உறையூர் இளம்பொன் வாணிகனார்

உறையூர் இளம்பொன் வாணிகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 264 இவர் பாடிய பாடல். சங்கநூல் தொகுப்பில் இந்த ஒன்றுதான் இவர் பெயரில் உள்ளது. இவர் உறையூரில் பொன்வாணிகம் செய்து வாழ்ந்துவந்தவர்.

இவரது பாடல் சொல்லும் செய்தி

வள்ளல் ஒருவன் இறந்தபின் அவனுக்கு நட்ட நடுகல் பற்றி இந்தப் பாடல் சொல்கிறது. பரல்கற்கள் நிறைந்த பாதை. அங்கே பாறைக் கற்களை அடுக்கி வைத்த பதுக்கைக் குகை. அந்தப் பதுக்கையில் நடுகல். மரல்நாரைக் கிழித்துச் செந்நிறப் பூக்களால் கட்டிய கண்ணியை அந்த நடுகல்லின் தலையில் சூட்டினர். மயில் பீலியை அந்த நடுகல்லோடு கட்டிவைத்தனர். (ஆனிரை மீட்கச் சென்ற அந்த வீரன் திரும்பி வந்தபோதெல்லாம் தான் மீட்டுவந்த ஆனிரைகளையெல்லாம் பாணர் சுற்றத்துக்கு வழங்கினான்.) நடுகல்லான பின்னரும் பாணர் சுற்றம் இவனிடம் வருமோ? - என்று புலவர் கலங்குகிறார். திணை - கரந்தை. துறை - கையறுநிலை