கள்ளில் ஆத்திரையனார்

கள்ளில் ஆத்திரையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. 175, 389 எண் கொண்ட இவரது புறநானூற்றுப் பாடல்கள் ஆதனுங்கன் என்னும் வள்ளலைப் போற்றுகின்றன. குறுந்தொகை 293 எண் கொண்ட இவரது பாடலில் ஆதி அருமன் என்னும் மன்னன் குறிப்பிடப்பட்டுள்ளான். இவரது குறுந்தொகைப் பாடல் கள்ளில் என்னும் சொல்லுடன் தொடங்குகிறது. இதனால் இந்தப் புலவர் கள்ளில் என்னும் அடைமொழி பெற்றார் ஆதல் கூடும் அல்லது கள்ளில் என்னும் ஊரினர் ஆதலும் கூடும்.

குறுந்தொகை 293

குளத்தில் பூத்த ஆம்பலால் செய்த தழையாடை இடையிடையே விலகி கால் தொடை தெரியுமாறு உடுத்திக்கொண்டு கொழுநனைக் காண்பதற்கு அவள் (பரத்தை) அவ்வப்போது வருவாள். (அவள் முன்) நான் எளியவள் – என்கிறாள் அவன் மனைவி. அரசன் ஆதி அருமன் நாட்டில் கள்ளைத் தந்து உறவினர்க்கு ஊட்டிய பனைமரம் பின்னர் நுங்கு தந்து உதவும். அதுபோல அவள் ஊட்ட வருவாளே! என்று மனைவி கூறுகிறாள். இப்படி இவரது இந்தப் பாடல் தெரிவிக்கிறது.[1]

புறநானூறு 175

ஆதனுங்கன் சிறந்த வள்ளல்களில் ஒருவன். இவனது வள்ளண்மையைப் பாடும் பாடல் இது.

ஆதனுங்கனை இவர் 'அறத்துறை' என்கிறார். நீர்த்துறை அனைவருக்கும் பயன்படும். அதுபோல இவன் அறத்துறை அனைவருக்கும் பயன்படும்.

'எந்தை வாழி ஆதனுங்க! என் நெஞ்சம் திறப்போர் நின்(னைக்) காண்குவரே. நின்(னை) யான் மறப்பின், மறக்குங்காலை என் உயிர் யாக்கையிற் பிரியும். (எப்)பொழுதும் என்(னை) யான் மறப்பின் மறக்குவென்' என்று நெஞ்சுருகப் பாராட்டுகிறார்.

புலவரால் தன்னை மறந்திருக்க முடியுமாம். ஆதனுங்கனை மறந்திருக்க முடியாதாம். அவனை மறந்தால் புலவரின் உயிர் பிரிந்துவிடுமாம். என்னே ஈடுபாடு!

மோரியர்

'விண் பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைக்கழி அறைவாய்'

மலைத்தொடர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி நிலம் 'இடைக்கழி' அத்தகைய இடைக்கழி வழியே மோரியர் தென்னகத்துக்குள் நுழைந்தனர். கொடி கட்டிய தேரில் வந்தனர். தேர்ச்சக்கரம் செல்ல மலையில் வழி உண்டாக்கினர். அதற்கு 'அறைவாய்' என்று பெயர். அறைவாய் என்பது மலையை வெட்டி உண்டாக்கிய வழி. அந்த அறைவாய்க்கு இடையே காலையில் சூரியன் தோன்றுவது போல அறத்துறையில் ஆதனுங்கன் தோன்றினான் என்கிறார் புலவர்.

புறநானூறு 389

இந்தப் பாடலில் ஆதனுங்கன் பாராட்டப்பட்டுள்ளான். புலவர் இந்தப் பாடலில் 'ஆதனுங்கன் போல நீயும் ... நன்கலம் நல்குமதி' என்று பாடுகிறார். பாடலில் வேங்கடங் கிழவோன் முதியன் என்பவனிடம் புலவர் பரிசில் வேண்டுவது தெளிவாக உள்ளது.

கோடை என்பது நுங்கின் கண்ணைத் தோண்டி நுங்கு உண்ணும் காலம். வேம்பு காய்க்கும் காலம். இத்தகைய கோடைகாலக் காலை வேளையில் புலவர் தன்னை நினைக்கமாட்டார்களா என்று ஆதனுங்கன் ஏங்குவானாம்.

வேங்கட நாட்டு மக்கள்

முதியன் வேங்கட நாட்டு மன்னன். அவன் நாட்டு மக்கள் பெண்யானை புலம்பும்படி விட்டுவிடு அதன் கன்றுகளைக் கயிற்றால் கட்டிக் கொண்டுவந்து ஊர் மன்றத்தில் கட்டிவைப்பார்களாம்.

முன்னவிலக்கு அணி

'ஏலா வெண்பொன் போருறு காலை' (=காலை)

பொன்னைச் சூடிக்கொள்ளலாம். சூடிக்கொள்ளமுடியாத பொன் என்பது காலை நேரம். பொன் செந்நிறம் கொண்டது. காலை நேரத்தில் செந்நிறம் வெண்மையாக மாறுவதால் அது வெண்பொன் காலம். இந்த ஏலா வெண்பொன் போர்த்திக்கொள்ளும் காலம் காலை வேளை.

அடிக்குறிப்பு

  1. கள்ளின்(ல்) கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப்
    பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய்
    ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
    ஆதி அருமன் மூதூர் அன்ன,
    அய வெள்ளாம்பல் அம்பகை நெறித் தழை
    தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப,
    வருமே சேயிழை, அந்தில்
    கொழுநற் காணிய; அளியேன் யானே!

"https://tamilar.wiki/index.php?title=கள்ளில்_ஆத்திரையனார்&oldid=11896" இருந்து மீள்விக்கப்பட்டது