கசடதபற (சிற்றிதழ்)
கசடதபற என்பது 1970 ஆம் ஆண்டு தொடங்கி மூன்றாண்டுகள் வெளிவந்த ஒரு இலக்கிய சிற்றிதழாகும்.[1] அது கலை, இலக்கியம், விமர்சனம், சிற்பம், ஓவியம் என்று முக்கியமாகக் கொண்டு செயல்பட்டது. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட ஏழு அல்லது எட்டு நபர்கள் ஒன்றாக சேர்ந்து எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டார்கள். கசடதபற இதழானது சிறுகதைகள், புதுக்கவிதைகள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகளுடன் இலக்கிய நடப்புகள் பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. அதுபோல், தமிழ்நாட்டு ஓவியர்களின் சித்திரங்களைத் தொடர்ந்து வெளியிட்டது.
முப்பதாண்டுகளுக்குப் பிறகு, கசடதபற ஏடுகளைப் புரட்டிப் பார்க்கையில், அதில் கழிப்பதற்கு அதிகமாக ஒன்றுமில்லை என்று சா. கந்தசாமி அவர்கள் கூறியுள்ளார். கசடதபறவின் விழுமிய நோக்கங்களையும், அதில் இடம் பெற்ற எழுத்துக்களையும் மறுபதிப்பு செய்வதும், இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் அவாவும் எழுத்தாளர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் என்று எம். நந்தன் அவர்கள் கூறியுள்ளார்.
வரலாறு
நடை காலாண்டிதழுடன் தொடர்புடைய இளைஞர்கள் சிலர் சொந்தமாக ஒரு இதழைத் துவக்கியபோது, அதற்கு முற்றிலும் புதுமையானபுரட்சிகரமான-ஒரு பெயராக கசடதபற என்பதைத் தேர்ந்தெடுத்தார்கள். 1970 அக்டோபரில் பெரிய அளவில் ( க. நா. சு. நடத்திய இலக்கிய வட்டம் அளவில் , 16 பக்கங்கள் கொண்ட ‘கசடதபற'வின் முதல் இதழ் வெளிவந்தது. விலை 30 காசு.
இதழில் ‘கசடதபற’ - ஒரு வல்லின மாத ஏடு. 'கோபம் கொண்ட இளைஞர்கள்' என்ற வாசகங்கள் இடம்பெற்றன. வாளும் கேடயமும் ஏந்திய ஒரு போர் வீரனின் (இந்திய மரபு) ஓவியத்தைத் தங்கள் பத்திரிகையின் நிரந்தரச் சின்னமாகப் பொறித்தார்கள்.
இந்த இதழுக்கு நா. கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராகவும், என். மகா கணபதி வெளியீட்டாளார் ஆகவும் செயலாற்றினர். ‘கசடதபற’ வுக்கு ஞானக்கூத்தன், சா. கந்தசாமி, ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்), ந. முத்துசாமி, ராமகிருஷ்ணன், அசோகமித்திரன் முதலியவர்கள் ஊக்கத்தோடும் உற்சாகத்துடனும் படைப்புகளை எழுதி வளர்த்தனர்.
படைப்புகள்
புதுமையான சிறுகதைகள், புதுக் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், இலக்கிய விமர்சனம், புதிய புத்தகங்கள் பற்றிய விரிவான மதிப்புரைகள், சோதனை ரீதியான நாடகங்கள் (ந. முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி எழுதியவை). நாடகக்கலை, ஓவியக்கலை, கூத்து பற்றிய கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் இப்படிப் பலவற்றையும் கசட தபற வெளியிட்டது. ‘கசடதபற' வைச் சேர்ந்தவர்களைத் தவிர, நகுலன், ஆர். இராஜேந்திரசோழன், பாலகுமாரன், கல்யாண்ஜி, இந்திரா பார்த்தசாரதி முதலியோரும் கதைகள் எழுதியிருக்கிறார்கள். கி. அ. சச்சிதானந்தம், வெ. சாமிநாதன், தர்மு அரூப் சிவராம், எஸ். கோபாலி போன்றவர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளனர். க. நா. சுப்பிரமணியம் சில கவிதைகள், கதை- கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
ஓவியர்கள் கே. எம். ஆதிமூலம், பாஸ்கரன், பி. கிருஷ்ணமூர்த்தி, கே. தாமோதரன், டி. கே. பத்மினி, எஸ். வைதீஸ்வரன், சிதம்பரகிருஷ்ணன் முதலியவர்களது ஓவியங்களை கசடதபற வெளியிட்டது. ஓவியம் பற்றிய கட்டுரைகளும் அவ்வப்போது வெளியாயின.
கசடதபற இதழானது கவிதைக்கு நிறைய பணியாற்றியுள்ளது. ஞானக்கூத்தன், பாலகுமாரன், கோ. ராஜாராம், எஸ். வைதீஸ்வரன், கலாப்ரியா, சச்சிதானந்தம், தருமு சிவராம், நீலமணி, கல்யாண்ஜி, ஆத்மாநாம், நா. ஜெயராமன், மகாகணபதி மற்றும் பலர் இதில் கவிதைகள் எழுதியுள்ளனர். புதுக்கவிதை பற்றிய சார்வாகன் கட்டுரை விசேஷமாகக் குறிப்பிடத் தகுந்தது.
நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஸோல்ஸனிட்ஸினின் நோபல் உரை (14 பக்கங்கள் ) 26-ம் இதழ், நவம்பர் 1972, ஸோல்ஸெனிட்ஸின் ஒரு பரிசீலனை ( எஸ். வி. ராஜதுரை ), ஜீன் பால்சார்த்தருடன் ஒரு பேட்டி மற்றும் கான்ஸர் வார்டு (ராஜதுரை ) புனிதஜெனே (தர்மு அரூப் சிவராம் ) ஆகிய கட்டுரைகளும் முக்கியமானவை.
‘கசடதபற'வின் 17-18வது இதழ் (1972 மார்ச்- ஏப்ரல் ஒரே இதழ்) க. நா. சு. சிறப்பிதழாக வந்தது. க. நா. சு. பற்றிய பல கட்டுரைகளுடன் க. நா. சு. வின் படைப்புகளும் அதில் இடம் பெற்றன. 13-வது இதழ் நாடகச் சிறப்பிதழாக வந்தது. இந்திரா பார்த்தசாரதியின் நாடகம் 'மழை' முழுமையாக அதில் வெளியானது. அந்த இதழிலிருந்து பத்திரிகையின் அளவும் மாறுதல் பெற்றது. சற்றே சுருங்கிய வடிவில் ( ‘கணையாழி' அளவில்) வெளிவரலாயிற்று. 25வது இதழ் சிறப்புத் தயாரிப்பு. அதிகப் பக்கங்கள், கவிதைகள், கதைகள், சித்திரங்கள் மிகுதியாக இடம் பெற்றன.
கசடதபறவின் ஒவ்வொரு இதழிலும் அக்கம் பக்கம் என்ற பகுதி உண்டு. அக்கப்போர், தாக்குதல், தாக்குதலுக்குப் பதில், சூடும் சுவையும் கலந்த அபிப்பிராயங்கள், தகவல்கள், இதில் வெளிவந்து கொண்டிருந்தன.
நிறுத்தம்
கசடதபற, 32 இதழ்களுக்குப் பிறகு, 1973 சூன்- சூலை என்று குறிப்பிட்டு, சிதம்பர கிருஷ்ணன் ஓவியம் ஒரு பக்கமும் ஒரு அறிவிப்பை மறுபக்கமும் அச்சிட்ட ஒரு தாளை அனைவருக்கும் அனுப்பியது. அதில் தனது வெளியீட்டை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.
சிறிது கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘கசடதபற'வைக் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிறிய அளவில், குறைந்த பக்கங்களோடு, சில இதழ்கள் வரவும் செய்தன. சீக்கிரமே அம் முயற்சியும் கைவிடப்பட்டது.[2]
மேற்கோள்கள்
- ↑ சா. கந்தசாமி. "கசடதபற". அறிமுகம் (encyclopediatamilcriticism.com) இம் மூலத்தில் இருந்து 2018-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180716181424/http://www.encyclopediatamilcriticism.com/kasadathapara.php. பார்த்த நாள்: 25 சூலை 2018.
- ↑ வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல் (மணிவாசகர் பதிப்பகம்): pp. 74-78. https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9F_%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%B1. பார்த்த நாள்: 13 நவம்பர் 2021.