கன்னியாகுமரி (திரைப்படம்)

கன்னியாகுமரி (Kanyakumari) என்பது 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாளத் திரைப்படமாகும். இதை கே. எஸ். சேதுமாதவன் இயக்கினார். இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாகவும், ரீட்டா பாதுரி கதாநாயகியாகவும் நடித்தார். ஜெகதே சிறீகுமாரின் முதல் படமான இது, ஒரு சிற்பி கடலோரத்தில் வளையல்களையும் முத்துக்களையும் விற்கும் ஒரு பெண்ணைச் சந்தித்து அவளைக் காதலிப்பதைப் பற்றிய படம்.

கன்னியாகுமரி
விளம்பர சுவரொட்டி
இயக்கம்கே. எஸ். சேதுமாதவன்
தயாரிப்புகே. எஸ். ஆர். மூர்த்தி
கதைஎம். டி. வாசுதேவன் நாயர்
இசைஎம். பி. சீனிவாசன்
நடிப்பு
ஒளிப்பதிவுபி. எல். ராய்
கலையகம்சித்ராஞ்சலி பிலிம்ஸ்
விநியோகம்செண்டரல் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 26, 1974 (1974-07-26)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

மலையாளத்தில் கண்ணும் கரளும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் நடித்தபிறகு முதன்முதலில் வளர்ந்தபிறகு நாயகனாக அறிமுகமான படம் இதுவாகும். இந்தப் படத்துக்காக அவர் தனது முதல் பிலிம்பேர் விருதையும் பெற்றார். மேலும் இந்தப் படம்தான் ரீட்டா பாதுரி திரையுலகில் அறிமுகமான படமாகும்.[1]

கதை

சங்கரன் (கமலகாசன்) என்ற சிற்பி, கன்னியாகுமரியில் வேலை செய்துவருகிறான். சங்கரன் பாசிமாலை விற்கும் பார்வதியை காதலிக்கிறான். பார்வதியின் மாமனான வீரப்பன், பார்வதியிடம் இருக்கும் பணத்தை பறித்துச் சென்று குடிப்பவனாக இருக்கிறான். சங்கரன் தான் இப்போது பார்த்துவரும் தன் வேலை முடிந்ததும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறான். எனவே விரைவில் பார்வதியுடன் கன்னியாகுமரியை விட்டு வெளியேறும் எண்ணத்தில் இருக்கிறான். இதற்கிடையில், வீரப்பன் பார்வதியை கடற்கரை விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள ஒரு காமுகனான ஃபிரடெரிக்கிற்கு விற்க முயற்சிக்கிறான். இதிலிருந்து தப்பிக்கிறாள் பார்வதி.

ஒரு பணக்கார தொழிலதிபரின் மகன் ஜெயன் ஆறுதல் தேடி கன்னியாகுமரிக்கு வருகிறான். அங்கு அவர் தனது காதலியான ரஜனியை சந்திக்க நேரிடுகிறது. ரஜனி இப்போது பணக்கார தொழிலதிபரான சோமசுந்தரத்தின் மனைவி. இந்த முறிந்த காதல்தான் ஜெயனை தேவதாசாக மாற்றியது. ரஜனி தனது குடும்பத்தை நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்ற அந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தினால் மணந்து கொள்கிறாள்.

ஃபிரடெரிக்கும் வட இந்திய தொழிலதிபரின் இளம் மனைவிக்கும் இடையில் கள்ளத் தொடர்பு ஒரு துணைக்கதையாக வருகிறது. இதைப் பார்க்கும் ஜெயன் பிரடெரிக்கால் மிரட்டப்படுகிறான். மேலும் தனது தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறான். இச்சமயத்தில் கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொள்ளும் ஒரு சன்னியாசியுடன் ஜெயன் நட்பு கொள்கிறார். இருவரும் பார்வதியின் மீது பரிதாபப்பட்டு, அவளை வீரப்பனிடமிருந்தும், பிரடெரிக்கிடமிருந்தும் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.

நிகழ்வுகள் ஒரு கொடூரமான திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு நாள் இரவு, கடற்கரையில் தனியாக இருக்கும் பார்வதியை ஃப்ரெடெரிக் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறான். அவளின் அலறல் சத்தம் கேட்டு சங்கரன் விரைந்து வருகிறான். அப்போது சங்கரன் தன் சுத்தியலால் ஃபிரடெரிக்கை அடித்துக் கொல்கிறான். கொலைக் குற்றத்துக்காக காவலர்களால் அழைத்துச் செல்லப்படும் சங்கரனை பார்வதி கண்ணீருடன் பார்த்து நிற்கிறாள்.

நடிகர்கள்

  • சங்கரனாக கமல்ஹாசன்
  • பார்வதியாக ரீபா பாதுரி
  • ஜெயனாக பிரேம் நிவாஸ்
  • வட இந்திய தொழிலதிபராக சங்கராடி
  • பிரெட்ரிக்காக முரளி தாஸ்
  • சோமந்தரமாக வீரன்
  • ரஜனியாக மணிமாலா
  • கண்ணமாவாக பாலதங்கம்
  • வீரப்பனாக என். கோவிந்த குட்டி
  • பாஸ்கரனாக ஆலும்மூடன்
  • சுற்றுலா பயணியாக ஜெகதே சிறீகுமார்
  • சுற்றுலா பயணியாக மல்லிகா சுகுமாரன்
  • சுவாமியாக கே.ஜி.மேனன்
  • ஓ.ராமதாஸ்
  • எம்.ஓ.தேவாசியா
  • அசோக் குமார்
  • அப்பச்சன்
  • மாலா
  • மதுமதி
  • ரஜனி
  • விஜயலட்சுமி
  • மீனா குமாரி
  • குழந்தை ராதிகா
  • சிந்து
  • ஷெர்லி

தயாரிப்பு

கன்னியாகுமரியை எம். டி வாசுதேவன் நாயர் எழுதி, கே. எஸ். சேதுமாதவன் இயக்கினார். இப்படத்தை சித்ராஞ்சலி பிலிம்சு பதாகையில் கே. எஸ். ஆர். மூர்த்தி தயாரித்தார். பி. எல். ராய் ஒளிப்பதிவு செய்தார். முழுப் படமும் கன்னியாகுமரி நகரத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் படமாக்கப்பட்டது. [2] இந்தப் படம்தான் ரீட்டா பாதுரி திரையுலகில் அறிமுகமான படமாகும். [3]

இசை

இப்படத்திற்கு எம். பி. சீனிவாசன் இசையமைத்தார். பாடல் வரிகளை வயலார் ராமவர்மா மற்றும் எம். பி. சீனிவாசன் ஆகியோர் எழுதினர்.[4]

பாடல்கள் பட்டியல்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆயிரம் கண்ணுள்ள"  கே. ஜே. யேசுதாஸ், பி. லீலா, எல். ஆர். ஈஸ்வரி & குழுவினர்  
2. "சந்திரப்பளிங்கு மணிமால"  கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி  
3. "ஐ ஆம் இன் லவ்"  உஷா உதூப்  

வெளியீடு

கன்னியாகுமரி 26 சூலை 1974 அன்று வெளியானது [2] படம் வசூல் ரீதியாக வெற்றியானது. [2] 2014 இல், தி இந்துவின் பி. விஜயகுமார் எழுதினார், "கமலகசன் மற்றும் ரீட்டா பாதுரி அவர்களின் இயல்பான நடிப்பால் பார்வையாளர்கள் ஈர்க்கப்பட்டனர்." [2]

விருதுகள்

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்

கமலகாசன் சிறந்த மலையாள நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். [5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்