என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை

என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. இவர் எழுதியனவாகச் சொல்லப்பெரும் இரட்சணிய குரல், இரட்சணிய பாலா போதனை என்பன இப்பொழுது கிடைத்தில. இரட்சணிய மனோகரத்தின் பெரும்பகுதி இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப் பெற்றது ஆகும். ஆகையால் இவரை கிருத்துவக் கம்பர் என்று அழைத்தனர்.

என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை
பிறந்ததிகதி (1827-04-23)23 ஏப்ரல் 1827
பிறந்தஇடம் கரையிருப்பு (அல்லது) ரெட்டியார்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்,
மதராசு தலைமாகாணம்,
பிரித்தானிய இந்தியா
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு 3 பெப்ரவரி 1900(1900-02-03) (அகவை 72)
பணி தமிழாசிரியர், எழுத்தாளர்
கருப்பொருள் கிறித்தவம்
குறிப்பிடத்தக்க படைப்புகள் இரட்சணிய யாத்திரிகம் (பதிப்பு- 1894)

வாழ்க்கை வரலாறு

கிருஷ்ண பிள்ளை தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பட்டி எனும் ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் குலத்தவர், வைணவ சமயத்தவர் ஆவார். இவரது பெற்றோர் சங்கர நாராயண பிள்ளை, தெய்வ நாயகியம்மை. கிருஷ்ணப் பிள்ளை இளமையிலேயே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் அக்கால முறைப்படி குலவித்தையாக நன்கு கற்றுத் தேர்ந்தார். அந்நாளில் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருப்பாற்கடல் நாதன் கவிராயரிடம் நன்னூலை முறையாகப் பாடங் கேட்டு அறிந்திருந்தார்.[1]

அக்காலகட்டத்தில் நெல்லை சீமையில் பல கிருத்தவ சங்கங்கள் சிறந்தமுறையில் சமயத் தொண்டு செய்து கொண்டிருந்தன. அவ்வாறு வேத விளக்கச் சங்கத்தின் சார்பாகக் கால்டுவெல் தொண்டு புரிந்துவந்தார்.கிருத்தவ அச்சங்கங்களின் ஆதரவில் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. சாயர்புரம் என்ற சிற்றூரில் போப்பையர் ஒரு கல்லூரி அமைத்து நடத்திவந்தார். அவர் ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றபோது அக்கல்லூரிக்குத் தமிழ்ப் புலமைவாய்ந்த நல்லாசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கால்டுவெல் ஐயரிடம் ஒப்படைக்கபட்டது. அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவர் கிருஷ்ண பிள்ளை. அவருக்கு அப்பொழுது வயது இருபத்தைந்து.[1]

தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் போதிய அறிவு பெற்று தகுதிவாய்ந்தவராக இருந்த கிருஷ்ண பிள்ளையைக் கால்டுவெல் ஐயர் தெரிந்தெடுத்துச் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார். சாயர்புரத்தில் வேலை யேற்று ஆசிரியர் பணி செய்து வரும் பொழுது கிருஷ்ண பிள்ளையின் வைணவ சமயப் பற்று மெல்லத் தளர்வுற்றது. ஏற்கனவே இவரது உறவினர் சிலர், கிருத்தவ சமயத்தை ஏற்றுக்கொண்டு இருந்தனர். அவர்கள் அதன் செம்மையை அடிக்கடி இவரிடம் எடுத்துரைப்பாராயினர். அந்நிலையில் கிருஷ்ண பிள்ளை கிருத்தவ நூல்களைக் கற்கத் தொடங்கினார். இதனால் கிருத்துவ சமயத்தின் மீது பற்றுகொண்டவராக மாறினார். இதனைத் தொடர்ந்து தமது முப்பதாம் வயதில் சென்னையிலுள்ள மயிலைத் தேவாலயத்தில் இவர் ஞானஸ்நானம் பெற்றுக் கிருத்துவ சமயத்தை ஏற்றுக்கொண்டார்.[1]

கிருத்தவ சமய சார்பான சிறந்த நூல்களை இலக்கியங்களைப் படைத்த இவர், தம் எழுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்.[1]

இவரது படைப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்