ஒட்டணி அல்லது ஒட்டு அணி என்பது கவி தான் மனதில் கருதிய கருத்தினை நேரடியாகக்கூறாமல், அதனை வேறொரு பொருள் கொண்டு விளக்குவதாகும்.

குறிப்பு

"கருதிய பொருள்தொகுத்(து) அதுபுலப் படுத்தற்(கு)
ஒத்ததொன் றுரைப்பின்அஃ(து) ஒட்டென மொழிப." என்கிறது தண்டியலங்காரம் 52-ஆம் பாடல்.

வேறு பெயர்கள்

ஒட்டணியினை பின்வரும் வேறு பெயர்களாலும் அறிஞர்கள் அழைப்பர்:

  1. பிறிது மொழிதல் (புறப்பொருள்)
  2. நுவலா நுவற்சி
  3. சுருங்கச் சொல்லல்
  4. தொகைமொழி
  5. உள்ளுறையுவமம் (அகப்பொருள்)
  6. உவமப் போலி

தொல்காப்பியர் குறிப்பிடும் உள்ளுறை உவமம் அல்லது உவமப் போலி என்பது அகப்பொருள் பாடல்களில் மட்டும் பயின்று வரும். தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும். மேலே ஒட்டு அணிக்குச் சான்றாகத் தண்டியலங்கார ஆசிரியர் காட்டிய வெறிகொள் இனச்சுரும்பு என்று தொடங்கும் பாடல், மருதத் திணைக்கு உரிய தாமரைமலர், காவிமலர் ஆகிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டிருப்பதைக் காணலாம். தொல்காப்பியர் குறிப்பிடும் உள்ளுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணரும் இப்பாடலையே காட்டியுள்ளார்.

அகப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணியை 'உள்ளுறை உவமம்' என்றும், புறப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணியைப் 'பிறிது மொழிதல் அணி' என்றும் இலக்கண விளக்கம் என்ற நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் வேறுபடுத்திக் கூறுகின்றார்.

வகைகள்

ஒட்டணி நான்கு வகைகளென பின்வரும் தண்டியலங்காரம் 53-ஆம் பாடல் விளக்குகிறது:

அடையும் பொருளும் அயல்பட மொழிதலும்,
அடை பொதுவாக்கி ஆங்ஙனம் மொழிதலும்,
விரவத் தொடுத்தலும், விபரீதப் படுத்தலும்,
எனநால் வகையினும் இயலும் என்ப.

எனவே, ஒட்டணியின் வகைகளாவன:

  1. அடையும் பொருளும் அயல்பட மொழிதல்
  2. அடை பொதுவாக்கி அயல்பட மொழிதல்
  3. அடைவிரவிப் பொருள் வேறுபட மொழிதல்
  4. அடையை விபரீதப்படுத்துப் பொருள் வேறுபட மொழிதல்

எடுத்துக்காட்டு

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்" - 475-வது திருக்குறள், வலியறிதல், அரசியல், பொருட்பால்

மென்மையான மயிற்பீலி (மயிலிறகு) கூட அளவுக்கு அதிகமாக வண்டி மீது ஏற்றினால் அச்சு முறிந்துவிடும் என்பது பொருள். எனினும், இக்குறள் "வலியறிதல்" என்ற அதிகாரத்தில் அரசியலினை குறிப்பதனால் இதற்கு பலமில்லா பல எதிரிகள் ஒன்று சேர்ந்தால் அவர்கள் வெல்வர் என்னும் உட்பொருள் கொள்ள வேண்டும். எனவே கூற வந்த கருத்தினை உள்ளடக்கிய முற்றிலும் வேறொரு கருத்தினை வைத்தமையால் இச்செய்யுள் ஒட்டணியாகும்.

"https://tamilar.wiki/index.php?title=ஒட்டணி&oldid=13531" இருந்து மீள்விக்கப்பட்டது