ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. அன்பின் ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. அவை, ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டதாக விளங்குகிறது. இந்நூல் குறைந்த அடியெல்லை கொண்ட பாக்களால் அமைந்தமையால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.அந்தப் பாடல் சிவபெருமானின் விரிவாக்கத் தன்மையை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புலவர்கள்
ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த 100 பாடல்களையும் ஒவ்வொரு புலவர் இயற்றியுள்ளார். அவ்வகையில் இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் வெண்பாவைக் கீழ்க்காண்போம்.
சான்று :
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சிக் கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லைப் பேயனேநூலையோ தைங்குறு நூறு.
விளக்க உரை :
- மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
- நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
- குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
- பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
- முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்
ஆகியோர் பாடியுள்ளனர். இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார்.
நூலின் அமைப்பு
எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். இதில் திணைப்பாடல்கள் அமைவுமுறையை, "மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே" என்ற அடிகள் தெளிவுபடுத்துகின்றன. இந்நூலில் நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அப்பாடல்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ ஒவ்வொரு பத்துப் பாடல்களும் சிறப்பான தலைப்புப் பெயர்கள் பெற்றுள்ளன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, தெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன. மேலும் தொண்டிப்பத்து (பாடல் 171-180) என்ற தலைப்பின் கீழ் அமைந்த பத்துப் பாடல்களும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. இதனைப் பாடியவர் நெய்தல் திணையைப் பாடிய அம்மூவனார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாய்ப்பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. ஐந்திணைக் கருப்பொருட்களான விலங்குகளையும் பறவைகளையும் அடிப்படையாகக் கொண்டு எருமைப்பத்து, கேழற்பத்து (கேழல்-பன்றி), குரக்குப்பத்து, கிள்ளைப்பத்து (கிள்ளை-கிளி), மஞ்ஞைப்பத்து (மஞ்ஞை-மயில்), போன்ற பெயர்களும் பாடல்களின் தொகுப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.
ஐங்குறுநூறு குறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ள பாடல்களைக் கொண்டுள்ளது. ஆனால் இந்நூலின் பாடல்கள் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி பொருட்கள் மூன்றும் குறைவாக அமைந்துள்ளது.
பதிப்பு வரலாறு
ஐங்குறுநூற்றின் பாடல்கள் கடைச்சங்க காலம் முதலாகச் சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர்த் தமிழறிஞர் பலரும் இந்நூலுக்கு உரைகள் எழுதி வெளியிட்டுள்ளனர்."[1]
குறிப்புகள்
- ↑ சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 191