இலங்கையின் வரலாறு
இலங்கையின் வரலாறு 1900 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு பொ.ஊ. 6ம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது.[1][2] எனினும் இதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புகளும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.
தொடக்கத்தில் தமிழர் பண்பாட்டை பின்பற்றி இருந்த இவர்களிடையே மகிந்ததேரரால் பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பெருமைக்குரிய நாகரிகம், அனுராதபுரம் (அரசு பொ.ஊ.மு. 200 இலிருந்து பொ.ஊ. 1000 வரை), பொலன்னறுவை (அரசு பொ.ஊ. 1070 முதல் பொ.ஊ. 1200 வரை), ஆகிய இடங்களில் வளர்ச்சியடைந்தன. பொலன்னறுவையின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் பல்வேறு இராச்சியங்கள் உருவாகின.
இலங்கையின் வடபகுதியின் பண்டைய வரலாறு பற்றி இலங்கை வரலாற்று நூல்களில் அதிக தகவல்கள் இல்லை. எனினும் 14ம் நூற்றாண்டுக்குப் பின்னரே இலங்கையின் வடபகுதியில் இருந்த தமிழர் தனி அரசு பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
16வது நூற்றாண்டில் நாட்டின் சில கடலோரப் பகுதிகள் போர்த்துக்கேய, ஒல்லாந்திய பிரித்தானியப் பேரரசுகளின் கீழ் இயங்கின. அனுராதபுரத்திலிருந்து கண்டி வரை 181 அரசர்களும் அரசிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்டு வந்துள்ளனர். [3] 1815க்குப் பிறகு முழுமையான நாடும் பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சியின் கீழ் வந்தது. இவர்களுக்கு எதிராக ஆயுதப் புரட்சிகள் 1818இலும் 1848இலும் நடத்தப்பட்டன. இறுதியாக 1948இல் விடுதலை பெற்றது.
மத்திய காலம்
போர்த்துக்கீசக் கலபதி டொன் லொரேன்கோ டி அல்மேதா தலைமையில் 1505-இல் புறப்பட்ட கப்பல் புயலில் சிக்கித்தவித்து பின்னர் கொழும்புக் கரையை அடைந்தது. அங்கே முதலில் வணிகத் தளத்தை அமைத்த போர்த்துக்கீசர், பின்னர் அரசியல் உட்பூசல்களைப் பயன்படுத்தி தமது பலத்தை விரிவாக்கிக் கொண்டனர். 1580-இல் போர்த்துக்கீசத் தளபதி கோட்டே மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தைப் பயன்படுத்தி இலங்கையை போர்த்துக்கீச மன்னன் பெயரில் உயில் எழுதிக்கொண்டான். பின்னர் 1597-இல் கோட்டே மன்னன் இறக்க, இலங்கையின் கரையோரம் போர்த்துக்கீச வசப்பட்டது. கண்டி இராசதானியுடன் 1638-இல் செய்யபட்ட ஒப்பந்தத்தின் காரணமாக ஒல்லாந்தர் சிறிது சிறிதாக போர்த்துக்கீசர் வசமிருந்த கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றினர். 1796-இல் ஒல்லாந்தர் பிரித்தானியக் கப்பல்களை திருகோணமலைத் துறைமுகத்தில் தரிக்க இடமளிக்காததால் பிரித்தானியர் முதலில் திருகோணமலையையும் பின்னர் மற்றைய இலங்கைக் கரையோரப் பகுதிகளையும் கைப்பற்றினர். ஒல்லாந்தர் 1801-இல் ஆங்கிலேயருடன் செய்த ஒப்பந்தத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு இலங்கையை தத்தம் செய்தனர். ஆங்கிலேயர் தமிழரசனுக்கும் சிங்களப் பிரதானிகளுக்கும் இடையில் இருந்த பகையைப் பயன்படுத்தி அதுவரை இலங்கையின் மத்திய பகுதியில், போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிகளுக்கு உட்படாது சுதந்திரயரசாயிருந்து வந்த கண்டி இராசதானியையும் 1815-இல் தந்திரத்தால் கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர்.
நவீன காலம்
ஆங்கிலேயரின் 133 வருடகால ஆட்சிக்குப் பின்னர், 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமுக நிலையில் இருந்துவந்த, தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள், சிறிது சிறிதாகச் சீர்கெடத் துவங்கின. இன முரண்பாடுகளின் வெளிப்பாடுகள், அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றம் போன்ற பலதரப்பட்ட துறைகளிலும் காணப்பட்டன. ஐரோப்பிய குடியேற்றவாத காலங்களிலும், அதற்கு முன்னரும், சிங்கள சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்வதாகக் கூறிக்கொண்டு சிங்கள அரசியல்வாதிகளும், இனப்பாகுபாடு, இன ஒழிப்பு போன்ற குற்றச்சாட்டுகளுடன் தமிழ் அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு காழ்ப்புணர்வுகளை வளர்த்துக்கொண்டிருந்தார்கள். 1958ல் ஆரம்பித்து, இனக்கலவரங்கள் அடிக்கடி நிகழத்தொடங்கின. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, சிங்களம் மட்டும் சட்டமும், 1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குடியரசு அரசியல் யாப்பும், பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது தொடர்பில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையும், நிலைமையை மேலும் மோசமாக்கின. 1983க்குப் பின்னர், கடந்த பல வருடங்களாக நடைபெறும் ஆயுதமேந்திய உள்நாட்டுப்போரினால், ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தோ, படுகாயமடைந்தோ, அகதிகளாகியோ, சொத்துக்களை இழந்தோ பாதிக்கப்பட்டுள்ளார்கள். 1987ஆம் வருடத்தில் , இந்த உள்நாட்டுப் போருக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், இலங்கை - இந்திய அரசுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தமொன்றின்படி இந்தியா அமைதிகாக்கும் படையொன்றை (IPKF) இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பியது. முரண்பாடுகளில் சம்பந்தப்பட்ட முக்கிய தரப்புகளில் ஒன்றான தமிழர் தரப்பை நேரடியாகச் சம்பந்தப்படுத்தாத இந்த ஒப்பந்தம், இந்திய அமைதி காக்கும் படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையில் ஏற்பட்ட போருடன், தோல்வியில் முடிந்தது. 2001 ஆம் ஆண்டில், சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நார்வே முன் வந்ததையடுத்து, அந்நாட்டின் அனுசரணையுடன், போர்நிறுத்த ஒப்பந்தமொன்று நடைமுறைக்கு வந்துள்ளதுடன், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. சில காரணங்களால், பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தி வைக்கப் பட்டிருந்தாலும், போர் நிறுத்தமும், சமாதான முயற்சிகளும் இன்னும் நடைமுறையில் உள்ளன.
இலங்கையின் புராதன குடிகள்
இலங்கையின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு பொ.ஊ.மு. 6ம் நூற்றாண்டு அளவில் ஆரியர்களின் வருகைக்கு முன்னர் இலங்கையில் பின்வரும் சுதே மக்கள் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது.
- இயக்கர்
- நாகர்
வாழ்ந்த இடங்கள்
இவர்களுள் இயக்கர் மகியங்கன, லக்கல போன்ற பிரதேசங்களிலும், நாகர் யாழ்ப்பாணத்தில் நாகதீவு, களனி போன்ற பிரதேசங்களிலும் வாழ்ந்துள்ளனர்.
ஆதாரங்கள்
ஆரிய இனத்தவர் இலங்கைக்கு வருவதற்கு முன்பு புராதன மக்கள் இங்கு வாழ்ந்ததற்காக கூறப்படும் ஆதாரங்கள்
- இராமன் - இராவணன் (இராமாயணம்) கதை போன்ற புராதனக் கதைகள்.
- தற்காலத்தின் மத்திய பகுதியில் இலங்கையில் வாழ்ந்த பலாங்கொடை மனிதர்கள் பற்றிய பொல்பொருள் தடயங்கள்.
- தொல்பொருள் அகழ்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரங்களும், எலும்புகளும்.
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்கள்
ஆதிக் குடியேற்றங்கள் பற்றி ஆய்வுகளும், அகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்ட இடங்களாக கூறப்படுபவை:
- பத்தியகம்பளை
- கொனாட்டு என்ற கல்மணை
- கித்துல்கலபெலிகன
- குருவிட்டை
- பொம்மரிப்பு
- உடரஞ்சாமடம்
குடியேற்றங்களை உறுதிப்படுத்தல்
மேற்கோள்கள்
- ↑ Wilh. Geiger. The Trustworthiness of the Mahavamsa. The Indian Historical Quarterly 1930 June;VI(02):228.
- ↑ B. Gunasekara, The Rajavaliya. AES reprint. New Delhi: Asian Educational Services, 1995. p iii ISBN 81-206-1029-6
- ↑ "lanka.info". lanka.info. http://www.lanka.info/Sri_Lanka/ancientKings.jsp.
வெளி இணைப்புகள்
- இலங்கை குறித்த 1200 இணைப்புகள் பரணிடப்பட்டது 2008-09-14 at the வந்தவழி இயந்திரம்
- The Virtual Motherland of Sri Lankans
- Sri Lanka in 1942 – World War II Movie Clip
- Library of Congress Country Study: Sri Lanka
- The Netherlands – Ceylon Heritage
- Colombo in Dutch Times பரணிடப்பட்டது 2006-07-01 at the வந்தவழி இயந்திரம்
- Jacob Haafner. Travels Through The Island of Ceylon in 1783 பரணிடப்பட்டது 2008-01-12 at the வந்தவழி இயந்திரம்
- The Dutch in Ceylon glimpse of their life and times பரணிடப்பட்டது 2007-11-09 at the வந்தவழி இயந்திரம்
- The Journal of the Dutch Burgher Union of Ceylon பரணிடப்பட்டது 2007-12-29 at the வந்தவழி இயந்திரம்
- A Baptism of Fire: The Van Goens Mission to Ceylon and India, 1653–54[தொடர்பிழந்த இணைப்பு]
- 1694 Census in Jaffnapatnam City and Castle
- Dutch and Portuguese Buildings in Sri Lanka பரணிடப்பட்டது 2008-05-09 at the வந்தவழி இயந்திரம்
- Tourist Board of Sri Lanka பரணிடப்பட்டது 2019-05-03 at the வந்தவழி இயந்திரம்
- hWeb – Sri Lanka’s recent history of ethnic conflict originates from its colonial legacy பரணிடப்பட்டது 2007-10-07 at the வந்தவழி இயந்திரம்
- Books on Sri Lanka History[தொடர்பிழந்த இணைப்பு]
- Maritime Heritage in Sri Lanka
- The Mahavamsa History of Sri Lanka The Great Chronicle of Sri Lanka
- Peace and Conflict Timeline (PACT) – interactive timeline of the Sri Lankan conflict பரணிடப்பட்டது 2013-05-23 at the வந்தவழி இயந்திரம்