உளநோய் மருத்துவம்
உளநோய் மருத்துவம் (psychiatry) என்பது உள்ளத்தில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் மருத்துவம் ஆகும். முற்காலத்தில் உளநோயாளிகள் அனைவரும் பேய், பிசாசுகளால் பிடிக்கப்பட்டவரே என்று கருதி, உளநோய்களை நீக்குவதற்கு, அறிவியல் அற்ற முறைகளைப் பின்பற்றி, நோயாளிகளை இரக்கமின்றி வருத்தப்படுத்தினர்.[1]உலக சுகாதார நிறுவனமும், மனநோய்களை நீக்க சமுதாயம் மலர முயற்சிகளை எடுக்கிறது.[2]
உள்ளக்கிளர்ச்சி
உளநோய்கள், பல காரணங்களால், பலவிதமாக ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.[3] பொதுவாக எந்த உளநோயும் ஒன்றிற்கும் மேற்பட்ட காரணிகளால் ஏற்படுகிறது. அவற்றில் முக்கியமானவையாக பரம்பரை இயல்புகள், குழந்தை வளர்ப்பு, பிறவி நோய், ஊட்டச்சத்து குறைபாடு, தன்னம்பிக்கைச் சிதைவு, ஆளுமைத்திறன் எனக் கூறலாம். பெரும்பாலும், இந்நோய்கள் உண்டாக்குவதற்கு உள்ளக்கிளர்ச்சிக் குழப்பங்களே யாகும்.[4] உள்ளக்கிளர்ச்சிகளுள் மிகுந்த ஆற்றலுடையதும், பெரும்பான்மையான உளநோய்களை உண்டாக்குவதுமான உள்ளக்கிளர்ச்சி அச்சமே யாகும்.
ஆனால், நம்பிக்கை, கோபம், அருவருப்பு முதலிய உள்ளக்கிளர்ச்சிகளும், அவற்றை வெளிப்படுத்த முடியாதவாறு தடுக்கக்கூடிய தடைகள் ஏற்படுமானால், உளநோய்க் குறிகளை உண்டாக்கிவிடும். ஒரேவித நிகழ்ச்சி ஒருவரிடம் உளச்சோர்வையும் மற்றொருவரிடம் எதிர்ப்புத் தன்மையையும் உண்டாக்குவதற்குக் காரணம், அவரவர் ஆளுமையிலும், வாழ்க்கை முறையிலும், வருங்கால நோக்கத்திலும் காணப்படும் வேற்றுமையேயாகும்.[5] ஆகவே நோயாளி புறத்தே அடையும் வாய்ப்புக் குறைவால் ஏற்படும் உள்ளக்கிளர்ச்சிகளைவிட அவருடைய உள்ளத்தே குறிக்கோள், நோக்கம், விருப்பம் முதலியவைகளுக்காக உண்டாகும் உள்ளக்கிளர்ச்சிகளே முக்கிய காரணங்களாகும்.
தம்முடைய உளத்தில் உண்டாகும் முரண்களின் தன்மையைப் பெரும்பாலோர் அறியமாட்டார்கள். அல்லது தவறாக எண்ணிக்கொள்வார்கள். விருப்பம் சார்ந்த உளவியல் நோய்களைத் தீர்க்க, மருந்துண்டு அதிகம் பலனில்லை. விருப்பத்தின் போக்கில், மாற்றத்தினை ஏற்படுத்தினால், நோய் தீர அதிக வாய்ப்புண்டு.[6] பொதுவாக மனிதன் தன்னுடைய உடலைப்பற்றியும் தன்னுடைய உளத்தைப்பற்றியும் தானே ஆய்ந்தறியும் பண்புடையவனாயில்லை. இவ்வாறு தன்னைத்தான் அறியாதிருத்தல் சாதாரண மக்களிடந்தான் காணப்படும் என்பதில்லை. தன்னை அறிந்து கொண்டிருப்பதாகப் பெருமை பேசுவோரிடமும் காணப்படும். மேலும், தன்னைத்தானே ஆய்ந்து மதிப்பிடுதல் என்பது எளிதல்ல. ஒருவன் அவ்வாறு தன்னையே ஆராய்ந்தாலும் அவனுடைய ஆசைகளும், நம்பிக்கைகளும், நோக்கங்களும் அவனுடைய முடிவுகளைப் பாதிக்கின்றன.[7][8] நான்கில் ஒருவருக்கு, மனநல சமமின்மை உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.[9] இந்தியாவில், அறுவருக்கு ஒருவர் மனநல நோய் குறிகளைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.[10]
உள்ளக்கிளர்ச்சியால் ஏற்பட்ட கோளாறு எந்த வகையான காரணத்தால் ஏற்படினும், அதன் குறிகள் உளம் பற்றியனவாகவோ அல்லது உடல் பற்றியனவாகவோ அல்லது இரண்டும் பற்றியனவாகவோ இருக்கும். உள்ளக் கிளர்ச்சியால் ஏற்படும் கோளாறுகள், உடம்பைத் தாக்குகின்றன என்னும் கருத்து மிகமுக்கியமானதாகும்.[11] ஆனால், நோயாளிகள் உள்ளக்கிளர்ச்சிக்கும் உடல்நோய்க்குமுள்ள தொடர்பை அவர்கள் அறிந்துகொள்ளாமையேயாகும். பலர் அறிந்துகொள்ள விரும்புவதுமில்லை.
உடலியங்கியல்
பத்தாம் நூற்றாண்டில் இசுலாமிய அறிஞரொருவர், நரம்பியல் காரணங்களால் மனநோய் ஏற்படுவதை எடுத்துக் கூறினார்.[12] அதற்கு முன் மனநோய் என்பது வெளி உலகக்காரணிகளால் ஏற்படுகிறது என நம்பப்பட்டது. [13]
தைராய்டு போன்ற நாளமிலாச் சுரப்பிகளில் உண்டாகும் நொதிகள், அதன் காரணமாக மூளை வேலை பாதிக்கப்படக்கூடும்.[14] இச்சுரப்பிகள் ஒன்றோடொன்று இணைந்தவை யாதலால் எந்தச் சுரப்பி, குறிப்பிட்ட உளநோயை உண்டாக்கிற்று என்று கூறுவது எளிதன்று. இயக்குநீர்களைக் கொடுக்கும் சிகிச்சை முறை உளக்கோளாறுகளுள் பலவற்றைக் குணப்படுத்துவதில்லை.
கடுமையான உளநோய்கள் (Psychoses[15]) பெரும்பாலும் இனப்பெருக்க ஆற்றல் தோன்றுகின்ற பருவமடையும் வயதிலும், இனப்பெருக்க ஆற்றல் மறையப்போகும் பருவமடையும் வயதிலுமே உண்டாகின்றன. இந்த இரண்டு பருவங்களிலும் நாளமிலாச் சுரப்பிகள் வேலை செய்வதில் பெரிய மாறுதல்கள் உண்டாவதும், மாதவிடாய் உண்டாகும் போது உள்ளக்கிளர்ச்சிக் குழப்பங்கள் உண்டாவதும் கண்டறியப்பட்டுள்ளது.[16]
பைத்தியம் (Mania) என்பது, பரம்பரையாக வந்த உளநோய்கள்,[17] மிகுந்த உளவேலை[18], மருந்துகளை முறையற்ற உட்கொள்ளல்[19], குழந்தை பெறுதல்[20] போன்றவை சேர்ந்து இதை உண்டாக்குகின்றன. பொதுவாக இது 20-30 வயதிலேயே உண்டாகிறது.[21] ஆண்களைவிடப் பெண்களையே, இந்நோய் மிகுதியாகத் தாக்குகிறது.[22]
மேற்கோள்கள்
- ↑ https://online.csp.edu/blog/psychology/history-of-mental-illness-treatment
- ↑ https://www.who.int/news-room/fact-sheets/detail/mental-health-strengthening-our-response
- ↑ https://www.medicinenet.com/mental_health_psychology/article.htm
- ↑ https://www.webmd.com/mental-health/mental-health-causes-mental-illness#1
- ↑ https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3104886/
- ↑ https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2695750/
- ↑ https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5747942/
- ↑ https://www.psychiatry.org/patients-families/warning-signs-of-mental-illness
- ↑ https://www.who.int/whr/2001/media_centre/press_release/en/
- ↑ https://www.businessinsider.in/science/health/news/one-in-six-indians-suffer-from-mental-health-issues-and-are-unaware-of-it/articleshow/71513775.cms
- ↑ https://www.mqmentalhealth.org/posts/4-ways-our-physical-health-could-be-impacted-by-our-mental-health
- ↑ Haque, Amber (December 2004). "Psychology from Islamic Perspective: Contributions of Early Muslim Scholars and Challenges to Contemporary Muslim Psychologists". Journal of Religion and Health 43 (4): 357–377 [362]. doi:10.1007/s10943-004-4302-z.
- ↑ https://www.psychologytoday.com/us/blog/abcs-child-psychiatry/201512/psychiatric-vs-neurological-can-the-brain-tell
- ↑ https://www.ncbi.nlm.nih.gov/pubmed/3983024
- ↑ https://www.medicalnewstoday.com/articles/248159.php
- ↑ https://www.womenshealth.gov/mental-health/living-mental-health-condition/reproductive-health-and-mental-health
- ↑ https://www.nimh.nih.gov/about/advisory-boards-and-groups/namhc/reports/genetics-and-mental-disorders-report-of-the-national-institute-of-mental-healths-genetics-workgroup.shtml
- ↑ https://www.iwh.on.ca/summaries/research-highlights/heavy-workloads-linked-to-mental-health-msd-treatment-in-health-care-workers
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2020-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200107222214/https://www.drugabuse.gov/publications/health-consequences-drug-misuse/mental-health-effects.
- ↑ https://womensmentalhealth.org/specialty-clinics/psychiatric-disorders-during-pregnancy/
- ↑ https://www.medscape.com/answers/286342-101554/in-what-age-groups-is-the-onset-of-bipolar-affective-disorder-manic-depressive-illness-most-likely
- ↑ https://www.ncbi.nlm.nih.gov/pubmed/3948110
ஆதாரங்கள்
- தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தின் 02 தொகுதியில் இருக்கும், 382 பக்கத்தின் தரவுகளும், இக்கட்டுரையில் பயன்பட்டுள்ளன.