எண்ணடுக்கிச் செய்யுள்
எண்ணடுக்கிச் செய்யுள் என்பது எண்களைக் கொண்டு அமைக்கப்படும் செய்யுள் வகைகளில் ஒன்றாகும். எண்ணடுக்கிச் செய்யுள் இயற்றும் மரபு சங்க காலந்தொட்டு இருந்து வருகிறது.
எடுத்துக்காட்டுகள்
புறநானூறு 109
- “ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
- இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
- மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
- நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
- திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே”
என்று புறநானூற்றில் (புறம் 109:4-8, கபிலர் பாடியது) எண்ணடுக்குச் செய்யுள் உள்ளது.
சிலப்பதிகாரம்
- “ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
- முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
- ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
- அறுதொழி லந்தணர் பெறுமுகை வகுக்க”
என்று சிலப்பதிகாரத்தில் (சிலம்பு 23:67-70) செய்யுள் உள்ளது.
தேவாரப் பாடல்
- “ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
- மாறா மறை நான்காய்வரு பூதமவை ஐந்தாய்
- ஆறார் சுவை ஏழோசையொ டெட்டுத் திசை”
என இறைவனை திருஞானசம்பந்தர் (தேவாரம் திருவீழி மிழலை-2) எண்களின் ஏறுமுகமாய்ப் பாடியிருக்கிறார்.
திருச்சந்த விருத்தப் பாடல்
- “பூ நிலாய வைந்துமாய்ப் புனற்கண் நின்ற நான்குமாய்
- தீ நிலாய மூன்றுமாய்ச் சிறந்த காலிரண்டுமாய்
- மீ நிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
- நீ நிலாய வண்ணம்நின்னை யார் நினைக்க வல்லரே”
என இறைவனை திருமழிசைப்பிரான் (திருச்சந்த விருத்தம்-1) எண்களின் இறங்குமுகமாய்ப் பாடியிருக்கிறார்.
ஆதாரம்
- முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்) பக்கம் 155 முதல் 156 வரை.