எச். வேங்கடராமன்
எச்.வேங்கடராமன் (அக்டோபர் 22 1919- மார்ச்சு 28 1991) என்பவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். தமிழ்த் தாத்தா உ.வே.சா.நினைவு நூலகத்தில் நூற் பதிப்புப் பணியில் ஈடுபட்டவர்.உ.வே.சா. தொகுத்து வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு நற்றிணையைப் பதவுரையுடன் தெளிவாகப் பதிப்பித்தவர்.பேராசிரியர் எச்.வி. என்று சுருக்கமாக அவரை அழைப்பர்.
பிறப்பும் கல்வியும்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில் பிறந்தார்.[1] தந்தை அரிஅர ஐயர்; தாயார் சாரதாம்பாள். திருவையாறு சீனிவாச ராவ் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். இவருடைய தந்தையார் அக்காலத் தலைவர்களான வ.உ.சி திரு வி.க போன்றோரிடம் நட்புக் கொண்டிருந்தார். வேங்கடராமன் தமிழ்க் கல்லூரியில் பயில விரும்பியதாலும் வீட்டில் வறிய நிலை நிலவியதாலும் வ.உ. சி தம்மிடம் இருந்த தமிழ் நூல்களைக் கொடுத்து உதவினார். தமிழ்க் கல்லூரியில் சேர்வதற்கு மடல் எழுதி ஊக்கம் தந்தார். வேங்கடராமன் 1941 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார்
கல்லூரிப்பணி
கல்லூரிக் கல்வியை வெற்றிகரமாக முடித்த வேங்கட ராமன் பட்டுக்கோட்டையிலும் திருவரங்கத்திலும் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். பின்னர் 1943 இல் திருவையாற்றுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்றார். தொடர்ந்து 35 ஆண்டுகள் அந்தக் கல்லூரியில் சங்க இலக்கியங்கள் அனைத்தையும் தொல்காப்பியம் நன்னூல் போன்ற இலக்கண நூல்களையும் மாணவர்களுக்கு அவர்கள் மனங் கொள்ளும் வண்ணம் சொல்லிக் கொடுத்தார்.மூவேந்தர், பல்லவர் வரலாறு கல்வெட்டுகள் எனத் தமிழின் பல கூறுகளையும் கற்பித்தார். தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் பாடம் சொல்லும் திறம் பேராசிரியர் வேங்கடராமனின் தனித் தன்மை வாய்ந்தது என்று அவருடைய மாணவர்கள் பாராட்டுவர். தமிழ் அறிஞர்கள் தமிழண்ணல்,தி.வே.கோபால் ஐயர்,உதயை மு.வீரையன்,பேராசியர் தி.இராசகோபாலன், முனைவர் மு.இளமுருகன்,செந்தலை கவுதமன் ஆகியோர் பேராசிரியரின் மாணவர்கள் ஆவர்.
பணி ஒய்வு
1978 ஆம் ஆண்டு சூன் திங்களில் பேராசிரியர் பணியை நிறைவு செய்து ஒய்வு பெற்றார்.இவருக்குப் பெண் மக்கள் அறுவர்;ஆண் மக்கள் இருவர்.அனைவரையும் ஆளாக்கிப் படிக்க வைத்து நல்ல பதவிகளில் இருந்து வாழ்கிற நிலையை உருவாக்கினார்.
சென்னை வாழ்க்கை
பணி ஓய்வுக்குப் பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். எதிர்பாராத அவலம் அவருக்கு ஏற்பட்டது. இரண்டாம் மருமகன் காலமானார். இத்துயரை மறக்க இளம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்கலானார். 1980 முதல் 1984 வரை சென்னை சேத்துப்பட்டு சின்மயா வித்யாலயா ஆழ்வார்பேட்டை எம்.சி.டி எம் உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் .பணியாற்றினார்.மாலைப் பொழுதில் சென்னைத் தியாகராய நகரில் உள்ள தருமபுரம் ஆதினத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்பித்து வந்தார். 1985 முதல் 1990 வரை தினமணி நாளிதழில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு மதிப்புரை எழுதினார். 1989 இல் நற்றிணை என்னும் சங்க நூலுக்குப் பதவுரை வினைமுடிபு கருத்துரை எழுதி அதனை உ.வே.சா நூலகம் வாயிலாகப் பதிப்பித்தார். இதுவே அவர் ஆற்றிய இறுதித் தமிழ்த் தொண்டு ஆகும். 1990 இல் சென்னைத் தொலைக் காட்சி இரண்டாவது அலைவரிசையில் 'நமது சிந்தனைக்கு' என்னும் தலைப்பில் உரையாற்றி வந்தார். திருச்சி சென்னை வானொலியிலும் பல இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றினார் நூல் மதிப்புரைகளும் வழங்கினார். சிறந்த தமிழ் அறிஞர், குறள் நெறிச் செம்மல் என்னும் விருதைத் தமிழக அரசு பேராசிரியர் எச்.வி.க்கு வழங்கிச் சிறப்பித்தது.
மேற்கோள் நூல்
பேராசிரியர் எச்.வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும்-பதிப்பாசிரியர் தி.வே.விசயலட்சுமி, புது எண் 4 தஞ்சாவூர் தெரு,தி.நகர்,சென்னை-600017 கைபேசி எண் 9841593517 மின்னஞ்சல் முகவரி : vajaysiva12@gmail.com