இராம. சுந்தரம்

இராம. சுந்தரம் ( 1 ஏப்ரல் 1938- 8 மார்ச் 2021) என்பவர் ஒரு தமிழறிஞர், எழுத்தாளராவார். இவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவராகவும், அனைத்திந்திய அறிவியல் தமிழ் கழகத் தலைவராகவும் பணியாற்றியவராவார்.[1]

வாழ்க்கை

இராம. சுந்தரம் தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம் (இன்றைய சிவகங்கை மாவட்டம் அலவாக்கோட்டையில் 1938 ஏப்ரல் மாதம் முதல் நாளில் பிறந்தார். நாட்டரசன் கோட்டையில் பள்ளிக்கல்வியை பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ் பயின்று முனைவர் வ. அய். சுப்பிரமணியத்திடம் ஆய்வு மாணவராக இருந்து முனைவர் பட்டம் பெற்றார். போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் முதல் தமிழ் விரிவுரையாளராக ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது போலிஷ் மொழியில் புலமை பெற்றார். திருக்குறளை அந்த மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த அந்நாட்டு அறிஞரான கெம்பார்ஸ்கி என்பவருக்கு அதில் உதவிகள் செய்தார்.[2] பின்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், 1981 முதல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும், 1987 முதல் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை பேராசிரியராகவும், 1997 முதல் முதுநிலை பேராசிரியராகவும் பணியாற்றி 1998-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.

மேலும் இவர் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், 35-இக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். பல்வேறு அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர் வயது மூப்பின் காரணமாகத் தஞ்சாவூரில் 2021 மார்ச் எட்டாம் நாள் இறந்தார்.

கல்வித்துறையில் பங்களிப்பு

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை-காமராசர் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பாடத்திட்டக் குழுக்களிலும், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டத் தேர்வாளர் குழுக்களிலும் பங்காற்றியுள்ளார்.

எழுதிய நூல்கள்

  • தமிழ் வளர்க்கும் அறிவியல்[3]
  • சொல் புதிது; சுவை புதிது
  • பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை (இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் சாகித்திய அகதெமி வெளியீடு)[4]
  • தமிழக அறிவியல் வரலாறு
  • அறிவியல் தமிழ் வெளியீடுகள் (நூலடைவு)

பதிப்பாசிரியராக

  • இயற்பியல், வேதியியல், கணிதவியல் கலைச்சொற்கள்[5]
  • பொறியியல் - தொழில்நுட்பவியல் கலைச்சொற்கள்
  • அறிவியல் கலைச்சொல்லகராதி: வேளாண்மையியல், மண்ணறிவியல் (தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு)[6]

மொழிபெயர்ப்புகள்

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இராம._சுந்தரம்&oldid=25878" இருந்து மீள்விக்கப்பட்டது