உதுமாலெவ்வை ஆதம் பாவா
உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
உதுமாலெவ்வை ஆதம் பாவா |
---|---|
பிறந்ததிகதி | ஜூன் 15 1939 |
பிறந்தஇடம் | கல்முனை, சாய்ந்தமருது |
வரலாற்றுச் சுருக்கம்
கிழக்கு மாகாணம், கல்முனையில் சாய்ந்தமருது கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த உதுமாலெவ்வை, சல்ஹா உம்மா தம்பதியினரின் புதல்வரான இவர் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயம், கல்முனை சாகிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பயிற்றப்பட்ட முதலாந்தர ஆசிரியரான இவர் 38 ஆண்டு காலமாக தமிழ்மொழி ஆசானாகப் பணி புரிந்துவிட்டு தற்போது ஓய்வுபெற்றுள்ளார். இவரின் மனைவி ஜென்னதுல் நயீமா, பிள்ளைகள்: முஹம்மது நயீம், முஹம்மது அஸீம், முஹம்மது அஸாம், ரயிஸாஹஸ்மத், சிபானா சிறீன், சில்மியத்துல் சிறீன்.
இலக்கியப் பங்களிப்பு
இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும், 48 உருவகக் கதைகளையும், 55 கவிதைகளையும், நூற்றுக்கு மேற்பட்ட பல்வேறுதுறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் படைப்புகள் மணிக்குரல், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, சுதந்திரன், மாலைமதி, ஸாஹிரா போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
எழுதிய நூல்கள்
யூ.எல்.ஆதம்பாவா இதுவரை மூன்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
- 'நாங்கள் மனித இனம்' - உருவகக் கதைத்தொகுதி (1991 நவம்பர்)
- 'காணிக்கை - சிறுகதைத்தொகுதி' (1997 ஜனவரி)
- 'பகலில் ஒரு சூரியனின் அஸ்தமனம்' - இரங்கல் கவிதைத் தொகுதி (2003)
பொறுப்பாசிரியர்
கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் தமிழ்மொழி ஆசானாக இவர் பணிபுரிந்த காலத்தில் சுமார் 10 ஆண்டுகள் 'ஸாஹிரா' பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார்.
விருது
1999இல் இலங்கை அரசு 'கலாபூஷணம்' விருது வழங்கி இவரை கௌரவித்தது