காங்கேயன் பிள்ளைத்தமிழ்

காங்கேயன் பிள்ளைத்தமிழ் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் இருந்ததாகக் கல்வெட்டு ஆவணங்களிலிருந்து தெரியவருகின்றன. ஒன்று கண்ணமங்கலம் காங்கேயன் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ். மற்றொன்று நியமம் காங்கேயன் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ். பாடப்பட்ட இருவரும் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் அலுவலர்கள்.

சிறு பெரிச்சியூர்க் கொடிக்கொண்டான் பெரியான் ஆதிச்ச தேவன் என்னும் புலவர் இந்த இரண்டு நூல்களையும் பாடியவர்.

கண்ணமங்கலம் காங்கேயன் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ்

மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-1238) அவைக்களப் புலவராக விளங்கியவர் காரணை விழுப்பரையர் என்னும் புலவர். இவரது நண்பர் ஆதிச்ச தேவன். சுந்தர பாண்டியனின் அலுவலன் காங்கேயன். இவன் திண்டிவனம் வட்டம் கண்ணமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்தவன். விழுப்பரையர் தன் நண்பர் ஆதிச்ச தேவனை கண்ணமங்கலம் காங்கேயனுக்கு அறிமுகம் செய்துவைத்தார். கண்ணமங்கலம் காங்கேயன் மீது பிள்ளைத்தமிழ் நூல் ஒன்று பாடுமாறும் செய்தார். ஆதிச்ச தேவன் பாடினார். இது ஒரு காங்கேயன் பிள்ளைத்தமிழ்.[1]

நியமம் காங்கேயன் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ்

இந்த நூல் தேராற்றுப் படுகையில் உள்ள நியமம் என்னும் ஊரில் வாழ்ந்த கண்டன் உதயஞ்செய்தான் காங்கேயன் என்பவன் மீது பாடப்பட்டது. பாட்டுக்குப் பரிசாகப் புலவருக்குச் சாத்தனேரி என்னும் ஊரில் இருந்த நிலங்களை இந்தக் காங்கேயன் வழங்கினான்.[2]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. இந்தச் செய்தி இந்தப் பாண்டியனின் மெய்க்கீர்த்தியில் சொல்லப்பட்டுள்ளது.
  2. இதே மாறவர்மன் சுந்தர பாண்டியனின் ஆட்சியாண்டு 12 (1230) –ல் பாண்டிநாட்டு பெரிச்சிகோயில் சிவாலக் கல்வெட்டு இதனைக் குறிப்பிடுகிறது.