உருது கவிஞர்

உருது கவிஞர் இந்தியாவில் வளர்ந்தோங்க, இசுலாமிய மன்னர்களே காரணம் என்பர். தக்காணத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் நண்பர்களாக வாழ்ந்தது, அரசாங்க அலுவல்களில் இந்துக்கள் மிகுதியாக இடம் பெற்றது, கணக்குக்கள் சுதேச மொழியில் எழுதப்பெற்றது, முஸ்லிம் அரசர்கள் சுதேசமொழிக்கு ஆதரவு அளித்தது ஆகிய இவை அனைத்தும் சேர்ந்து தக்காண உருது மொழியை வளர்க்கவும், இலக்கியச் சாதனமாகச் செய்யவும் உதவின. கோல்கொண்டாவில் அரசாண்ட முஸ்லிம் மன்னர் வமிசத்தினருள் இறுதியில் ஆண்ட நால்வரும் கல்வியையும் புலமையையும் ஆதரித்ததுடன் சிறந்த கவிஞர்களாகவுமிருந்தனர். முகம்மது குலீகுதுப்ஷா (1580-1611) வினுடைய குல்லியாத் என்னும் பாடல் திரட்டு அவருடைய பலதிறப்பட்ட மேதையைத் தெரிவிப்பதற்குத் தக்க சான்றாக இருந்துகொண்டிருக்கிறது. இறுதியாக ஆண்ட இந்த நான்கு மன்னர்களுடைய காலத்தில் முல்லா வஜ்ஹீ, முல்லா கவாசி, முல்லா இப்ன் - நஷாதி, முல்லா குதுபி, ஷேக் அகமது ஜுனைதி போன்ற பல சிறந்த கவிஞர்கள் வாழ்ந்துவந்தனர்.

அரசப் பரம்பரைக் கவிஞர்

பிஜாப்பூர் அரசர் II-ம் -அலி ஆதில்ஷாவின் சமஸ்தானத்தில், முல்லா நுஸ்ரதி (இ. 1683) மிகச் சிறந்த கவிஞராக இருந்தார். அவர் குல்ஷனெ இஷ்க், அலிநாமா, குல்தஸ்த-ஏ-இஷ்க் என்னும் மூன்று பெரிய கதைகள் இயற்றியுள்ளார். அவர் கற்பனை ஆற்றலிலும் புதிய கருத்துக்களிலும், சொற் சுவையிலும் சிறந்தவராக இருந்தார். ஹாஷிமி (இ. 1679) மற்றொரு பெரிய கவிஞர்; எகிப்து அரசரின் மனைவியான ஜுலைக் காவையும் யூசுப்பையும் பற்றிய பிரசித்திபெற்ற கதையை, வைத்து யூசுப்-ஜூலைக்கா என்னும் பெயரால் காவியம் ஒன்று இயற்றியுள்ளார்.

மஸ்னவி

தக்காணத்து மக்கள் பெரிதும் விரும்பிய கவிதை வகை மஸ்னவி என்பதாகும். பெரும்பாலும் கவிஞர்கள் அனைவரும் எத்தனை மஸ்னவிகள் இயற்ற முடியுமோ அத்தனை இயற்ற முயன்றனர். அவற்றுள் சில இப்போது கிடைக்கின்றன. அவற்றின் நடை இயற்கையானதாகவும் எளியதாகவும் சொல்வன்மை யுடையதாகவும் இருக்கின்றது. பிற்காலத்தில் கவிதைக்கு ஒவ்வாதவை என்று ஒதுக்கப்பட்ட, இந்திச் சொற்கள் இவர்கள் கவிதைகளில் நிறைந்துள்ளன. இந்த நிலையில் உருதுக்கவிதையின் சாஸர் என்று கூறத்தக்க வலி என்பவர் பிறந்து உருதுக்கவிதையை, உணர்ச்சிகளைத் தக்கவாறு வெளியிடத் தக்க இலக்கிய சாதனமாக்கினார். இவரே ரீக்தா என்னும் கவிதை இயற்றி, உருவாக்கின தந்தையாகக் கருதப்படுகிறார்.

இவர் ஔரங்கபாத் என்னும் நகரில் 1668ஆம் ஆண்டில் பிறந்து, இருபதாவது வயதில் அகமதாபாத்துக்குச் சென்று, குஜராத்தில் வாழ்ந்த மௌலானா ஷா வஜிஹூத்தீன் என்னும் புலவருடைய மாணாக்கரானார். உருதுக் கவி புனையும் இயற்கை ஆற்றல் உடையவராயிருந்தார். அவர் இருமுறை டெல்லிக்குச் சென்றார். அப்போது அவருடைய கவிதைகள் வட இந்தியாவிலிருந்த பாரசீக, உருதுப்புலவர்களுடைய கருத்தைக் கவர்ந்தன. அதன் மேல் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியது. இதுவரை பாரசீக மொழியில் மட்டுமே கவிதை யாத்துவந்த கவிஞர்கள் உருதில் அழகான கவிதைகள் புனையத் தொடங்கினர். வலி அகமதாபாத்தில் 1744-ல் இறந்தார். இவரைப் பின்பற்றி வடநாட்டுக் கவிஞர்களாகிய ஷாஹதீம், ஷா முபாரக் ஆப்ரூ, சிராஜுதீன் அலி கான் ஆர்ஜு, முகம்மது ஷாக்கீர் நாஜி, மியான் ஷர்புதீன் மஸ்மூன் முதலிய பலர் அழகற்ற பல தக்காண உருதுச் சொற்களையும் சொற்றொடர்களையும் நீக்கிவிட்டுப் பண்டைப் பாரசீகச் சொற்களை மிகுதியாகச் சேர்த்து உருது மொழியை மெருகிட்டனர்.

18ஆம் நூற்றாண்டு

18ஆம் நூற்றாண்டில் ஒரு புதிய கவிதை உலகம் தோன்றிற்று. இதில் சிறப்புற்றவர்களா யிருந்தவர்கள் மீர் தகி மீர் (1724-1810), மீர்ஜா முகம்மது ரப்பி சௌதா (1713-80), காஜா மீர் தர்த் (1719-1785), மீர் ஹசன் (1736-1786) ஆவர். இவர்களுடைய கவிதையில் உயர்ந்த கருத்துக்களும், குறிக்கோள்களும், சிறந்த உணர்ச்சிகளும், நடை அழகும், சொற் சுவையும் நிரம்பியிருந்தன. கஜல்களும், கசீதாக்களும், மஸ்னவிகளும் மிகச் சிறந்த நிலை யடைந்தன. மீர் தகி மீர், மீர்தர்த் ஆகிய இருவரும்ர கஜல் இயற்றுவதிலும், சௌதா கசீதாக்கள் எள்ளித் திருத்தும் கவிதைகள் இயற்றுவதிலும் ஒப்பற்றவர்களாக இருந்தனர். மஸ்னவி செஹ்ரூல் பயான் என்னும் கவிதை புனைந்து மீர் ஹசன் புகழ் பெற்றார். அதன் நடை எளியதேயாயினும் மிகுந்த எழிலுடையது. மீர் தகி மீர் என்பவருடைய வாழ்க்கை மிகுந்த துன்பம் நிறைந்ததாயிருந்தது. அதனால் அவருடைய பாடல்களில் அவலச்சுவையே ததும்புகின்றது. சௌதா என்பவருடைய பாடல்களில் மகிழ்ச்சியும், நகைச்சுவையும் பொங்கிக் குமிழியிடுகின்றன. அவை அவருடைய இன்ப வாழ்க்கையைக் குறிப்பிடுவனவாகவுள்ளன. அவருடைய கசீதாக்களின் சொற்றொடர்கள் ஓவிய எழிலுடையன. அவருடைய நடை பெருமிதமுடையது. அவருடைய உவமைகள் மிகச்சிறந்தவை. காஜா மீர் தர்த் என்பவர் சூபீ மத குருவாயிருந்தார். அவருக்கு ஏராளமான மாணவர்களும் சீடர்களும் இருந்தனர். அவருடைய கஜல்கள் உயர்ந்த கருத்துக்களும், நல்லுணர்ச்சிகளும், மெருகிட்ட நடையும் உடையனவாக உள்ளன. இவர் சூபிமதத்தை விளக்கிச் சொல்வதில் மிகச் சிறந்தவராயிருந்தார்.

சையது முகம்மது மீர்சோஜ் (1720-1798) டெல்லியில் பிறந்து, 1777-ல் துறவியாகி, இலட்சுமணபுரியில் வாழ்ந்து வந்தார். அவருடைய நடை பண்டை நடையை ஒத்தது. அவர் கஜல்கள் தவிர வேறு கவிதைகள் புனையவில்லை. அவருடைய குணத்திற்கு அவையே ஒத்தனவாக இருந்தன.

டெல்லி நவாபுகள்

டெல்லியானது உருது இலக்கியம் வளரும் நகரமாயிருந்தபோதிலும், நாளடைவில் இலட்சுமணபுரியும் அத்தகைய நகரமாக ஆகிவந்தது. அவுது நாட்டுநவாபுக்கள் கல்வியையும் கலையையும் பெரிதும் ஆதரித்துவந்தார்கள். டெல்லியிலிருந்தும் பிற ஊர்களிலிலிருந்தும் வந்த கவிஞர்களைத் தங்கள் சமஸ்தானத்தில் ஏற்று மகிழ்ந்தார்கள். சௌதா, மீர்சோஜ், மீர் ஹசன் போன்றவர்களை மிகுந்த அன்போடு வரவேற்று, உபசரித்து, வேண்டிய பரிசில் அளித்தார்கள், டெல்லியில் பிற்காலத்திலிருந்த முஸ்ஹபி (1750-1820), ஜுரத் (இ. 1810), இன்ஷா (இ. 1817) முதலியோர் இலட்சு மணபுரியில் போய்த் தங்கியிருந்தனர், இலட்சுமணபுரியில் கவிதைக் கழகங்கள் தோன்றின. பிரபுக்களும் பொதுமக்களும் கவிதைகளைச் சுவைத்து மகிழ்வதில் ஆழ்ந்து போயினர். இன்ஷா என்பவர் மிர்ஜா சுலைமான் ஷிக்கோஹ் என்னும் பிரபுவிடம் சென்று, தம்முடைய வினயத்தாலும் சாதுரியப் பாடல்களாலும் அப் பிரபுவின் தயவைப் பெற்று, அவரால் அதுவரைப் போற்றப்பட்ட முஸ்ஹபி என்னும் கவிஞருடைய நிலையைப் பெற்றார். இதனால் அவ்விரு புலவர்களிடையே மிகுந்த மனக்கசப்பு உண்டாயிற்று. இருவரும் அவர்களுடைய சீடர்களும் ஒருவரையொருவர் திட்டியும் கேலி செய்தும் செய்யுள்கள் எழுதிக் கொட்டினர். பிரபுக்களும் பொதுமக்களும் இந்த விபரீத வேடிக்கைகளைக் கண்டு களிப்புற்றனர்.

ஜுரஹத் கஜல்கள் செய்வதில், திறமையுடையவர் கசீதா போன்ற வேறுவகைப் பிரபந்தங்கள் செய்ய முயலவில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த மற்றப் புலவர்கள் தங்கள் செய்யுட்களைப் பாரசீக மொழியில் இயற்றினர். அக்காலத்து நவாபுக்களும் பிரபுக்களும் களியாட்டங்கள் அயர்ந்தபடியால் இவரும் அவற்றிற்கேற்ற காதற் கவிதைகளைச் செய்வதிலேயே பேர் பெற்றவராயிருந்தார். இந்த நிலையில் சஆதத்யார்கான் ரன்கீன் (1757-1855) என்பவரும், ஜான்சாகேப் என்று வழங்கிய மீர்யார் அலி கான் (இ. 1897) என்பவரும் ரீக்தி என்னும் புதுவகைக் கவிதையை இயற்றத் தொடங்கினர். ரன்கீன் இன்ஷாவின் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் அழிகும் செல்வமும் வாய்ந்தவர் ; பரத்தையர், நடன மாதர்களிடையிலேயே அதிகமாகக் காணப்படுவார். ஜான் சாகேப் பெண்போல் உடை தரித்துப் பெண் குரலில் கவிஞர்கள் கூடிய அவையில் காதற் கவிதைகளைப் பாடுவார். இவருடைய கவிதைகளில் பெண்களின் உணர்ச்சிகள் மிகுதியாகக் காணப்படினும், அவை பெரியோர்களுடைய நன்மதிப்பைப் பெற முடியவில்லை.

டெல்லியிலிருந்த கவிஞர்கள் உணர்ச்சிகளை எளிய சொற்களாலாய செய்யுட்களில் வெளியிட்டனர். அவர்களுக்குக் கருத்தும் உணர்ச்சியுமே தலையாயவை. அவற்றிற்குப் பிற்பட்டவையே சொல்லழகும் கற்பனை நயமும். ஆனால் இலட்சுமணபுரியிலிருந்த கவிஞர்கள், அவர்களுள்ளும் முக்கியமாக ஷேக் இமாம் பக் ஷ் நாசிக் (இ. 1838) என்பவரும் அவருடைய மாணவர்களும் சொல்லணியிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்தினார்கள். அவர்களுக்குக் கருத்து முதன்மையல்ல, நடையே முதன்மை . அதன் காரணமாகக் கவிதையானது இயற்கையாக நிகழாமல் செயற்கையாகவே ஆயிற்று. இக் கவிஞர்கள் உயர்வு நவிற்சி போன்ற அணிகளிலேயே திளைத்தார்கள்.

உருது என்னும் பெயர்

நாசிக் என்பவர் அரபு, பாரசீகச் சொற்களில் மிகுந்த விருப்பமுடையவர். சில பண்டை இந்திச் சொற்களை, இவர் கவிதைக்கு ஏலாதவை என்று ஒதுக்கினார். பால், எண் போன்ற இலக்கண விஷயங்களில் இவர் மிகுந்த கவனம் செலுத்தினார். அவைபற்றிக் கண்டிப்பான விதிகளும் வகுத்தார். இவர் காலம் முதல்தான் உருது என்னும் பெயர் நன்றாக வழங்கலாயிற்று. உணர்ச்சிப் பாடல்களை ரீக்தா என்று கூறாமல் கஜல்கள் என்று கூறும் வழக்கமும் உண்டாயிற்று. நாசிக் கவிஞருக்குப் பல மாணவர்கள் இருந்தனர். அவர்களும் சிறந்த கவிதைகள் இயற்றியுள்ளனர். நாசிக் கவிஞர் முறையை ஏற்றுக்கொள்ளாதிருந்த பெரிய கவிஞர் காஜா ஐதர் அனி ஆத்தஷ் (இ-1846) ஆவர். இவருடைய மாணவர்களும் பலராவர். இந்தக் காலத்தில் தோன்றிய உணர்ச்சிக் கவிதைகளை இயற்றிய சிறந்த கவிஞர்களுள் ஒருவர் ஆத்தஷ். பொது மக்கள் பேசும் மொழியிலேயே இவர் கவிகள் செய்தார். ஆயினும் அவை ஆற்றலுடையனவாகவும் உணர்ச்சி ததும்புவனவாகவும் உள்ளன.

அலி, ஹசன், ஹுசேன், அவர்களுடைய மக்கள் ஆகியோர் தங்கள் மதக் கொள்கையின் பொருட்டு இன்னல் பல அடைந்ததையும், உயிரை மனமுவந்து அளித்ததையும் எண்ணி முஸ்லிம்களுள் ஷியா வகுப்பினர் துக்கம் கொண்டாடுவது வழக்கம். ஆதலால் பிஜாப்பூரிலும், கோல்கொண்டாவிலும் அரசாண்ட ஷியா அரசர்களின் ஆதரவிலிருந்த ஷியா கவிஞர்கள் அவலச்சுவை நிறைந்த பாடல்களை ஏராளமாகப் பாடினர். இத்தகைய பாடல்களைச் செய்தவர்களுள் சிறந்தவர்கள் ஹாஷீம் அலி, இமாமி, ரஜா, சையது, குலாமி, காதிர் முதலியவர்கள். ஆயினும் இத்தகைய பாடல் வகை உச்ச நிலை எய்தியது அவுது நவாபுக்கள் ஷியாக்கள் ஆனபொழுது தான். துன்பம் கொண்டாடும் காலம் பத்து நாளிலிருந்து 40 நாள் என்று நீட்டிக்கப்பட்டது. இத்துக்கம் கொண்டாடுவது முகரம் என்னும் புனிதத் திங்களில் ஆனபடியால், அந்தத் திங்களில் இலட்சுமண புரி அரச சபையில் கேளிக்கை, விநோதங்கள் நின்று போகும். நாடெங்கும் மக்கள் கூட்டங்கூடித் துக்கம் கொண்டாடுவார்கள். அப்பொழுது அவலச்சுவை நிறைந்த இரங்கற்பாக்கள் ஹசன், ஹுசேன் இருவருடைய சாவையும் குறித்து இயற்றப்பட்டுப் பாடப்பெறும். அவுது மன்னர்களுள் இறுதியானவரான வாஜித் அனிஷா என்பவர் அக்காலத்தில் இத்தகையபாக்கள் செய்வதில் புகழ் பெற்றவராயிருந்த மீர் அலி அனீஸ் (1802-1874), சலாமத் அலி தபீர் (1803-1875) ஆகிய இருவரையும் அழைத்து, அவர்களுடைய கவிதைகளைப் பாடச்சொல்லிக் கேட்பார்.

வரகவி

இவ்விருவரிலும் அனீஸ் என்பவரே உயர்ந்தவர் ; வரகவியுமாவர். கவிதை இயற்றுவது அவருடைய குடும்ப மரபு. அவருடைய பாட்டனார் காலத்திலிருந்து அவருடைய பேரன் காலம் வரை அவருடைய குடும்பத்தினர் பலரும் சிறந்த இரங்கற்பாக்கள் செய்துளர். அதனுடன் அனீஸ் இயற்கைக் காட்சிகளையும் போர்களையும் உள்ளக்கிளர்ச்சிகளையும் சித்திரிப்பதில் அற்புத ஆற்றல் படைத்தவர். ஆனால் தபீர் போல் புலமை வாய்ந்தவரல்லர், தபீரின் கவிதை கற்பனையும் அணி அலங்காரமும் சொல்லடுக்குக்களும் நிரம்பியதாகும். அனீஸிடம் சொல்வன்மையையும் தபீரிடம் பெருமிதத்தையும் காணலாம். இவ்விருவரும் உருது மொழிக்குச் செய்துள்ள பணி அளவிடற்பாலதன்று. இவர்கள் இயற்றிய இலட்சக்கணக்கான ஈரடிச் செய்யுட்கள் பல விதமான சொற்களையும் சொல்லாட்சிகளையும் கையாண்டு உருதுச் சொல்வளத்தைப் பெருக்கியுள்ளன.

இரங்கற்பாக்களை இயற்றுவதில் சிறப்புற்றிருந்த மற்றொரு கவிஞர் குடும்பம் மிர்ஜா உன்ஸ் என்பவருடையதாகும். அவருடைய மக்களும் பேரன்மாரும் மிகச்சிறந்த இரங்கற்பாக் கவிஞர்களாகப் போற்றப்பட்டனர். இந்த இரங்கற்பாக் கவிஞர்கள் உருதுக் கவிதா உலகத்தில் புதியதோர் கட்டத்தைத் தோற்றுவித்தனர். இயற்கைக் காட்சிக் கவிதைகள் எழுதிய பெருமை இவர்களையே சாரும். இக்கவிதைகள் இயற்றியவருள் சிறந்தவர் அக்பராபாதிலிருந்த முகம்மது நஜீர் என்பவராவர். இவர் இளவயதில் தூர்த்தராயிருந்து, பின்னால் அறநெறி நின்றார். இவர் இந்திய விஷயங்களை மட்டும் எழுதிய இந்தியக் கவிஞராவர். இவர் இந்துக்களுடைய விழாக்களையும் முஸ்லிம்களுடைய விழாக்களையும்பற்றி மிக அழகான பாடல்கள் இயற்றியுளர். இவர் இந்தி சொற்களையும் சொல்லாட்சிகளையும் ஏராளமாகக் கையாண்டுளர். இவர் இந்துக்கள் முஸ்லிம்கள் இரு வருடைய நட்பையும் பெற்றிருந்தார்.

மொகலாயப் பேரரசில்

உருதுக் கவிஞர்கள் டெல்லியைவிட்டு நீங்கிய பின் அங்கு உருதுக் கவிதைகள் எழுதுவது குன்றியிருந்தது. ஆனால் மொகலாயப் பேரரசின் இறுதிக்காலத்தில் அது செழித்தோங்கக் தலைப்பட்டது. II-ம் ஷா ஆலம், II-ம் அக்பர்ஷா, II-ம் பகதூர்ஷா ஆகியோர் கவிஞர்களாயிருந்தனர். காசிம், மம்நூன், ஹஸ்ரத் பேதார், ஜியா போன்ற பல கவிஞர்கள் தோன்றியிருந்தனர், II-ம் பகதுர் ஷா காலத்தில் மூன்று சிறந்த கவிஞர்கள் இருந்தார்கள். ஷேக் இப்ராகிம் சௌக் (இ, 1855) டெல்லி இறுதி மன்னரான ஜபரின் கவிதா குருவான நசீர் என்பவருடைய மாணவராயிருந்தார். இவர் அசதுல்லா கான்காலிப் (1787-1869), ஹக்கீம் மோமின்கான் மோமின் (1800-1851) ஆகிய மற்ற இரு கவிஞர்களைப்போல் புலமையுடையரல்லர். ஆயினும் இவருடைய சொல்வளம் இணையற்றதாகும். இவர் அழகான எளிய சொற்களையே தம்முடைய செய்யுட்களில் பெய்தார். காலிப் எண்ணங்களின் ஏற்றத்திலும் கற்பனை மிகுதியிலும் சிறந்தவர். அவருடைய கவிதைகள் சுருங்கியும் சொந்த ஆக்கமாகவும் இருந்தன. மிகச் சுருங்கியிருத்தலால் எல்லோர்க்கும் எளிதில் பொருள் விளங்குவதில்லை. மோமின் புதுப்புது உவமைகளைக் கையாண்டார். பெரிய கருத்துக்களைச் சிறு செய்யுளில் அடக்கிக் கூறுவதால் இவருடைய செய்யுட்கள் கற்கக் கடினமாகவுள்ளன. ஆயினும் இந்த மூன்று கவிஞர்களும் உயர்ந்த கருத்துக்களும் நிறைந்த கற்பனையும் எளிய நடையும் உணர்ச்சிப் பெருக்குமுடைய இக்காலத்து உருதுக் கவிதைக்கு அடிகோலியவராவர்.

வாஜித் அலிஷாவும், பகதுர் ஷா ஜபரும் அரசுரிமையை இழக்க நேரிட்ட பின்னர் டெல்லியும் இலட்சுமணபுரியும் இலக்கிய நகரங்களாக இருந்தமை மாறியது. புலவர்களும் கவிஞர்களும், ராம்பூர், ஐதராபாத், கல்கத்தா, பருக்காபாத், பாடலிபுரம் முர்ஷிதாபாத், போபால் போன்ற நகரங்களுக்குச் சென்று குடியேறினர். ராம்பூர் நவாபுகள் கவிஞர்களுக்குப் பேராதரவு அளித்தனர். அவர்களால் போற்றப்பட்டோரில் சிறந்தவர் அமீர் மீனாயீ (1820-1900), தாக் (1831-1905), இலட்சுணபுரி ஜலால் (1836-1909), தஸ்லீம் (1820 -1911) ஆவர். தாக் என்பவர் இறுதிக்காலத்தில் ஐதராபாத்துக்குப் போய் ஆறாம் நிஜாமின் அரசவைக் கவிஞராக இருந்தார். அவர் காதற் கவிதைகள் புனைவதில் கைதேர்ந்தவர். அமீர் மீனாயீ நடையழகு மிக்க நீண்ட காவியங்கள் இயற்றுவதில் திறமையுடையவர் , தாக் எளிய நடையும் அவலச் சுவையும் பெற்று மிளிர்ந்த உணர்ச்சிக் கவிதைகள் உண்டாக்குவதில் உயர்ந்தவர்.

ஆங்கிலத் தொடர்பு

ஆங்கல மக்களுடனும் ஆங்கில இலக்கியத்துடனும் ஏற்பட்ட தொடர்பு, உருது மொழியிலும் இலக்கியத்திலும் பெரிய மாறுதல்களை உண்டாக்கிற்று.[1] தற்கால உருதுக் கவிதையை உருவாக்கிய மௌலானா அல்தாப் ஹுசேன் ஹாலி (1837-1914) என்பவரும், மௌலானா முகமது ஹுசேன் ஆஜாத் (1836-1910) என்பவரும் ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்புக்கள் வாயிலாக, ஆங்கில இலக்கியத்தின் அழகுகளை நன்கு உணர்ந்தவர்கள். அவர்கள் லாகூரில் கல்வித்துறைத் தலைவராயிருந்த கர்னல் ஹோல்ராயிடு என்பவரிடம் பணிசெய்யும் பேறு பெற்றிருந்தார்கள். அத்தலைவர் விருப்பப்படி அவர்கள் 1874-ல் ஒரு கவிஞர் கழகம் கூட்டி, அதில் கவிஞர்களை, முன்போல் செய்யுளின் அடி ஒன்றின் பாதியைக் கொடுத்து, எதுகைக்கும் சந்தத்துக்கும் தக்கவாறு முழுச் செய்யுளை இயற்றித் தரும் வழக்கத்தை விட்டுவிட்டு, இனிமேல் பல பொருள்களைப் பற்றிக் கவிதைகள் செய்யுமாறு வேண்டிக்கொண்டார்கள்.

ஹாலி மூடநம்பிக்கை , நடுநிலைமை, அருள், கடவுள், மழை போன்ற பல பொருள்களைப்பற்றிக் கவிதைகள் செய்து வழிகாட்டினார். இந்தப் புதிய இயக்கம் நாடோறும் வலுப்பெற்று வளர்ந்து வந்தது. இதன் காரணமாக உருதுக் கவிதையை, ஆங்கில முறையைத் தழுவிக் கற்பனை, கருத்து, நடை முதலியவற்றில் செழித்தோங்குமாறு பணிசெய்த கவிஞர்களுள் சிறந்தவர்கள் மௌலானா இஸ்மாயில் (1844-1917), முன்ஷி துர்க்கா சகாய சரூர் (1876-1910) நௌபாத்ராய நஜர் (1866-1923), பண்டிட் பிரிஜ் நாராயண் சக்பஸ்து (1882 - 1926), அக்பர் ஹுசேன் அக்பர் (1846-1921), டாக்டர் ஷேக் முகம்மது இக்பால் (1875 -1938) ஆகியவராவர். ஹாலி முஸ்லீம் மக்களிடையே மேனாட்டுக் கல்வியையும் பண்பாட்டையும் பரவச் செய்தார். அக்பர் மேனாட்டுக் கல்வியின் வாயிலாக முஸ்லிம் சமூகத்தினிடையே நுழைந்துவிட்ட சமூக, அரசியல், பண்பாட்டுத் தீமைகளை நகைச்சுவையுடன் கண்டித்தார். இக்பால் மேனாட்டுக் கருத்துக்கள், பண்பாடு முதலியவற்றை மதிப்பிட்ட பெரியார்களில் மிகச் சிறந்தவர். அவர் கீழ்நாட்டு மக்களுடைய குறைகளையும் உணர்ந்து கண்டித்தார். அவர் விடுதலையில் பெரிதும் விருப்பமுடையவர். அவர் விடுதலை, அமைதி, சகோதரத்துவம். சமத்துவம், முதலியவற்றை மக்களுக்கு எடுத்தோதினார். அவர் உருதிலும், பாரசீகத்திலும் கவிதைகள் இயற்றினார்.

இருபதாம் நூற்றாண்டில்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றியுள்ள உருதுக் கவிஞர்களின் தொகை பெரிது. ஹஸ்ரத் மோகானி, அஸ்கர் கோண்டவி ஜிகர் முராதாபாதி, பானி என் போர் அழகான காதற் கவிதைகள் புனைவதில் புகழ் பெற்றவர்கள். ஐதராபாத்தில் இருந்த அம்ஜத் என்பவர் அறநெறிக் கவிதைக்குப் பேர்போனவர். லாகூரிலிருந்த ஜபர் அல்கான் என்பவருடைய கவிதை மிகச் சிறந்தது. கல்கத்தாவிலிருந்த ' வில்லியம் கோட்டைக் கல்லூரித் தலைவராயிருந்த, டாக்டர் ஜான் கில்கிரைஸ்ட்டு என்பவர் வட இந்தியாவிலுள்ள உருதுப் புலவர்களை, கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் அலுவல் பார்த்த ஐரோப்பிய பணியாளர்களுக்காக, உருதில் பாடப் புத்தகங்களை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். இப்புலவர்கள் பலர் இயற்றிய நூல்களும், மொழிபெயர்த்த நூல்களும் தவிர, எதுகை நிறைந்த உரைநடை நூல்கள் ஜூஹலி, பேதில் என்னும் பாரசீகக் கவிஞர்களைத் தழுவி எழுதப்பட்டன. அந்நடை நஸ்ரே-முசஜ்ஜா அல்லது, நஸ்ரே-இ-முகப்பா அல்லது நஸ்ரே முரஸ்ஸா என்று அழைக்கப்படும். இந்த நடையில் எழுதியவர்களுள் சிறந்தவர் ரஜப் அலிபேக் சரூர் (1787-1867). அவருடைய தலைசிறந்த கவிதையாகிய பசானயே அஜாயெப் என்பது நடையழகுக்கு மட்டுமன்றி, இலட்சுமணபுரி நகர வாழ்க்கையின் ஓவியச் சிறப்புக்கும் புகழ் பெற்றதாகும்.

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உருது_கவிஞர்&oldid=17935" இருந்து மீள்விக்கப்பட்டது