உபநிடதம்
உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்கள் (Upanaishads)(/ʊˈpənɪˌʃədz/;[1] பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன.[2][3][note 1][note 2][6][7][8]
உபநிடதம் | |
---|---|
கடிகார திசையில் இடமிருந்து:
| |
தகவல்கள் | |
சமயம் | இந்து சமயம் |
மொழி | சமசுகிருதம் |
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு–சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.[2][9][10]
பொருளும் பெருமையும்
நான்கு வேதங்களுக்கும் வேதசாகைகள் என்று பெயருள்ள பல கிளைகள் உள்ளன. எல்லா சாகைகளும் தற்காலத்தில் காணப்படவில்லை. ஒவ்வொரு வேதசாகை முடிவிலும் ஒரு உபநிஷத்து இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது. பற்பல சாகைகள் இன்று இல்லாமல் போனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட உபநிஷத்துக்கள் கிடைத்துள்ளன. வேதங்களிலுள்ள சடங்குகளைப்பற்றிய விபரங்களும், அவற்றில் எங்கும் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் தெய்வ அசுர இனத்தாருடைய பரிமாறல்களும் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்புடையதாக உள்ளதா இல்லையா என்ற ஐயங்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு வேதப்பொருளின் ஆழத்தை அறிய முயலும் யாரும், உபநிஷத்துக்களிலுள்ள தத்துவங்களினால் கவரப்படாமல் இருக்கமுடியாது. அதனாலேயே இந்துசமயத்தின் தத்துவச்செறிவுகள் உபநிஷத்துக்களில்தான் இருப்பதாக மெய்யியலார்கள் எண்ணுகிறார்கள்.
உபநிஷத்துக்களில் சில மிகச் சிறியவை, சில கிறிஸ்தவ மதத்தின் விவிலியம் அளவுக்குப்பெரியவை. சில உரைநடையிலும் சில செய்யுள்நடையிலும் உள்ளன. ஆனால் எல்லாமே ஆன்மிக அனுபவங்களையும், வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினைகளையும் அலசுபவை. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? பிறப்பும் இறப்பும் ஏன், எப்படி நிகழ்கின்றன? அடிப்படை உண்மை யாது? அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டானால் அதன் சுபாவம் என்ன? அதுதான் கடவுளா? இவ்வுலகம் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? மறுபிறப்பின் தத்துவம் என்ன? நன்மையும் தீமையும் மனிதனைப் பொருத்ததா, அல்லது அவைகளுக்கென்று தனித்துவம் உண்டா? அறிவு என்பதும் மனதின் பல ஓட்டங்களைப்போல் ஒன்றுதானா அல்லது அறிவு நன்மை தீமைகளைத் தாண்டிய ஒரு அடிப்படை உண்மையா? இவைகளையும் இன்னும் இவற்றைப் போலுள்ள பல ஆழமான தலையாய பிரச்சினைகளையும் சலிக்காமல் பட்சபாதமில்லாமல் அலசிப் பார்க்கும் இலக்கியம் தான் உபநிஷத்துக்கள். மேலும் எதையும் ஒரே முடிந்த முடிவாகச் சொல்லிவிடாமல், கேள்விகளை எழுப்புவதும், கேள்விகளிலுள்ள விந்தை பொதியும் மாற்றுத் தத்துவங்களை வெளிக் கொணர்வதும், பிரச்சினையைப் பற்றிப் பல ஆன்மிகவாதிப் பெரியார்கள் சொந்த அனுபவத்தைக்கொண்டு என்ன சொல்கிறார்கள் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைப்பதும், உபநிஷத்துகளின் முத்திரை நடை. இதனால் உலகின் எண்ணச்செறிவுகளிலேயே உபநிஷத்துக்கள் ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கப்படவேண்டியவை என்பது கற்றோர் யாவரின் முடிவு.
உபநிஷத்3 என்ற வடமொழிச்சொல்லின் பொருள்
இதில் மூன்று வேர்ச்சொற்கள் உள்ளன. 'உப', 'நி' மற்றும் 'ஸத்3'. சொற்கள் புணரும்போது ஸத்3 என்பது ஷத்3 ஆகிறது.
- 'உப' என்ற சொல்லினால் குருவை பயபக்தியுடன் அண்டி அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்பதைக் குறிக்கிறது.
- 'நி' என்ற சொல்லினால், புத்தியின் மூலம் ஏற்படும் ஐயங்கள் அகலும்படியும், மனதில் காலம் காலமாக ஊறியிருக்கும் பற்பல எண்ண ஓட்டங்களின் பாதிப்பு இல்லாமலும், அவ்வுபதேசத்தை வாங்கிக் கொள்வதைக் குறிக்கிறது.
- 'ஸத்3' என்ற சொல்லினால் அவ்வுபதேசத்தின் பயனான அஞ்ஞான-அழிவும், பிரம்மத்தின் ஞானம் ஏற்படுவதைக் குறிக்கிறது.
பகுப்பு
வேதப்பொருள், கர்ம காண்டம், உபாசன காண்டம், மற்றும் ஞான காண்டம் என மூன்று வகைப்படும். இவற்றுள் ஞான காண்டம் தான் 'உபநிஷத்' எனப்படுவது. ஆன்மாவைப் பரம் பொருள் அருகே உய்ப்பது ஆகும். அதாவது வேதத்தின் உட் பொருள் எனக் கொள்ளலாம். இவ்விதம் 108 உபநிஷத்துக்கள் இருப்பதாக முக்திகா உபநிடதத்தில் இராமன் அனுமனுக்குச் சொல்கிறார். அவற்றில் பத்து மிக முக்கியமானவை என்பது வழக்கு. மிகப் பழமையானவையும் கூட. காலடி தந்த ஆதிசங்கரர், ஸ்ரீபெரும்புத்தூர் வள்ளல் இராமானுஜர், உடுப்பி மத்வர், நீலகண்ட சிவாசாரியார் ஆகிய நான்கு சமயாசாரியர்களும் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சித்தாந்தம் என்னும் கொள்கைகளையொட்டி மேற்கூறிய பத்து முக்கிய உபநிஷத்துக்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளனர். உபநிடத பிரம்மேந்திரர் (18வது நூற்றாண்டு) என்று பெயருள்ள துறவி 108 உபநிஷத்துக்களுக்கும் உரை எழுதியுள்ளார். பாரதத்தில் தோன்றிய மெய்யியல் பெரியோர் ஒவ்வொருவரும் உபநிஷத்துக்களில் உள்ள கருத்துக்களைப்பற்றி விரிவாக்கம் தரவோ, ஒரு சில உபநிஷத்துக்களுக்காவது உரையோ விளக்கமோ எழுதவோ தவறியதில்லை.
108 உபநிடதங்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன:
- 10 முக்கிய உபநிடதங்கள். அவையாவன:
- ஈசா வாஸ்ய உபநிடதம் (சுக்ல யசூர்வேதம் - வாஜஸனேய சாகை)
- கேன உபநிடதம் (சாம வேதம் - தலவகார சாகை)
- கடோபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)
- பிரச்ன உபநிடதம் (அதர்வண வேதம்)
- முண்டக உபநிடதம் (அதர்வண வேதம்)
- மாண்டூக்ய உபநிடதம் (அதர்வண வேதம்)
- ஐதரேய உபநிடதம் (ரிக் வேதம் - ஐதரேய சாகை)
- தைத்திரீய உபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)
- பிரகதாரண்யக உபநிடதம் (சுக்லயஜுர் வேதம் - கண்வ சாகை, மாத்யந்தின சாகை)
- சாந்தோக்யம் (சாம வேதம் - கௌதம சாகை)
- 24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள்
- 20 யோக உபநிடதங்கள்
- 17 சன்னியாச உபநிடதங்கள்
- 14 வைணவ உபநிடதங்கள்
- 14 சைவ உபநிடதங்கள்
- 9 சாக்த உபநிடதங்கள்
இவைகளில்,
- 10 இருக்கு வேதத்தைச் சார்ந்தவை
- 32 கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்தவை
- 19 சுக்ல யசுர்வேதத்தைச் சார்ந்தவை
- 16 சாம வேதத்தைச் சார்ந்தவை
- 31 அதர்வண வேதத்தைச்சார்ந்தவை.
முக்கிய பத்து உபநிடதங்களைத்தவிர, இதர 98 இல்
- சுவேதாசுவதர உபநிடதம்
- கௌசீதகீயம்
- நரசிம்மபூர்வதாபனீயம்
- மகோபநிடதம்
- கலிசந்தரணம்
- கைவல்ய உபநிடதம்
- மைத்ராயணீயம்
ஆகியவையும் முன்னிடத்தில் வைக்கப்பட்டுப் பேசப்படுகின்றன.
உபநிடதங்களின் வகைகள்
இந்த உபநிடதங்கள் 112 வரையும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் இவைகளில் அதிகமானவை பிற்காலங்களில் உபநிடதங்களாக உருவாக்கிக் கொள்ளப்பட்டவையாகவே இருக்கின்றன. இருப்பினும் இவற்றில் கீழ்காணும் பதின்மூன்று உபநிடதங்கள் உண்மையானவை என்று கொள்ளலாம். அவற்றின் காலங்களைக் கொண்டு அவைகளை வகைப்படுத்தலாம்.
- பழங்கால உபநிடதங்கள்
- இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள்
- மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள்
- நான்காம் காலகட்ட உபநிடதங்கள்
பழங்கால உபநிடதங்கள்
பொ.ஊ.மு. 700 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் பழங்கால உபநிடதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை
- ஈசா
- சாந்தோக்யம்
- பிரகதாரண்யகம்
இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள்
பொ.ஊ.மு. 600–500 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த இரண்டு உபநிடதங்கள் இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை
- ஐதரேயம்
- தைத்திரீயம்
மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள்
பொ.ஊ.மு. 500–400 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த ஐந்து உபநிடதங்கள் மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை
- பிரச்னம்
- கேனம்
- கடம்
- முண்டகம்
- மாண்டூக்யம்
நான்காம் காலகட்ட உபநிடதங்கள்
பொ.ஊ.மு. 200–100 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் நான்காம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை
- கவுஷீதகி
- மைத்ரீ
- சுவேதாசுவதரம்
துணை நூல்கள்
- சோ. ந. கந்தசாமி, (2004), இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம்.
- துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்
இவற்றையும் பார்க்கவும்
குறிப்புகள்
- ↑ The shared concepts include rebirth, samsara, karma, meditation, renunciation and moksha.[4]
- ↑ The Upanishadic, Buddhist and Jain renunciation traditions form parallel traditions, which share some common concepts and interests. While Kuru-பாஞ்சாலம், at the central Ganges Plain, formed the center of the early Upanishadic tradition, கோசல நாடு-மகத நாடு at the central Ganges Plain formed the center of the other சமணம் traditions.[5]
சான்றுகள்
- ↑ "Upanishad". Random House Webster's Unabridged Dictionary.
- ↑ 2.0 2.1 Wendy Doniger (1990), Textual Sources for the Study of Hinduism, 1st Edition, University of Chicago Press, ISBN 978-0226618470, pages 2-3; Quote: "The Upanishads supply the basis of later Hindu philosophy; they are widely known and quoted by most well-educated Hindus, and their central ideas have also become a part of the spiritual arsenal of rank-and-file Hindus."
- ↑ Wiman Dissanayake (1993), Self as Body in Asian Theory and Practice (Editors: Thomas P. Kasulis et al), State University of New York Press, ISBN 978-0791410806, page 39; Quote: "The Upanishads form the foundations of Hindu philosophical thought and the central theme of the Upanishads is the identity of Atman and Brahman, or the inner self and the cosmic self.";
Michael McDowell and Nathan Brown (2009), World Religions, Penguin, ISBN 978-1592578467, pages 208-210 - ↑ Olivelle 1998, ப. xx-xxiv.
- ↑ Samuel 2010.
- ↑ Gavin Flood (1996), An Introduction to Hinduism, Cambridge University Press, ISBN 978-0521438780, pp. 35–39
- ↑ A Bhattacharya (2006), Hindu Dharma: Introduction to Scriptures and Theology, ISBN 978-0595384556, pp. 8–14; George M. Williams (2003), Handbook of Hindu Mythology, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், ISBN 978-0195332612, p. 285
- ↑ Jan Gonda (1975), Vedic Literature: (Saṃhitās and Brāhmaṇas), Otto Harrassowitz Verlag, ISBN 978-3447016032
- ↑ Patrick Olivelle (2014), The Early Upanisads, Oxford University Press, ISBN 978-0195352429, page 3; Quote: "Even though theoretically the whole of vedic corpus is accepted as revealed truth [shruti], in reality it is the Upanishads that have continued to influence the life and thought of the various religious traditions that we have come to call Hindu. Upanishads are the scriptures par excellence of Hinduism".
- ↑ Max Müller, The Upanishads, Part 1, Oxford University Press, page LXXXVI footnote 1
மேலும் படிக்கவும்
- Edgerton, Franklin (1965). The Beginnings of Indian Philosophy. Cambridge: Harvard University Press.
- Embree, Ainslie T. (1966). The Hindu Tradition. New York: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-394-71702-3.
- Hume, Robert Ernest. The Thirteen Principal Upanishads. Oxford University Press.
- Johnston, Charles (1898). From the Upanishads. Kshetra Books (Reprinted in 2014). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781495946530.
- Müller, Max, translator, The Upaniṣads, Part I, New York: Dover Publications (1879; Reprinted in 1962), ISBN 0-486-20992-X
- Müller, Max, translator, The Upaniṣads, Part II, New York: Dover Publications (1884; Reprinted in 1962), ISBN 0-486-20993-8
- Radhakrishnan, Sarvapalli (1953). The Principal Upanishads. New Delhi: HarperCollins Publishers India (Reprinted in 1994). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7223-124-5.
வெளி இணைப்புகள்
- The Upanishads translated into English by Swami Paramananda
- Complete set of 108 Upanishads, Manuscripts with the commentary of Brahma-Yogin, Adyar Library
- Upanishads, Sanskrit documents in various formats
- The Upaniṣads article in the Internet Encyclopedia of Philosophy
- The Theory of 'Soul' in the Upanishads, T. W. Rhys Davids (1899)
- Spinozistic Substance and Upanishadic Self: A Comparative Study, M. S. Modak (1931)
- W. B. Yeats and the Upanishads, A. Davenport (1952)
- The Concept of Self in the Upanishads: An Alternative Interpretation, D. C. Mathur (1972)