எர்பர்ட் தம்பையா
நீதிபதி எர்பர்ட் தர்மராஜா தம்பையா (Herbert Dharmarajah Thambiah, 14 அக்டோபர் 1926 – 4 அக்டோபர் 1992) இலங்கையின் ஒரு முன்னணி நீதிபதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், இலங்கைத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.
நீதிபதி ஹெர்பர்ட் தம்பையா Herbert Thambiah | |
---|---|
இலங்கையின் 39வது தலைமை நீதிபதி | |
பதவியில் 1991–1991 | |
நியமித்தவர் | ரணசிங்க பிரேமதாசா |
முன்னவர் | பரிந்த ரணசிங்க |
பின்வந்தவர் | ஜி. பி. எஸ். டி சில்வா |
இலங்கை மீயுயர் நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 1984–1992 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 14 அக்டோபர் 1926 |
இறப்பு | 4 அக்டோபர் 1992 | (அகவை 65)
படித்த கல்வி நிறுவனங்கள் | இலங்கை சட்டக் கல்லூரி இலங்கைப் பல்கலைக்கழகம் |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
வாழ்க்கைச் சுருக்கம்
தம்பையா 1926 அக்டோபர் 1926 இல் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சி. ஆர். தம்பையா என்பவருக்குப் பிறந்தார்.[1] யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கல்கிசை சென் தோமசு கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[1] பள்ளிப் படிப்பின் பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்றார்.[1] சிறிது காலம் யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர்[1] இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1954 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக வெளியேறினார்.[1]
தம்பையா ரஞ்சி அப்பாத்துரை என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சாவித்திரி என்ற ஒரு மகள் உள்ளார்.[1]
பணி
சட்டக் கல்லூரியில் இருந்து வெளியேறிய தம்பையா சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின்னர் நீதித் துறையில் இணைந்தார்.[1] 1978 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் 1984 இல் மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார்.[1] 1991 ஆம் ஆண்டில் அன்றைய அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசா இவரை தலைமை நீதிபதியாக நியமித்தார்.[2]
தம்பையா 1992 அக்டோபர் 4 அன்று தனது 65வது அகவையில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 220.
- ↑ "Overview". Judicial Service Commission Secretariat. Archived from the original on 2013-10-19. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2013.