இலங்கைக் கட்டிடக்கலை

இலங்கைக் கட்டிடக்கலை மிகவும் தொன்மை வாய்ந்தது. 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இது பெரும்பாலும் பௌத்த சமயம் சார்ந்ததாகக் காணப்படுகின்றது. இதனால் இலங்கைக் கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்கள் பெரும்பாலும் பௌத்த வழிபாட்டிடங்கள் தொடர்பானவையாகவே உள்ளன. பௌத்த மதமும் அயல் நாடான இந்தியாவில் தோன்றி அசோகப் பேரரசர் காலத்தில் இலங்கைக்குப் பரவியதாலும், அண்மை அமைவிடம் காரணமாக இலங்கைக்கும், இந்தியாவுக்கும், சிறப்பாகத் தமிழ்நாட்டுக்கும் இடையில், பண்பாட்டுத் தொடர்புகள் இருந்துவந்ததனாலும், தமிழ்நாட்டிலிருந்து காலத்துக்குக் காலம் நிகழ்ந்த படையெடுப்புக்களின் விளைவாகவும் இந்தியக் கட்டிடக்கலையின் தாக்கம் இலங்கைக் கட்டிடக்கலையில் காணப்படுவதை அவதானிக்கலாம். எனினும் பண்டைய இலங்கைக் கட்டிடக்கலை தனித்துவமான பல குணாதிசயங்களைக் கொண்டு விளங்குவதை நாட்டின் பல இடங்களிலும் முழுமையாகவும், சிதைந்தும் காணப்படும் பல வழிபாட்டிடங்கள், அரண்மனைகள், பல வகையான பொதுக்கட்டிடங்கள் என்பவற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடியும். பழங் காலத்தில் கட்டப்பட்ட சைவ சமயக் கோயில்கள் சிலவும் ஆங்காங்கே காணப்படினும் அவை முற்றிலும் திராவிடக் கட்டிடக்கலை வடிவங்களாகவே காணப்படுகின்றன.[1][2][3]

இலங்கையின் பழைய தலைநகரங்களில் ஒன்றான பொலொன்னறுவையில் காணப்படும் வட்டதாகே எனப்பதும் கட்டிடத்தின் அழிபாடுகள்
இலங்கையின் முதல் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பண்டைக்காலத் தாது கோபுரம். மீளமைக்கப்பட்டது.

ஆரம்பகாலக் கட்டிட வகைகள்

இலங்கையின் வரலாறு கலிங்க இளவரசனான விஜயன் அவனது தோழர்களுடன் இலங்கையில் இறங்கி அரசனாக முடிசூட்டிக்கொண்டதிலிருந்து ஆரம்பமானதாகப் பாளி வரலாற்று நூல்கள் குறிப்பிட்டாலும், நாட்டின் முதலாவது பௌத்த அரசனான தேவாநாம்பியதீசனின் காலத்திலேயே (கி.மு 250 – 210) முக்கியமான கட்டிடக்கலை ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.

தாதுகோபுரங்கள்

பௌத்தக் கட்டிடக்கலை தொடர்பில் இலங்கையில் காணப்படும் மிகப் பழைய கட்டிடவகை தாதுகோபுரங்கள் ஆகும். இது பாளி மொழியில் தூபா எனவும் சிங்கள மொழியில் தாகபா எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவை பல வடிவங்களைக் கொண்டவையாக இருப்பினும் ஏறத்தாளக் கவிழ்த்து வைக்கப்பட்ட அரைக் கோள வடிவம் கொண்டவை எனலாம். சிங்கள வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட மிகத் தொன்மையான தாதுகோபுரம், இலங்கையின் பண்டைய தலை நகரமான அனுராதபுரத்தில் முன்னர் குறிப்பிட்ட தேவாநாம்பியதீசன் காலத்தில் கட்டப்பட்ட தூபாராம தாதுகோபுரமாகும். இந்தத் தாது கோபுரம் திருத்தி அமைக்கப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்ட தாது கோபுரங்கள் பல அனுராதபுரத்திலும், பிற்காலத் தலைநகரான பொலநறுவையிலும், ஏனைய இடங்களிலும் காணப்படுகின்றன. பின்னர் கட்டப்பட்ட தாதுகோபுரங்கள் பாரிய அளவு கொண்டவையாக இருந்தன. அனுராதபுரத்திலுள்ள கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, ருவன்வலிசாய தாதுகோபுரமும், கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த அபயகிரி தாதுகோபுரமும், கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜேதவன தாதுகோபுரமும் உலகின் மிகப்பெரிய திண்மக் கட்டிட அமைப்புக்களின் பட்டியலில் இடம் பெறக்கூடியன.

போதிகர

போதிகர என்பது வெள்ளரசுவீடு எனப் பொருள்படும். புத்த பகவான் அமர்ந்திருந்து ஞானம் பெற்றதாகக் கருதப்படும் புனித வெள்ளரசு மரக் கிளையொன்று அசோகப் பேரரசர் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது. தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் பௌத்த வழிபாட்டிடங்களில் வெள்ளரசு மரங்கள் நடப்பட்டன. இம் மரத்தின் கீழ், புத்தர் இருந்து ஞானம் பெற்ற இருக்கையைக் குறிக்க ஒரு கற்பலகை அமைக்கப் பட்டிருக்கும். பிற்காலத்தில் அங்கே ஒரு புத்தர் சிலையும் அமைக்கப்படுவது வழக்கமாயிற்று. இவை அனைத்துக்கும் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட கட்டிடமே போதிகர

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இலங்கைக்_கட்டிடக்கலை&oldid=28539" இருந்து மீள்விக்கப்பட்டது