ஏ. எஸ். கே.

ஏ. எஸ். கே. (A.S.K.) என்பவர் இந்திய பொதுவுடமை கட்சியின் தலைவர்களில் ஒருவராவார். இவரது இயற்பெயர் ஆவியூர் சீனிவாச அய்யங்கார் கிருஷ்ணமாச்சாரி என்பதாகும்.[1] தமிழகப் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் சிறந்தவராகவும் கருதப்படுகிறார். ஈ.வெ.ரா மற்றும் அம்பேத்கார் மீது இவர் பெரும் மதிப்பை கொண்டிருந்தார். ஆங்கில மொழிக் கவிஞர்., தொழிற்சங்கத் தலைவர். விடுதலைப் போராட்ட வீரர். எழுத்தாளர். இறைமறுப்பாளர். 1969, சூன் 6 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் 692ஆம் பக்கத்தில் அறிவித்து தன்னுடைய பெயரை ஏ. எஸ். கே. என மாற்றிக்கொண்டவர்.

பிறப்பும் குடும்பமும்

ஆவியூர் என்னுமிடத்திலிருந்து இடம்பெயர்ந்து ஐதராபாத் நகரில் வாழ்ந்து வந்த சீனிவாச அய்யங்கார், தங்கம்மாள் இணையருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தவர் ஏ. எஸ். கே. இவருடன் இராசம்மாள், பங்கசம் என்னும் இரு அக்காக்களும் இராமசாமி, துரைசாமி, பார்த்தசாரதி என்னும் மூன்று அண்ணன்களும் அரங்கனாதன் என்னும் தம்பியும் பிறந்தனர். ஏ. எஸ். கே. விற்கு மூன்று வயதாகும்பொழுது அவர்தம் அம்மா தங்கம்மாள் இயற்கை எய்திவிட்டார். எனவே, இவர்கள் அனைவரும் தம் பெரியம்மாவாகிய பொன்னம்மாளிடம் வளர்ந்தனர். ஏ. எஸ். கே.தம் தம்பியான அரங்கநாதன், ரெங்காச்சாரி என்னும் பெயரில் படித்துப் பட்டம்பெற்று, மும்பய்க்குச் சென்றார். இவர்தான் பின்னாளில் பொதுவுடைமைக் கட்சியின் வழக்கறிஞராகத் திகழ்ந்து புகழ்பெற்ற ஏ. எஸ். ஆர். சாரி ஆவார். இவர் தில்ஷாத் சையத் என்னும் மும்பை நகரைச் சேர்ந்த முசுலீம் பெண்ணை மணந்து கொண்டார்.

ஏ. எஸ். கேக்கு அண்ணன்களான துரைசாமி சாதி கடந்த திருமணமும் பார்த்தசாரதி மதம் கடந்த திருமணமும் செய்துகொண்டனர். ஏ. எஸ். கே. திருமணமே செய்துகொள்ளவில்லை.

ஆசிரியர் வேலை

ஏ. எஸ். கே. தன்னுடை பட்டப்படிப்பு முடிந்ததும் ஐதராபாத் நகரிலிருந்த கிறித்துவப் பள்ளி ஒன்றில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பள்ளியில் ஏற்கனவே கிருஷ்ணமாச்சாரி என்னும் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால், அப்பள்ளின் தலைவராக இருந்த பாதிரியார், இவரை ஏ. எஸ். கே. அய்யங்கார் என அழைக்கத் தொடங்கினார். இப்பெயரே, தன்னுடைய பெயரை சட்டப்படி மாற்றிக் கொண்ட பின்னரும், ஏ. எஸ். கே.வின் பெயராக நிலைத்துவிட்டது.

அப்பள்ளியில் ஏ. எஸ். கே. சில மாதங்களே வேலை பார்த்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்னைக்குச் சென்றார்.

அரசியல் வாழ்க்கை

ஏ. எஸ். கே. தாம் மாணவராக இருந்த பொழுதே, மீரத்து பொதுவுடைமையாளர் சதி வழக்கு பற்றிய செய்திகளைப் படித்ததால் பொதுவுடைமைக் கோட்பாட்டின் மீது ஆர்வம் கொண்டார். காரல் மார்ச்சு எழுதிய நூல்களைப் படித்தார்.

எனவே 1934 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்த ஏ. எஸ். கே., அப்பொழுது தடைசெய்யப்பட்டிருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.

1935ஆம் ஆண்டில் ம. சிங்காரவேலருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

1937 ஆம் ஆண்டில் பெரியார் ஈ. வெ. இரா. வுடம் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

1937ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் எஸ். வி. காட்டே தொழிற்சங்க இயக்கத்திற்கும் பொதுவுடைமைக் கட்சிக்கும் வழிகாட்டுவதற்காக சென்னைக்கு வந்து தங்கியிருந்தபொழுது அவருடன் இணைந்து பணியாற்றினார். 1937ஆம் ஆண்டில் சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக ஏ. எஸ். கே. பதவி வகித்தார்.

விடுதலைப் போராட்ட காலத்திலும் அதற்குப் பின்னருமாக ஏ. எஸ். கே தனது அரசியல் போராட்டங்களால் பதினைந்தரை ஆண்டுகளைச் சிறையில் கழித்திருக்கிறார்.

தேச விடுதலைப் போராட்டங்களிலும் தொழிற்சங்கப் போராட்டங்களிலும் ஈடுபட்ட அவர், சென்னை துறைமுகத் தொழிலாளர்களுக்காக அமைத்துக் கொடுத்த தொழிற்சங்கங்கள், கூட்டுறவுப் பண்டகசாலை, பயிற்சிப்பள்ளிகள் ஆகியன அவரது பெயரை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

எழுதிய நூல்கள்

  1. கம்யூனிஸம் என்றால் என்ன?
  2. கம்யூனிஸ்டு தத்துவத்தின் அடிப்படை
  3. கடவுள் கற்பனையே – புரட்சிகர மனித வரலாறு
  4. தொழிற் சங்கம்
  5. தங்கம்மா (நெடுங்கதை)
  6. உலக கம்யூனிஸ்டு இயக்க வரலாறு
  7. பகுத்தறிவின் சிகரம் ஈ. வெ. ரா, (பகத் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், 1/73 பிராட்வே, சென்னை; மு. பதிப்பு 1974)
  8. The Great Revolution and Other Poems
  9. In the Land of Dimitroy
  10. A Study in the Co-operative Movement in India
  11. Israel – A Poem
  12. Me Lud! – A Poem
  13. ரஷ்யா
  14. அம்பேத்கார் வாழ்க்கையும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையும்.

வாழ்க்கை வரலாறு

ஏ. எஸ். கே.வின் வாழ்க்கை வரலாற்றை தொழிற்சங்க மேதை ஏ. எஸ். கே. அய்யங்கார் என்னும் தலைப்பில் முத்து குணசேகரன் எழுதியிருக்கிறார். இந்நூலை சென்னையில் உள்ள சேகர் பதிப்பகம் 2008ஆம் ஆண்டில் வெளியிட்டது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஏ._எஸ்._கே.&oldid=3614" இருந்து மீள்விக்கப்பட்டது