உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் உறையூரில் வாழ்ந்தவர். இவரது வாய் சப்பையாக இருந்ததால் இவரை ஊர்மக்கள் கதுவாய்ச் சாத்தனார் என்று அழைத்தனர். (கதுவுதல் = செதுக்குதல்) சங்கத்தொகைப் பாடல்களில் இவரது பாடல் ஒன்றே ஒன்று இடம்பெற்றுள்ளது. அது நற்றிணை 370 மருதத் திணை.

பாடல் தரும் செய்தி

மனைவி ஊடுகிறாள்.(பிணக்குப் போட்டுக்கொள்கிறாள்) கணவன் அவளது ஊடலைத் தணிக்க முயல்கிறான். முடியவில்லை. மனைவிக்குக் கேட்கும்படி பாணனிடம் சொல்கிறான். தன் மனைவியை நேரிழை என்று குறிப்பிட்டுவிட்டுச் சொல்கிறான். (நேரிழை = நேர்மையை உணர்த்தும் அணிகலன், தாலி)

பண்பாடு

நேரிழை சூலுற்று நிறைமாதக் கருவுடையவளாக இருந்தபோதும் நம் நெருங்கிய சுற்றத்தாரை ('கடும்பு') விருந்தோம்பிப் பேணிவந்தாள்.

கணவன் மனைவியைப் பேணும் முறை

தலைவி புதல்வனைப் பெற்றெடுத்தாள். முதுபெண்டு ஆகிவிட்டாள். அவளது அல்குலில் திதலை(சுருக்க வரிகள்).கணவன் அவள் அருகில் சென்றான். 'தூங்குகிறாயோ' என்று கேட்டான். குவளைப் பூக்களால் அவளது வயிற்றில் ஒத்தினான். அவளுக்கு நாணம் ஒருபக்கம். புன்சிரிப்பு ஒருபக்கம். தன் கண்களைத் தன் கைகளால் மூடிக்கொண்டாள்.

வழக்கம்

மகப்பேறு நிகழும் காலத்தில் ஐயவி என்னும் வெண்சிறு கடுகு எண்ணெய் ஊற்றி வயிரக் கட்டைகளை எரியவிடுவர்.