உளவியல் முறை
உளவியல் முறை(Methods of Psychology) என்பது உளவியல் சிக்கல்களை, அறிவியல் அடிப்படையில் புரிந்துகொள்ள,பல அறிவியல் முறைகளை, உளவியலாளர்கள் பயன்படுத்துகின்றனர்.[1] இந்த முறைகளால் பல்வேறு நடத்தைக் கூறுகளைப் புரிந்து கொள்வதில், சார்புகளும், பிழைகளும் குறைக்கின்றன. இந்த அறிவியல் முறைகளின் பொருத்தப்பாடு என்பது உளவியலில் கோட்பாடுகளையும், கருதுகோள்களையும் சோதனைகள் செய்வதற்கும்,[2] மதிப்பீடு செய்வதற்கும் பல்வேறு வகையில் பயனாகின்றன. உளவியலாளர்களால் இதுபோன்ற பல முறைகள்[3] பயன்படுத்தப்பட்டாலும், ஒவ்வொன்றிலும், அதன் சொந்த நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன.[4] இதன் ஒவ்வோர் இயலும், உலகின் இயற்கையை அறியும் பொருட்டுப் பல பொருள்களையும், நிகழ்ச்சிகளையும் சேகரித்து, உற்றுப்பார்த்து, அவற்றை வகைப்படுத்தி விளக்க முயலுகிறது. உளத்தின் இயல்பு, அது தொழில் புரியும் வகைகள், அவற்றை அறியும் முறைகள், மக்களின் செய்கைகள், உணர்ச்சிகள், எண்ணங்கள் போன்றவற்றை அளவிடும் வழிமுறைகள் போன்ற பல விடயங்களை விளக்குவதே, இதன் நோக்கமாகும்.
முறைமை
தமிழரின் முன்னோர்கள் உள்ளத்தின் நிலைகளையும், செயல்களையும் உள் நோக்குவதாலேயே, அதாவது தன்னாய்வு முறையாலேயே[5] (Introspection) அறிய முயன்றனர். என் உள்ளத்தில் எழும் எண்ணங்கள், அதில் தோன்றும் விம்பங்கள், சிந்தனைகள், உணர்ச்சிகள், விருப்பங்கள், வெறுப்புக்கள், கனவுகள் போன்ற அனுபவங்கள, உள்நோக்கியே அறிகிறேன். இவை எனக்கே உரியவை, அந்தரங்கமானவை; இவை பிறருக்கு நேராகப் புலப்படாது. உள்ளத்தைப் பற்றிய விவரங்களைப் பெறத் தன்னாய்வு முறையையே உளவியல் தொன்றுதொட்டுக் கையாண்டு வந்தது. தன்னாய்வைப் பின்வரும் உதாரணத்தால் விளக்குவதுண்டு. நான் ஒரு சிறிய கருஞ்சதுரத்தை இருபது வினாடி நேரம் உற்று நோக்கிவிட்டுப் பிறகு, சாம்பல் நிறமான சுவரை நோக்கினால், சுவரில் ஒரு வெண்மையான சிறு சமசதுர விம்பத்தைக் காண்கிறேன். என் கண் அசையும் திசையில்' அச் சம சதுரமும் அசை கிறது. இவ்விம்பத்தை நானே காணக்கூடும்;பிறர் காண இயலாது; நான் என் உள்ள நிலையை வெளியிட்டால் தான் பிறர் அதை அறியக்கூடும். அங்ஙனமே பிறர் புலன் உணர்ச்சிகளையும் (Sensations), விம்பங்களையும் நான் நேராகக் காண இயலாது. ஆனால் இயற்பியல் போன்ற நூற் பொருள்களைப், புறக்காட்சி முறையில் (External observation) தெரிந்து கொள்கிறோம். உள்ளம், சாதாரணமாகப் புறப்பொருள்களையே நாடி ஆராயும் தன்மை உடையது. உள்நோக்கி ஆராய்வது என்பது சற்றுக் கடினமே. மேலும், உள்ளத்தின் நிலைகளும் செயல்களும் மாறிக் கொண்டே போகும் இயல்புடையவை; அவற்றைச் சரியாகக் கவனிப்பது எளிதன்று. தவிர, விலங்குகள், பாலர்கள், பித்தர்கள், காட்டுமிராண்டிகள் போல் முன்னேற்றமடையாதவர்கள் உள்ளத்தைப் பற்றிய செய்திகளைத் தன்னாய்வு முறையைக் கையாள்வது முடியாத ஒன்றாகும்.
தூண்டல்: மனிதனின் சினம், வலி, மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளைக் கொண்டு உள்ளக் கிளர்ச்சியை, கருவிகளின் துணைக்கொண்டு அளவிடுகின்றனர். தூண்டலின் (Stimulus) தீவிரத்துக்கும், புலனுணர்ச்சியின் தீவிரத்துக்கும் தொடர்பு உண்டு எனச் சோதனைகளின் மூலம் கண்டுள்ளார்கள்.
எண்ணங்களின் தொடர்பு பற்றியும் (Association of ideas) பல சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 'தண்ணீர்' என்றவுடன் தோன்றும் எண்ணங்களைச் சோதனைச் செய்துள்ளனர். 'குளிர்ச்சி' 'தாகம்', 'ஆறு', 'குடம்', 'படகு', 'சாவு' போன்ற பலப்பல எண்ணங்கள் தோன்றும் இயல்பை மனது பெறுகிறது.
நேர்காணல் முறையையும் (Interview), வினாத்தொடர் முறையையும் (Questionaire m.) உளவியலில் கையாளுகின்றனர். சிறுவர்களுடைய நடத்தைகளையும் மாறுபாடுகளையும் அறிய பேட்டிமுறை பயன் படுகிறது. உளவியலறிஞர்கள், ஒரு மாணவனிடம் தொடர்புடைய பல கேள்விகளைக் கேட்டு, அவன் கூறும் விடைகளின் உதவியைக்கொண்டு அவனுக்குத் தகுதியான வாழ்க்கைத் தொழில் இது கண்டறிய முற்படுகின்றனர்.
உளநோய்முறை / உளமருத்துவமுறை முறையில், ஒருவருடைய நனவுளந்தவிர, நனவிலி உளம் என்பதில், புதைந்து கிடக்கும் எண்ணங்களைத் தட்டி எழுப்பி, உள நோய்களைத் தீர்க்க முயலுகின்றனர். இத்துறையில் பிராய்டு, வழியே பாடுபட்டு, சில சிறந்த உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். தனியொருவரின் உளநலனை ஆராயும், ஆராய்ச்சிமுறை (Case study) பயன் தரத் தக்கது ஆகும்.
ஒப்பு நோக்கு முறை: பல இனத்தாரின் நடத்தைகளை ஒப்புநோக்கியதாலும், பல உண்மைகள் கிடைத்துள்ளன. இம்முறையையே, ஒப்பு நோக்குமுறை என்பர்.
மேற்கோள்கள்
- ↑ http://www.psychologydiscussion.net/notes/psychology-notes/notes-on-psychology-definition-scope-and-methods/1945
- ↑ https://www.simplypsychology.org/research-methods.html
- ↑ http://www.psychologydiscussion.net/behaviour/7-methods-of-studying-human-behaviour/540
- ↑ https://www.slideshare.net/JohnykuttyJoseph/introduction-and-methods-of-psychology
- ↑ https://www.simplypsychology.org/self-concept.html