உணவுக் கட்டுப்பாடு
உணவுக் கட்டுப்பாடு என்பது பற்றாக்குறை நிலவும் காலத்தில் மக்களின் பொது நலனை முன்னிட்டு உணவுப் பண்டங்களின் உற்பத்தி வரவு, விலை. விநியோகம் ஆகியவைகளைக் குறிப்பிட்ட கொள்கையின்படி அரசாங்கம் கட்டுப்படுத்துவதாம். பற்றாக்குறை பெரும்பாலும் யுத்தகாலத்தில் ஏற்படுகிறது. யுத்தம் நடைபெறும்போது வெளிநாட்டு வாணிகம் தடைப்பட்டு, இறக்குமதி செய்யமுடியாமல் போகலாம். இதனால் விலை உயர்ந்து, ஏழைகள் துன்பத்திற்காளாக நேரிடும். இது நேராமல் தடுப்பதற்காக அரசாங்கம் உணவுப் பொருள் வாணிகத்தைத் தன் கட்டுப்பாட்டின்கிழ்க் கொண்டு வரும். கட்டுப்பாட்டின் நோக்கம் பற்றாக் குறையால் விளையும் தீங்கினைத் தடுத்து, முடிந்தவளவு உணவுப் பண்டங்களைச் சேகரம் செய்து, அவைகளை நியாயமான விலைக்கு மக்களிடையே பகிர்ந்து வழங்குவதாகும். எனவே கட்டுப்பாட்டு முறையில் மூன்று செயல்கள் அடங்கியுள்ளன. இத்தகைய உணவுக் கட்டுப்பாடு முதன் முதலாக முதல் உலகப் போரின் போது ஐரோப்பிய நாடுகளால் கொண்டுவரப்பட்டது. 1916 நவம்பர் 16-ல் உணவுப் பண்டங்களின் இறக்குமதி, உற்பத்தி, விநியோகம், தரம், விலை ஆகியவைகளை ஒழுங்குபடுத்த இங்கிலாந்தில் உணவுக் கட்டுப்பாடு அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் இரண்டாம் உலக யுத்தத்தின் போதுதான் உணவுக் கட்டுப்பாடு, 1943ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொண்டுவரப்பட்டது. முதலில் பம்பாய் இராச்சியமும், தொடர்ந்து மற்ற இராச்சியங்களும் உணவுக் கட்டுப்பாட்டுக் கொள்கையை அமலுக்குக் கொண்டுவந்தன.
இதன் கூறுகள்
இறக்குமதியாலும் உள்நாட்டுக் கொள்முதலாலும் இயன்ற அளவு உணவுப்பொருள்களைச் சேகரம் செய்தலும், விற்பனை விலையை நிருணயம் செய்தலும், கிடைத்த பொருள்களைப் பங்கீட்டு முறையால் மக்களிடையே நியாயமாகப் பங்கிட்டு வழங்கலும் உணவுக்கட்டுபடுத்தல் மற்றும் பங்கீட்டின் முக்கிய கூறுகளாகும்.
இந்தியாவில் இக்கட்டுப்பாடு
இந்தியா விவசாய நாடாக இருந்தபோதிலும் உணவுப் பற்றாக்குறை நீண்டகாலமாக நிலவி வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் 15 முதல் 20 இலட்சம் டன் உணவுப்பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. அவற்றுள் முக்கியமானது அரிசி. இந்தியாவின் அரிசி பற்றாக் குறையைக் களைய பர்மா உதவி வந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது இந்தியாவின் உணவுப்பொருள் இறக்குமதி தடைப்பட்டது. நாட்டின் உணவுப் பொருளாதாரம் சீர்குலைந்தது. உணவுப் பற்றாக்குறையும் விலையேற்றமும் மிகுந்தன. வங்காளம் முதலிய பல இடங்களில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. உணவுப் பிரச்சினை பெரும் பிரச்சினையாயிற்று. மக்களுக்குப் போதுமான உணவுப் பொருள்களை நியாயமான விலைக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தக்க வழி உணவுக் கட்டுப்பாடு ஒன்றே என்பது புலனாயிற்று.
உணவுக் கட்டுப்பாட்டின் நோக்கம், உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் முடிந்த அளவிற்கு உணவுப் பொருள்களைச் சேர்த்து வைத்தலும், கிடைத்த பொருள்களை மக்களிடையே நியாயமான முறையில் தக்க விலையில் பங்கீடு செய்தலுமாகும். உணவுப் பொருள்கள் இறக்குமதியாலும் உள்நாட்டுக் கொள்முதலாலும் (Procurement) சேர்த்து வைக்கப்பட்டன. அவைகளை மக்களிடையே நியாயமான முறையில் வழங்குவதற்குப் பங்கீட்டு முறை (Rationing) கையாளப்பட்டது. எனவே கொள்முதலும் பங்கீடும் உணவுக் கட்டுப்பாட்டின் இரு அமிசங்களாயின.
நடுவன் அரசாங்கம் இராச்சிய அரசாங்கங்களின் செயல்களை ஒருமுகப்படுத்தியதோடு உணவுப்பொருள் இறக்குமதிக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தது. ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் ஆண்டிற்கு வேண்டிய உணவுப்பொருள்களின் மொத்தத் தேவையும், எவ்வளவு கொள்முதல் செய்யமுடியும் என்பதும் கணக்கிடப்பட்டுப் பற்றாக்குறை அளவிடப்பட்டது. பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு முடிந்த அளவு இறக்குமதி செய்யப்பட்டது. மொத்தமாக வாங்குவதால் ஏற்படும் நன்மையைக் கருதி இறக்குமதிப் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொண்டது.
தொடக்க வரலாறு
மத்திய அரசாங்கம் இராச்சிய அரசாங்கங்களின் செயல்களை ஒருமுகப்படுத்தியதோடு உணவுப்பொருள் இறக்குமதிக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தது. ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் ஆண்டிற்கு வேண்டிய உணவுப்பொருள்களின் மொத்தத் தேவையும், எவ்வளவு கொள்முதல் செய்யமுடியும் என்பதும் கணக்கிடப்பட்டுப் பற்றாக்குறை அளவிடப்பட்டது. பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு முடிந்த அளவு இறக்குமதி செய்யப்பட்டது. மொத்தமாக வாங்குவதால் ஏற்படும் நன்மையைக் கருதி இறக்குமதிப் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொண்டது. தனி வணிகர்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை. அரிசி, கோதுமை, தினைவகைகள், வாற்கோதுமை (பார்லி), சோளம் ஆகியவைகள் இறக்குமதி செய்யப்பட்டன. கோதுமையும் அரிசியும் மிகுதியாக இறக்குமதி செய்யப்பட்டன. 1943-ல் 3 இலட்சம் டன் உணவுப்பொ௫ள்களும், 1946லிருந்து 1948 வரையில் சராசரி ஆண்டிற்கு 25 இலட்சம் டன்னும், 1950-ல் 21 இலட்சம் டன்னும், 1951 -ல் 47 இலட்சம் டன்னும், 1952-ல் 39 இலட்சம் டன்னும், 1953-ல் 20 இலட்சம் டன்னும் இறக்குமதியாயின. இறக்குமதியால் வெளிநாட்டு நாணயமாற்றுச் செலவு மிகுந்தது. கோதுமை 1953 ஆம் ஆண்டோடு முடிவுற்ற சர்வதேசக் கோதுமை உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுவந்தது.
நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு வகையான கொள்முதல் முறைகள் அமலில் இருந்தன. இவைகளில் ஏகவுரிமையும் விதிப்பு முறையும் (Levy system) தலையாயவை. ஏகவுரிமை முறைப்படி உணவுப்பொருள்கள் அரசாங்கத்திற்கோ அல்லது அரசாங்கம் நியமிக்கும் கொள்முதல் ஏஜென்டுகளுக்கோ விற்கப்படக் கூடும். விதிப்புமுறையில் இரண்டு வகைகள் இருந்தன. சென்னை இராச்சியம் முதலிய தென் இராச்சியங்களில் ஒவ்வொரு விவசாயியும் அரசாங்கக் கொள்முதலுக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பது விதிக்கப்பட்டுக் கொள்முதல் செய்யப்பட்டது. மேற்கு வங்காளத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் உணவுப்பொருள்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசாங்கத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்று ஏற்பாடு இருந்தது. கொள்முதல் விலை அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டது. கொள்முதல் முறை அமல் நடத்தப்பட்டதில் பல தீங்குகள் விளைந்தன. ஏழைக் குடியானவர்கள் துன்பத்திற்காளாயினர். பெருங்குடியானவர்கள் கள்ளச்சந்தையில் உயர்ந்த விலைக்குத் தங்கள் விளைபொருள்களை விற்க முனைந்தனர். ஊழல்களும் இலஞ்சமும் மலிந்தன.
இந்திய கால அடைவு
1943-ல் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட உணவுக் கட்டுப்பாடு ( அதாவது கொள்முதலும் பங்கீடும்) 1944 முடிவில் இந்திய நாடு முழுவதும் பரவியது. 1944-ல் 438 நகரங்களில் பங்கிட்டுமுறை அமலில் இருந்தது; 48 கோடி மக்கள் பங்கீட்டு முறையில் உணவுப்பொருள்களைப் பெற்றனர். 1947-ல் பங்கீட்டு முறையின் அமல் உச்சநிலையை அடைந்தது ; 145 கோடி மக்கள் பங்கீட்டு முறையின்கீழ் உணவுப்பொருள்களைப் பெற்றனர். 1947-ஆம் ஆண்டின் முடிவில் உணவுக் கட்டுப்பாடு ரத்துச் செய்யப்பட்டது. கள்ளச்சந்தைக்காரர்கள் கொள்ளை இலாபம் அடைந்தனர். உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்தன. நிலை சீர்குலைந்ததைக் கண்ட அரசாங்கம் 1948 செப்டெம்பரில் மீண்டும் உணவுக் கட்டுப்பாட்டை அமலுக்குக்கொண்டுவந்தது. 1951க்குப்பின் கட்டுப்பாடு படிப்படியாகத் தளர்த்தப்பட்டது. இறுதியாக 1954 ஜூலை 10-ல் கட்டுப்பாடு ரத்துச் செய்யப்பட்டது. முதன்முதல் சென்னை இராச்சியம் துணிவுடன் முன்வந்து கட்டுப்பாட்டை ரத்துச் செய்து மற்ற இராச்சியங்களுக்கும் வழிகாட்டியது. இயற்கையும் ஆதரவு அளித்தது. மழைவளமிகையால் விளைவு பெருகியது. ஐந்தாண்டுத் திட்டம் விளைவுப் பெருக்கத்தை ஊக்குவித்தது. கட்டுப்பாடு ரத்து வெற்றியளித்துள்ளது. இன்று உணவுப் பொருள்களின் விலை குறைந்து விட்டது. வேண்டிய அளவிற்கு உணவுப்பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். உலக முழுவதுமே உணவுப்பொருள்களின் விளைவு மிகுந்துள்ளது . கட்டுப்பாடு ரத்தின் வெற்றியை நிலைநாட்ட அரசாங்கம் தக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ஆங்காங்கு உணவுப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன. திடீரென உணவு நெருக்கடி ஏற்படின் அதை இச்சேமிப்பினால் தவிர்க்க முடியும்.
கொள்முதலன்றி ஒரு மாகணத்திலிருந்து, மற்றோரு மாகணத்திற்கும், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும், உணவுப்பொருள்கள் அரசாங்க ஆணையின்றிக் கொண்டுசெல்லப்படுவது தடுக்கப்பட்டது. இக்கட்டுப்பாடு அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டது. சான்றாக 1952 ஜூனில் சென்னை இராச்சியம் மண்டல முறையைப் பின்பற்றியது. இராச்சியம் 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு தொகுதியிலிருந்து மற்றொன்றுக்கு உணவுப் பொருள்கள் அரசாங்க ஆணையின்றிக் கடத்திச் செல்வது சட்ட விரோதமாக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
- ↑ "Dept of Consumer Affairs - Overview". Dept of Consumer Affairs இம் மூலத்தில் இருந்து 12 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121212183527/http://consumeraffairs.nic.in/consumer/?q=node%2F3. பார்த்த நாள்: 27 அக்டோபர் 2019.
ஆதாரங்கள்
- தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தின் 02 தொகுதியில் இருக்கும், 241 பக்கத்தின் தரவுகளும், இக்கட்டுரையில் பயன்பட்டுள்ளன.