கருணாகரன் (கவிஞர்)

கருணாகரன் (பிறப்பு: 1963) ஈழத் தமிழ்க்கவிஞர். ஈழப்போர்க்காலத்தையும் அதன் பின்னான சூழலையும் ஆழமான கண்ணோட்டத்தில் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் கதைகளாகவும் எழுதியுள்ளார். சுயாதீன ஊடகவியலாளராகவும் பதிப்பாளராகவும் இதழாளராகவும் அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

கருணாகரனின் தந்தை பெயர் சிவராசா. தாத்தா பெயர் கந்தையா. பூர்வீக ஊர் யாழ்ப்பாணம் மாவட்டம் இடைக்காடு. அப்பாவின் அம்மா பெயர் செல்லம்மாபிள்ளை.

அம்மா சி. சிவபாக்கியம். அம்மாவின் தந்தை பெயர் சின்னையா. அவரின் சொந்த ஊர் இடைக்காடு. அம்மாவின் அம்மாவின் (பாட்டி) பெயர் கதிராசிப்பிள்ளை. அவரது சொந்த ஊர் இயக்கச்சி.

கருணாகரன், கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி என்னும் கிராமத்தில் 05.09.1963 இல் பிறந்தார். இயற்பெயர் சிவகருணாகரன். இவர், இயக்கச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் (இயக்கச்சி மகா வித்தியாலயம்) ஆரம்பக்கல்வியையும் பளை மகா வித்தியாலயத்தில் (பளை மத்தியகல்லூரி) மேற்கல்வியையும் கற்றார். இடதுசாரிய அரசியலில் ஈடுபாடு கொண்டு, 1983 இல் ஈரோஸ் அமைப்பில் இணைந்து ஈழவிடுதலைப்போராட்டத்தில் செயற்பட்டார். அந்த இயக்கத்தின் அரசியல் ஏடான 'பொதுமை' பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக்கழகத்தின் வெளியீடான 'வெளிச்சம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் 'தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி'யின் பணிப்பாளராகவும் செயற்பட்டிருக்கிறார். நூற்றுக்கு மேற்பட்ட இலக்கியக் கூட்டங்களையும் நூல் அறிமுக நிகழ்வுகளையும் திரைப்படக் காட்சிகளையும் நடத்தியுள்ளார். கிளிநொச்சி எழத்தாளர் - வாசகர் வட்டம், மக்கள் சிந்தனைக் களம், கிளிநொச்சி திரைப்பட வட்டம் ஆகியவற்றின் தொடக்குநர்.

இவர் 1987 ஆம் ஆண்டு வசந்தகுமாரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண் பிள்ளைகள். ஹேமந்த் (1987) விதுல்ஜன் (மகிழ்) (1996)

எழுத்துலக அறிமுகம்

பள்ளிக் கல்விக் காலத்தில் இயக்கச்சியில் வசித்த இரத்தினசிங்கம், பத்மநாதன் ஆகியோரால் வாசிப்பில் ஆர்வமூட்டப்பட்டார். முதல் கவிதை தினகரன் (கொழும்பு) பத்திரிகையில் 1981 இல் பிரசுரமானது. தொடர்ந்து நா.விசுவலிங்கம் மூலமாக “மல்லிகை“ சஞ்சிகையில் எழுதினார். முதல் நேர்காணல் “கவிதை” இதழில் வெளியானது. முதல் கவிதைத் தொகுப்பு 1999 இல் வெளியிடப்பட்டது.

பணியும் படைப்புகளும்

1980 களின் முற்பகுதியிலிருந்து கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அரசியல், சமூகவியல் துறைகளில் ஆய்வு, விமர்சனம் எனப் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சுயாதீன ஊடகவியலாளராக சாதாரண மக்களையும் துறைசார்ந்த ஆளுமைகளையும் பல நேர்காணல்களில் பதிவு செய்திருக்கிறார். 'மகிழ்' பதிப்பகத்தின் வாயிலாக பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவரது கவிதைகள் ஆங்கிலம், சிங்களம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பெயர்ப்புக்குள்ளாகியுள்ளன. 'இப்படி ஒரு காலம்' என்ற கட்டுரைத் தொகுப்பு Wanni Mathaga (வன்னி நினைவுகள்) என்ற பெயரில் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கவிதை நூல்கள்

  1. ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல் (மகிழ் - 1999)
  2. ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள் (மகிழ் - 2003)
  3. பலியாடு (வடலி - 2009)
  4. எதுவுமல்ல எதுவும் (மகிழ் - 2010)
  5. ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள் (கருப்புப்பிரதிகள் - 2012)
  6. நெருப்பின் உதிரம் ( மகிழ் - 2014)
  7. இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் ( காலச்சுவடு 2015)
  8. படுவான்கரைக் குறிப்புகள் (மகிழ் - 2015)
  9. நினைவின் இறுதி நாள் (புது எழுத்து - 2020)
  10. உலகின் முதல் ரகசியம் (புலம் - 2020)
  11. கடவுள் என்பது துரோகியாயிருத்தல் (யாவரும் - 2021)
  12. இரவின் தூரம் (நடு 2021)
  13. மௌனத்தின் மீது வேறொருவன் (தாயதி 2021)
  14. அருளப்பட்ட மீன் (பரிசல் 2022)

சிறுகதைகள்

  • வேட்டைத்தோப்பு (கயல்கவின் 2014)

கட்டுரை

  • இப்படி ஒரு காலம் (கரைச்சி கலாச்சாரப்பேரவை - 2014)
  • அன்பின் திசைகள் (மகிழ் 2018)
  • எதிர் (கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் - வேரல் புக்ஸ் 2022)

நேர்காணல்

புகைப்படக்காரன் பொய் சொல்வதில்லை (எதிர் பதிப்பகம் 2016)

விருதுகள்/ பரிசுகள்

1991 ஆண்டு “ஈழநாதம்” பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு

2014 ஆண்டு தோப்பு இலக்கிய வட்டத்தின் ”மொழி விருது”.

2011 ஆண்டு கரைச்சி கலாசாரப் பேரவையின் “கரை எழில் விருது” .

2013 ஆண்டு பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கத்தின் “தென்னங்கீற்று விருது”

2022 ஆண்டு பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் ”எழுத்துக்கலைஞர் விருது”

2023 ஆண்டு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசு (கடவுள் என்பது துரோகியாயிருத்தல்)

2023 ஆண்டு உள்ளம் சஞ்சிகையின் விருதும் பணமும் அளிக்கப்பட்டது.

2023 ஆண்டு தீம்புனல் பத்திரிகையின் ”சிறந்த எழுத்தாளருக்கான விருது”

மேற்கோள்கள்

https://www.suyaanthan.com/2020/05/blog-post_10.html

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கருணாகரன்_(கவிஞர்)&oldid=15429" இருந்து மீள்விக்கப்பட்டது