கழங்கு (மகளிர் விளையாட்டு)

கழங்கு இருவகை விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும்:

  1. மகளிர் விளையாட்‌டுக் கழங்கு ஒரு கைத்திறப் பொழுதுபோக்கு விளையாட்டு.
  2. வேலன் (சாமியாடி) உருட்டும் கழங்கு குறிசொல்ல உதவும்.

மகளிர் கழங்கு

கழங்கும் அளவும்
முத்துகள், முத்து அளவில் மரக்கட்டையில் கடைந்தெடுத்த உருண்டைகள், பொன்னால் செய்யப்பட்ட பொற்கழங்குகள் முதலானவை மகளிர் விளையாட்டில் கழங்காகப் பயன்படுத்தப்பட்டன.
மகளிர் ஆடிய முறை
மழை பெய்யும்போது உடன் இறங்கும் அத்திக்கட்டி, ஆலங்கட்டி என்னும் மழைப்பனிக்கட்டி இறங்குவது போல மகளிர் விளையாட்டின்போது கழங்குகள் இறங்கின. அவற்றைத் தூக்கிப்போட்டுப் பிடித்து மகளிர் விளையாடினர்.
கழங்காட்டத்துக்கும் பந்தாட்டத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு
சங்க காலத்தில் மகளிர் விளையாடிய பந்தாட்டத்தில் பந்துகள் தரையில் விழாமல் மேலே தட்டிவிட்டு (juggling) விளையாடப்படும். கழங்கு தரையில் பரப்பி, கையால் பற்றித் தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடப்படும்.
 
மிக்கத்திறனுடனும், நேரத்தைக் கணக்கில் கொண்டும், கையால் விளையாடப்படும் விளையாட்டு (juggling)
கழங்காடிய இடங்கள்
சேரநாட்டுக் கருவூரை அடுத்த தண்ணான்பொருநை ஆற்றுமணல், தொண்டைநாட்டு நீர்ப்பெயற்று துறைமுக மணல்வெளி,பாண்டியநாட்டுக் கடலோர மணல்வெளி, ஓலைக்குடிசைகளின் முற்றத்து மணல்பரப்பு முதலான இடங்களில் கழங்கு விளையாடப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

கழங்கு விளையாட்டு பற்றிய செய்திகள்

  • கருவூரை அடுத்திருக்கும் ஆன்பொருநை (அமராவதி) ஆற்று மணலில் மகளிர் பொன் செய் கழங்கினால் தெற்றி விளையாடி மகிழ்ந்தனர். [1]
  • நீர்ப்பெயற்று என்பது ஒரு துறைமுகப் பட்டினம். அப்பட்டினத்து மாடங்களில் பந்து விளையாடிய மகளிர் மணல்வெளிக்கு வந்து கழங்கு ஆடினர். [2]
  • பாண்டிய நாட்டில் கடற்கரை மணலில் மகளிர் முத்துகளைக் கழங்காகப் பயன்படுத்தி, கூச்சலிட்டுக் கும்மாளம் போட்டுக்கொண்டு கழங்கு ஆடினர். [3]
  • கழங்கு முத்தின் அளவினதாக இருக்கும். [4] [5]
  • மரத்தைக் கடைந்து கழங்குக்காய்கள் செய்யப்படுவது உண்டு. [6]
  • கழங்காடும்போது கழங்குக் காய்கள் மழையோடு இறங்கும் பனிக்கட்டி போல் இறங்கும். [7]
  • பந்தும் கழங்கும் மகளிர் விரும்பியாடும் விளையாட்டுகள். [8] [9] [10] [11], [12]
  • கழங்கு ஆயத்தோடு (தோழியர் கூட்டத்தோடு) விளையாடப்படும். [13]
  • கழங்காடும் திறமையில் காதல் அரும்புவதும் உண்டு. [14]
  • கூரை வீட்டின் முன்புறம் ஈந்துப்புதர் ஓரத்தில் அமர்ந்துகொண்டு மகளிர் கழங்கு ஆடினர். [15]
  • செல்வச் சிறுமியர் கழங்காடுவர். போரின்போது கழங்காடு களம் அழிக்கப்படும். [16]
  • வேட்டுவர் தம் தெய்வம் கொற்றவைக்குப் படையல் செய்யும்போது கிளி, மயில் ஆகியவற்றுடன் தம் விளையாட்டுப் பொருள்களான பந்து, கழங்கு போன்றவற்றையும் சேர்த்துப் படையல் செய்தனர். [17]

வேலன் கழங்கு

  • களவுக் காதலனை எண்ணும் காதலியின் உடலிலும், செயலிலும் காணப்படும் வேறுபாட்டினை வேலன் அணங்கு என்பான். வெறியாட்டு நிகழ்த்தவேண்டும் என்பான். இப்படிக் குறிசொல்லக் கழங்கு உருட்டுவான். [18]
  • வட்டக்கழங்குக் காய்கள் நெல்லிக்காய் போல இருக்கும். இது வேலன் விளையாடிய கழங்கின் அளவு. [19]
  • போருக்குப் புறப்படுவதற்கு முன் கழங்கு உருட்டிக் கணிக்கப்பட்ட முடிவை களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் அழித்து வெற்றி காண்பானாம். [20]

இக்காலப் பாண்டிக்கல்

கழிச்சிக்கொட்டைகளைக் கழங்கு என்றனர். நாளடைவில் கழிச்சிக்கொட்டை அளவிலான மணியாங்கற்களையும் கழங்கு விளையாடப் பயன்படுத்தினர். இக்காலத்தில் இந்த விளையாட்டு பாண்டிக்கல், ஒண்ணாங்கல் இரண்டாங்கல் என்னும் பெயர்களுடன் விளையாடப்பட்டு வருகிறது.

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1.  
    வார்கோல் செறியரிச் சிலம்பின்
    குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கின்
    தெற்றி ஆடும் தண்ணான் பொருநை
    வெண்மணல் - புறம் 36

  2.  
    பீலி மஞ்ஞையின் இயலிக் கால
    தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப உயர்நிலை
    வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇக்
    கைப்புனை குறுந்தொடி தத்தப் பைபய
    முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்
    பட்டினம் – பெரும்பாணாற்றுப்படை – அடி 331முதல்

  3. வெண்டிரை பொருத வேலை வாலுகத்துக்
    குண்டுநீர் அடைகரைக் குலையிரும் புன்னை
    வலம்புரி ஈன்ற நலம்பெறு முத்தம்
    கழங்காடு மகளிர் ஓதை ஆயம் - சிலப்பதிகாரம் 27-245

  4. கழங்குறழ் முத்தம் - அகம் 126-12,
  5. மண்ணா முத்தம் கழங்குறழ் தோன்றல - அகம் 173-15
  6. இரும்பைப் பூ ‘கோடுகடை கழங்கின் அறைமிசை தாஅம் - அகம் 135-9,
  7. வணங்கிறை மகளிர் அமர்ந்தனர் ஆடும் கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி - அகம் 334-8,
  8. வளங்கெழு வியனகர் பந்துசிறிது எறியினும் இளந்துணை ஆயமொடு கழங்குடன் ஆடினும் உயங்கின்று - அகம் 17
  9. கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் - அகம் – 49
  10. சென்றனள் மன்ற என் மகளே பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே - ஐங்குறுநூறு 377
  11. கிளி, பந்து, கழங்கு ஆகியவை மகளிர் உடன் கொண்டுசெல்லும் விளையாட்டுப் பொருள்கள். கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் - அகம் 49-1
  12. நீராட வைகைக்குச் சென்ற மகளிர் பந்து, கழங்கு, களவு ஆகிய விளையாட்டுப் பொருள்களையும் கொண்டு சென்றார்களாம். பரிபாடல் 10-107
  13. கழங்காடு ஆயத்து அன்றுநாம் அருளிய பழங்கண்ணோட்டம் - அகம் 66, அகம் 17-2,
  14. கழங்காடு ஆயத்து அன்று நாம் அருளிய பழங்கண் - அகம் 66-24,
  15. நற்றிணை 79,
  16. பதிற்றுப்பத்து 15-5,
  17. சிலப்பதிகாரம் 12-1-35,
  18. ஐங்குறுநூறு 245, 246, 248, 249, 250, நற்றிணை 47, 282, அகம் 195-15,
  19. அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய் வட்டக் கழங்கின் தாஅய் - அகம் 241-14,
  20. இடுகழங்கு தபுந - பதிற்றுப்பத்து 32-8