உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் 6 இடம் பெற்றுள்ளன. அவை:

  • தினைக் கதிரில் உள்ள மணிகளைக் கிளி கிள்ளிக்கொண்டு போய்விட்ட பின்னர் கதிர் இல்லாமல் நிற்கும். அதன் தட்டை போலத் தலைவன் தன்னை உண்ட பின் திருமணம் செய்துகொள்ளாமல் காலம் கடத்தும் நிலையிலும் உயிர்வாழ்வதற்காகத் தலைவி வருந்துவதாக இவர் ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார்.[1]
  • சோழன் நலங்கிள்ளியைப் பாடும்போது சேட்சென்னி நலங்கிள்ளி என அவன் பெயரைக் குறிப்பிட்டு நலங்கிள்ளியின் தந்தை நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி என்பதைத் தெரியப்படுத்துகிறார். பொருள் தேயும், வளரும். உயிர் தோன்றும், மறையும். நிலா தேய்ந்தும் வளர்ந்தும் இதனைப் புலப்படுத்துகிறது. எனவே நாடி வந்தவர் வல்லவர், வல்லவர் அல்லாதவர் எனப் பார்க்காமல் எல்லாருக்கும் வழங்கவேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.[2]
  • உயிரினப் பிறப்பில் எட்டு வகையான பேரச்சம் உண்டு. மூக்கறை, கைகால் குறை, கூன்முதுகு, குள்ளம், உமை, செவிடு, விலங்குத் தன்மை, பித்து ஆகியவை அவை.[3] இவற்றில் எந்தக் குறையும் இல்லாமல் பிறந்திருக்கும் ஒருவன் தன்னிடமுள்ள செல்வத்தால் அறம், பொருள், இன்பம் மூன்றும் துய்த்து, பிறர் துய்க்கத் தந்து வாழவேண்டும் என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.[4]
  • உலகம் கூத்தாட்டுக் களம் போன்றது. எனவே பிறர் நகைக்க வாழாமல் பிறர் புகழும்படி வாழவேண்டும் என்று ஒருபாடலில் குறிப்பிடுகிறார்.[5]
  • சூரியனின் சுழற்சி, அதன் ஈர்ப்பு விசை, காற்று திரியும் மண்டிலம், காற்று இல்லாமல் இருக்கும் ஆகாயம் ஆகியவற்றை அளந்தறியும் மாந்தர்களும் உண்டு.[6] அவர்கள் இருக்கட்டும். நீ (நலங்கிள்ளி) உன் புகார் நகரத்துச் செல்வத்தைத் தக்கவர்களுக்கு வழங்குக - என ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் [7]
  • வேந்தனையும் எதிர்த்து நிற்கும் முதுகுடி மகனின் சிறுவர்கள் கூட முருக்க மரத்தடியில் கணை விளையாடும் வீரப் பண்பை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.[8]

அவற்றில் இவர் சேட்சென்னி நலங்கிள்ளி, சோழன் நலங்கிள்ளி ஆகிய சோழ மன்னர்களைப் பாடியுள்ளார்.

அடிக்குறிப்பு

  1. குறுந்தொகை 133
  2. புறம் 27
  3. 'சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும், கூனும், குறளும், ஊமும், செவிடும், மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு எண் பேர் எச்சம்
  4. புறம் 28
  5. ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய நகைப்புறன் ஆக, நின் சுற்றம்! இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே! - புறம் 29
  6. செஞ் ஞாயிற்றுச் செலவும்,
    அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
    பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
    வளி திரிதரு திசையும்,
    வறிது நிலைஇய காயமும், என்று இவை
    சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்
    இனைத்து என்போரும் உளரே;

    - புறம் 30
  7. புறம் 30
  8. புறநானூறு 325

வெளி இணைப்புகள்