கலாலட்சுமி தேவராஜா

கலாலட்சுமி தேவராஜா
Kalalakshmi Devaraja.jpg
முழுப்பெயர் சோ. தேவராஜா
கலாலக்ஷ்மி
பிறப்பு 10-07-1957
பிறந்த இடம் பண்டத்தரிப்பு,
யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்,
நடிகை
கல்வி கலைமாணிப் பட்டம்
மறைவு 28-03-1919
யாழ்ப்பாணம்
மற்ற பெயர்கள் செம்மனச்செல்வி
பெற்றோர் மாணிக்கவாசகர்,
தங்கம்மா
வாழ்க்கைத் சோ. தேவராஜா
துணை


கலாலட்சுமி தேவராஜா (யூலை 10, 1957 – மார்ச் 28, 2019) ஈழத்தின் சிறுகதை எழுத்தாளர், நாடக நடிகை, நாடக நெறியாளர், சமூக செயற்பாட்டாளர் ஆவார். 1979 இலிருந்து நாடகங்களில் நடித்துவந்த இவர் அவைக்காற்றுகை கழகம், நாடக அரங்கக் கல்லூரி, தேசிய கலை இலக்கியப் பேரவை, மறுமலர்ச்சி மன்றம், நாராய் நாராய் நாடகப் பயணக் குழு என்பவற்றுடன் இணைந்து செயற்பட்டவர். தாயகம் இதழில் அயிராமி, சிவகாமி போன்ற புனைபெயர்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன

வாழ்க்கைச் சுருக்கம்

யாழ்ப்பாண மாவட்டத்தில், பண்டத்தரிப்பில், காலையடி எனும் கிராமத்தில் மாணிக்கவாசகர், தங்கம்மா தம்பதியினருக்கு ஐந்தாவது மகளாகப் பிறந்தார். பண்டத்தரிப்பு மகளிர் உயர் கல்லூரியிலும் பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்று உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் நிறைவுசெய்து பட்டப்படிப்பை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் [[யாழ்ப்பாண வளாகத்தில் மேற்கொண்டு இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். சட்டத்தரணியும் நடிகரும் எழுத்தாளருமான சோமசுந்தரம் தேவராஜாவை காதலித்து பதிவுத் திருமணம் புரிந்து தாலி என்ற மங்கலநாண் அணிந்துகொள்ளாமல் வாழந்தார்.

கலை வெளிப்பாடுகள்

1979 இல் அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் சார்பில் க. பாலேந்திராவின் இயக்கத்தில் ஒரு பாலை வீடு நாடகத்தில் ஒரு பைத்தியக்காரியாக நடித்தார். தொடர்ந்து முற்றிலும் ஆண்களே நடித்த இலங்கை நாடக அரங்க‍க் கல்லூரி தயாரித்த மௌனகுருவின் சங்காரம் நாடகத்தில் சமுதாயம் பாத்திரத்தில் நடித்தார்.

உறவுகள் நாடகத்தில் குழந்தை ம. சண்முகலிங்கம், எஸ். ரி. அரசு, சோ.தேவராஜா, கௌரி வரதராஜப்பெருமாள், சிசு நாகேந்திரன் போன்ற கலைஞர்களுடன் இணைந்து நடித்தார். கொழும்பில் அரங்காடிகள் தயாரிப்பில் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் 'முயலார் முயல்கிறார்' நாடகத்தில் தனது பிள்ளைகளுடன் இணைந்து மயில் பாத்திரத்தில் நடித்தார்.

கம்பகாவைச் சேர்ந்த நாடக‍க் கலைஞரான விஜித் சிங்கின் 'கொள் கரி', 'தூத் தூ' மேடை நாடகங்களிலும் 'மண்டையன்' தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்தார். நாடகங்களில் மாத்திரமன்றி, வி. எம். குகராஜாவின் கதைவசனம், நெறியாள்கையிலும் கே. எம். வாசகரின் மேற்பார்வையிலும் 'கதை இதுதான்' எனும் வீடியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின் ரூபவாகினியில் அருணா செல்லத்துரையின் 'வீடு' என்ற தொலைக்காட்சித் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.

சமூக அரசியல் களத்தில்

தனது துணைவருடன் புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியில் இணைந்து கொண்டார். கொழும்பில் வாழ்ந்தபோது போர் எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். புதிய இடதுசாரி முன்னணியுடன் இணைந்து வட மாகாணசபையிலும், சனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளராகவும் போட்டியிட்டார்.

வெளிவந்த நூல்கள்

  • மகர காவியம் சிறுகதைத் தொகுப்பு 2017
  • ரோஜாப்பூ சிறுகதைத் தொகுப்பு 2017
  • பூமராங் சிறுகதைத் தொகுப்பு 2017
  • கலாலக்ஷ்மி கதைகள் 2021

மறைவு

இறுதிக் காலத்தில் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, அரசடி வீதியில் வசித்து வந்த கலாலட்சுமி 2019 மார்ச் 28 இல் காலமானார். அவரது இறுதி வணக்க நிகழ்வு சமயச் சடங்கு எதுவுமின்றி அஞ்சலி நிகழ்வாக இடம்பெற்று சம்பில்துறையி்ல் தகனம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

  • 'அரங்கம்' நாடக அரங்கக் கல்லூரியின் சஞ்சிகை 1981
  • அருணா செல்லத்துரையின் 'வீடு' தொலைக் காட்சி நாடகங்களும் வானொலி நாடகங்களும் 1993
  • தாய் வீடு கனடா மாத இதழ் ஏப்பிரல் 2019 ந. இரவீந்திரன் கட்டுரை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கலாலட்சுமி_தேவராஜா&oldid=2549" இருந்து மீள்விக்கப்பட்டது