட்டார் என்பது வரலாறு.[2]

தல விளக்கம்

வயிரவேசம் கூறும் தல விளக்கம் யாதெனில், மேருமலைச் சிகரத்தில் தவஞ்செய்த முனிவரர் சிலர் முன் பிரமன் தோன்றினான். ஐந்து முகங்களையுடைய பிரமனை முனிவரர் பின்வருமாறு வினாவினர்; ‘காணப்படும் இவ்வுலகம் யாரை முதல்வனாக உடையது? இது எவரிடத்துத் தோன்றி நின்றொடுங்கும்? பலவாய பசுக்களினுடைய பாசத்தை நீக்கி அருள்செய்யும் தலைவன்யாவன்? இவற்றை விரித்துரைத்தருள்க’ என வேண்டினர்.

பிரமன், மூவகை வினாவிற்கும் உரிய முதற்பொருள் தானே எனத் தருக்கினன். அப்போது வேதங்கள் வெளிப்பட்டு ஒருங்கும் தனித்தனியும் மேருமலையை வில்லாகவுடைய சிவபிரானே தலைவன் எனப் பல சாத்திரங்களும் வேதங்களும், புராண இதிகாசங்களும் விரிக்கின்றன’ என விளம்பின. பிரணவமும் எதிர்நின்று பகரவும் கொள்ளானாயினன் பிரமன்.

திருமால் அங்குத் தோன்றித் தானே தலைவன் என, பிரமன் யானே தலைவன் என இங்ஙனம் இருவரும் மாறுபடும்பொழுது சூரிய மண்டிலத்தினின்றும் வயிரவர் எழுந்தருளினர். கண்ட அளவே வெருவிய திருமால் ஓட்டெடுத் துய்ந்தனர்.

‘என் மகனே! வருக’ என அழைத்த பிரமனின் பழித்துப் பேசிய ஐந்தாம் தலையை வயிரவர் நகத்தினாற் கொய்தனர். மலர்மிசையோன் உயிர்போய் மீள அருளால் உயிர்பிழைத்து மயக்க நீங்கி அம்மை அப்பரை வணங்கிப் போற்றி நான்முகனாய் வாழவும், தான் செய்த பிழையைப் பொறுக்கவும் வரம்பெற்றுச் சென்றனன்.

சிவபெருமான் கட்டளைப்படி இரத்தப் பிச்சை ஏற்கப் புகுந்து கைகுந்தத்தில் விடுவச்சேனனைச் சூலத்திற் றூக்கினர். திருமால் தன் நெற்றி நரம்பைப் பிடுங்கி இரத்தத்தைக் கபாலத்தில் நூறாயிரம் வருடம் பெய்தும் நிரம்பாத அந்நிலையில் மூர்ச்சையுற்று விழுந்த மாலை வயிரவர் கையால் தடவி மயக்கம் நீக்கினர்.

திருமாலுக்கு அபயமும், அருளும் வழங்கிப்போய் முனிவர் மனைவியரைப் புன்முறுவலால் மயலுறுத்தித் தேவர்தம் செருக்கை முற்றவும் இரத்தப் பலி தேர்தலால் போக்கிய வயிரவர் காஞ்சியை அணுகிக் கபாலத்தை ஓர்மருங்கு வைத்துச் சூலநுதியினின்றும் விடுவச்சேனைத் திருமாலின் வேண்டுகோளின்படி விடுத்தனர். பின்பு தம் பெயரால் வயிரவேசர் எனச் சிவலிங்கம் நிறுவிப் போற்றி வெளிநின்ற பெருமானை உமையம்மையொடும் அருட்குறியில் இருந்து யாவர்க்கும் அருளவும், தாம் திருமுன்பிருந்து தொண்டு செய் துய்யவும் வேண்டிப் பெற்றனர் வயிரவர்.

மேலும், இறைவனார் ஆணைப்படி இரத்தத்தைக் கணங்களுக் களிக்கச் சிலவற்றிற்கும் பருகப் போதாமை கண்டு போர்க்களத்தில் உயிர்விடுவோரைத் துறக்கம் சேர்த்து அவர் இரத்தத்தைக் கணங்களைப் பருகுவித்து இரணமண்டில வயிரவராகக் காஞ்சியைக் காவல் புரிவர்.[3]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியான பிள்ளையார்பாளையம் கடைகோடி சோளீஸ்வரர் கோயில் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

  1. Project Madurai, 1998-2008 | சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 | 33. வயிரேவசப் படலம் 1125 - 1162
  2. tamilvu.org | காஞ்சிப் புராணம் | வயிரவேசப் படலம் | பக்கம்: 347 - 357
  3. Tamilvu.org|திருத்தல விளக்கம் | வயிரவேசம் | பக்கம்: 825 - 826
  4. "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | வயிரவேசம்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-02-26.

புற இணைப்புகள்