ஏழாம் வேற்றுமை

ஏழாம் வேற்றுமை என்பது "இட வேற்றுமை" என்று வழங்கப்படுகிறது. அதாவது தொழில் அல்லது வினை நிகழும் இடத்தைக் குறிப்பது. இடத்தோடு காலத்தையும் குறிப்பிடும்.

தொல்காப்பியம்

வினைசெய் யிடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே [1]

என்று கூறுவது இதனைக் குறிப்பிடும்.

"முருகன் வள்ளியைக் கடையில் பார்த்தான்" என்னும் கூற்றில் கடையில் என்னும் சொல்லில் உள்ள இல் என்பது இடத்தைக் குறிக்கும் ஏழாம் வேற்றுமை. அது போலவே, "முருகன் வள்ளியை அரைநொடியில் கண்டுபிடித்துவிட்டான்" என்று கூறும்பொழுது "அரைநொடியில்" என்னும் சொல்லில் வரும் இல் காலத்தைக் குறிக்கின்றது.

இந்த ஏழாம் வேற்றுமையின் பொருளானது பொருள்,இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயர்களுக்கும்; தற்கிழமை (தன்னிலிருந்து பிரிக்கமுடியாத தொடர்பு), பிறிதின் கிழமை (பிற பொருளோடு தொடர்பு) என்ற இரண்டு வகைக் கிழமைப் பொருள்களுக்கும் இடமாக நிற்றலாகும் (கிழமை = உரிமை). இவ்வேற்றுமை இடப்பொருளையே உணர்த்தும். சான்று

பொருள் இடமானவை

மணியின்கண் ஒலி ---தற்கிழமை

மரத்தின்கண் பறவை --- பிறிதின் கிழமை

இடம் இடமானவை

ஊரின்கண் உள்ளது வீடு - தற்கிழமை

ஆகாயத்தின் கண் பறப்பது கழுகு - பிறிதின் கிழமை

காலம்

நாளின் கண் உள்ளதுநாழிகை - தற்கிழமை

வேனிற்கண் பூப்பது முல்லை - பிறிதின் கிழமை

சினை

கையின் கண் உள்ளது விரல் - தற்கிழமை

கையின்கண் உள்ளது வளையல் - பிறிதின் கிழமை

குணம்

சிவப்பின்கண் உள்ளது அழகு - தற்கிழமை

இளமையின் கண் வாய்த்தது செல்வம் - பிறிதின் கிழமை

தொழில்

ஆட்டத்தின் கண் உள்ளது அபிநயம் - தற்கிழமை

ஆட்டத்தின் கண் பாடிய பாட்டு -பிறிதின் கிழமை

நன்னூல் நூற்பா

" ஏழனுருபு கண்ணாதி யாகும்
பொருள் முத லாறும் ஓரிரு கிழமையிமன்
இடனாய் நிற்ற லிதன் பொருளென்ப."[2]

ஏழாம் வேற்றுமை உருபுகள்

ஏழாம் வேற்றுமை உருபுகள் கண் முதலாக இருபத்தெட்டும் பிறவும் ஆகும்.

  1. கால்- ஊர்க்கால்
  2. கடை - வேலின்கடை
  3. இடை- நல்லாரிடை
  4. தலை - வலைத்தலை
  5. வாய் - கடல் வாய்
  6. திசை - தேர்த்திசை
  7. வயின் - அவர் வயின்
  8. முன் - கற்றார் முன்
  9. சார் - பொழில்சார்
  10. வலம் - கைவலம்
  11. இடம் - இல்லிடம்
  12. மேல் - தலைமேல்
  13. கீழ் - நிழற்கீழ்
  14. புடை - எயிற்புடை ( எயில்- மதில்)
  15. முதல் -இந்திரன் முதல்
  16. பின் - காதலி பின்
  17. பாடு -- நும்பாடு
  18. அளை - கல்லளை
  19. தேம் - கொடாய்த் தேத்து
  20. உழை - அவணுழை
  21. வழி - நிழல்வழி
  22. உழி - உற்றுழி
  23. உளி - காவுளி ( கா- சோலை)
  24. உள் - குவட்டுள் (குவடு - மலை உச்சி)
  25. அகம் - பல்லாரகத்து
  26. புறம் - உயிர்ப்புறத்து
  27. இல் - ஊரில்

ஆதி என்றதனால்
பக்கல், பாங்கர், முகம், மாடு, பால், இன் - முதலானவையும் உருபாக வரும் சான்று

  • அவன் பக்கல்
  • காட்டுப் பாங்கர்
  • போர்முகத்து
  • யாவர் மட்டும்
  • அவன்பால்
  • நாட்டின்

துணை நூல்

மேற்கோள்

  1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா. 81
  2. நன்னூல், சொல்லதிகாரம், நூற்பா. 301
"https://tamilar.wiki/index.php?title=ஏழாம்_வேற்றுமை&oldid=13522" இருந்து மீள்விக்கப்பட்டது