உவமைத்தொகை
உவமைத் தொகை என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். அதில் முதற்சொல் உவமைச் சொல்லாக இருக்கும். எடுத்துக் காட்டாக "பானைவாய்" என்பது "பானை", "வாய்" என்னும் இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். பானைபோன்ற வாய் என்னும் பொருள் தருவது. இங்கே "பானை" "வாய்க்கு" உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், இது ஒரு உவமைத்தொகை ஆகும்.
தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைகளில் ஒன்று உவமைத்தொகை. இதனை உவமத்தொகை எனவும் வழங்குவர். இது உவமை உருபு[1] இல்லாமல் உவமைப் பொருளை உணர்த்தும்.[2][3] தொல்காப்பியம் உவமையை வினை, பயன், மெய், உரு என நான்கு வகையாகப் பகுத்துப் பார்த்துள்ளது.[4] இதனைக் கருத்தில் கொண்டு தொல்காப்பிய, நன்னூல் நூற்பாக்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கியுள்ளனர்.
கருத்து சுருக்கம்:
உவமைக்கும் பொருளுக்கும் ( உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
விளக்கம் [5]
உவம வகை | உவமைத்தொகை - எடுத்துக்காட்டு | எடுத்துக்காட்டின் விரிவு |
---|---|---|
வினை உவமத் தொகை |
புலிக் கொற்றன், |
புலி போலும் கொற்றன் |
பயன் உவமத்தொகை |
மழைக்கை, |
மழை போலும் கை |
மெய் உவமத் தொகை |
துடியிடை, |
துடி போலும் இடை |
உரு உவமத் தொகை |
பொற் சுணங்கு, |
பொன் போலும் சுணங்கு |
பன்மொழித்தொடர் |
மரகதக் கிளிமொழி, |
மரகதம் போலும் கிளி |
மேலும் சில எடுத்துக்காட்டுகள்
- "மதிமுகம்"
- "மலரடி"
- "துடியிடை"
- "கமலக்கண்"
- "கனிவாய்"
- "தேன்மொழி"
- "மான்விழி"
- "வாள்மீசை"
- "கயல்விழி"
- "மலர்விழி"
- "பொன்தாமரை"
- "பவளவாய்"
மேற்கோள்கள்
- ↑ உவம உருபுகள் சிலவற்றை நன்னூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. உவமத் தொகையில் இவற்றை விரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.
போல புரைய ஒப்ப உறழ
மான கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத்து உருபே (நன்னூல் 367) - ↑ உவமத் தொகையே உவம இயல். (தொல்காப்பியம் 414)
- ↑ உவம உருபு இலது உவமத் தொகையே (நன்னூல் 366)
- ↑
வினை, பயன், மெய், உரு, என்ற நான்கே-
வகை பெற வந்த உவமத் தோற்றம். (தொல்காப்பியம் 3-272) - ↑ ஆறுமுக நாவலர் காண்டிகை உரை[தொடர்பிழந்த இணைப்பு]